
'ராகுவைப் போல கொடுப்பாரில்லை; கேதுவைப் போல கெடுப்பாரில்லை' என்பது ஜோதிட பழமொழி. இதை உண்மையாக்கும் விதத்தில் சென்னை குன்றத்துார் திருநாகேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ராகு காலத்தில் வழிபட தோஷம் நீங்கி யோகம் ஏற்படும்.
சிவபக்தரான அருண்மொழிராமதேவர் தான் பிறந்த குலத்தின் பெயரால் 'சேக்கிழார்' எனப்பட்டார். புலமையில் சிறந்த அவரை அனபாயச்சோழன் தலைமை அமைச்சராக நியமித்தார். திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் மீது ஈடுபாடு கொண்ட சேக்கிழார் சென்னை குன்றத்துாரில் நாகேஸ்வரர் என்னும் பெயரில் ஒரு கோயிலை கட்டினார். இத்தலம் 'வடநாகேஸ்வரம்' எனப்படுகிறது.
ராகுவின் அம்சமான நாகேஸ்வரருக்கு தினமும் காலை 6:30, 10:00, மாலை 5:00 மணிக்கு பாலபிஷேகம் நடக்கிறது. நாக தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்கள், ராகுகாலத்தில் அபிஷேகம் செய்து, உளுந்து சாதம் படைத்து வழிபடுகின்றனர். இதை கோயில் மடப்பள்ளியில் மட்டுமே தயாரிக்க வேண்டும். மூலவருக்கு எதிரில் காமாட்சியம்மன் சிங்க வாகனத்துடன் தெற்கு நோக்கி இருக்கிறாள். நினைத்தது நிறைவேற அம்மனுக்கு தை வெள்ளியன்று பன்னீரால் அபிஷேகம் செய்கின்றனர். சித்ராபவுர்ணமியன்று நாகேஸ்வரர், காமாட்சியம்மன் திருக்கல்யாணம் நடக்கும்.
சேக்கிழார் சிவனை தரிசித்தபடி தனி சன்னதியில் இருக்கிறார். வலது கையால் சின்முத்திரை காட்டும் இவர், இடது கையில் ஏடு வைத்திருக்கிறார். மாதம் தோறும் பூசம் நட்சத்திரத்தன்று அபிஷேகம் நடக்கிறது. வைகாசி பூசத்தை முன்னிட்டு 10 நாள் குருபூஜை நடக்கும். சேக்கிழார் பிறந்த இடத்தில் தனிக்கோயிலும் உள்ளது. பூச விழாவின் நான்காம் நாள் சிவனை தரிசிக்க சேக்கிழார் வடநாகேஸ்வரத்திற்கு எழுந்தருள்கிறார்.
சேக்கிழார் பிரதிஷ்டை செய்த நாகேஸ்வரர் சேதம் அடைந்ததால் பக்தர்கள் அதை இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் மூழ்கடித்தனர். புதிதாக சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தனர். பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவன், மீண்டும் பழைய லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். பின் தீர்த்தத்தில் மூழ்கிய லிங்கத்தை எடுத்து பிரதிஷ்டை செய்தனர். புதிய லிங்கம் கருவறைக்கு பின்புறம் வைக்கப்பட்டது. இதை 'அருணாசலேஸ்வரர்' என்கின்றனர்.
கற்பக விநாயகர், காசி விஸ்வநாதர், லட்சுமி, சரஸ்வதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. பரவை நாச்சியாருடன் சுந்தரர், நாக வடிவில் சத்திய நாராயணர், நாகேந்திரர், நாக நாதேஸ்வர் ஆகியோரைத் தரிசிக்கலாம்.
எப்படி செல்வது:
* சென்னை தாம்பரத்தில் இருந்து 12 கி.மீ.,
* பல்லாவரத்தில் இருந்து 8 கி.மீ.,
விசேஷ நாள் : சித்ராபவுர்ணமி 10 நாள் பிரம்மோற்ஸவம், வைகாசி பூசம் சேக்கிழார் குருபூஜை, ஆடிப்பூரம், புரட்டாசியில் நிறைமணிக்காட்சி, தைப்பூசம், மாசி மகம்.
நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 5:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 93828 89430. 044 - 2478 0436
அருகிலுள்ள கோயில் : ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் 20 கி.மீ.,
நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 044 - 2716 2236