ADDED : அக் 25, 2024 08:17 AM

பூச்சியை பார்த்தால் பயம். இருள் என்றால் பயம். எதிர்காலத்தை நினைத்தால் பயம். இப்படி எதற்கெடுத்தாலும் சிலர் பயப்படுவார்கள். இவர்களின் பயத்தை போக்கி வாழ்வில் ஒளியைத் தர காத்திருக்கிறார் திருத்தணி நல்லாட்டூர் வீர ஆஞ்சநேயர். தீபாவளியன்று இவரை தரிசிப்பது விசேஷம்.
பதினைந்தாம் நுாற்றாண்டில் விஜயநகரத்தை ஆட்சி செய்தவர் கிருஷ்ணதேவராயர். இவருக்கு வியாசராஜ சுவாமி குருநாதராக இருந்தார். ஒருசமயம் எதிர்பாராத பிரச்னையில் சிக்கினார் கிருஷ்ணதேவராயர். அதற்கு, 'பரிகாரமாக ஆஞ்சநேயரை வேண்டுங்கள். பிரச்னை தீரும்' என்றார் வியாசராஜ சுவாமி. அதன்படி பிரச்னை தீர நாடெங்கும் நுாற்றுக்கணக்கில் ஆஞ்சநேயர் கோயில்களைக் கட்டினார் மன்னர். அதில் ஒன்று இந்தக் கோயில்.
வியாசராஜ சுவாமி சாதுர் மாஸ்ய விரதத்தைக் கடைப்பிடிக்க திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் கைவசம் ஆஞ்சநேயர் சிலை ஒன்று இருந்தது. இப்பகுதியில் ஓடும் குசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, இப்பகுதியில் தங்கினார். அப்போது வீர ஆஞ்சநேயர் சிலையை இங்கு பிரதிஷ்டை செய்தார். கருவறையில் வடக்கு நோக்கியபடி ஆஞ்சநேயர் வலதுகையில் அபய முத்திரை தாங்கியும், இடது கையில் சவுகந்திகா மலர் ஏந்தியபடியும் நின்ற கோலத்தில் இருக்கிறார். இடுப்பில் வாள், பாதத்தில் தண்டை, சலங்கை, மணிக்கட்டில் கங்கணம், தோள்களில் கேயூரம் உள்ளன.
ஞாயிறு அன்று காலை 6:30 - 7:30 மணிக்குள் சுவாமிக்கு வெண்ணெய்க் காப்பு சாத்தினால் பயம் விலகும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் குடிகொள்ளும். விநாயகர், ராமர், லட்சுமணர், சீதாதேவிக்கு சன்னதி உள்ளன. கோயிலில் நுழையும் முன் மைதானத்தில் தியானத்தில் உள்ள பிரமாண்டமான ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.
எப்படி செல்வது : திருத்தணியில் இருந்து வேலஞ்சேரி சாலை வழியாக 15 கி.மீ.,
விசேஷ நாள் : புரட்டாசி சனிக்கிழமை, அமாவாசை, அனுமன் ஜெயந்தி.
நேரம்: காலை 7:00 - 1:00 மணி; மதியம் 3:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 63038 52166, 94447 54510
அருகிலுள்ள கோயில் : சோளிங்கர் யோக நரசிம்மர் 42 கி.மீ., (எதிரி தொல்லை விலக...)
நேரம்: காலை 8:00 - மாலை 6:00 மணி
தொடர்புக்கு: 04172 - 263 515