ADDED : டிச 19, 2024 03:00 PM

திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் உள்ளது திருச்செந்துறை. இங்கு அருள்புரியும் சந்திரசேகர சுவாமியை வழிபட்டால் தோல் நோய் தீரும். இழந்ததை பெறலாம்.
ராஜராஜ சோழனின் பாட்டனார் பராந்தகச் சோழன் திருச்சி உறையூரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தார். அப்போது காவிரியாற்றின் இரு கரைகளும் வனப்பகுதியாக இருந்ததால் திருடர்களின் தொல்லை அதிகம் இருந்தது.
இவர்களை பிடிக்க பவுர்ணமியன்று படைகளுடன் சென்றார் மன்னர். பலா மரங்கள் நிறைந்த இப்பகுதிக்கு வந்த போது திருடர்கள் இல்லை. மாறாக மான்கள் இருந்ததால் அவற்றை வேட்டையாடினார். அப்போது ஒரு மான் பெரிய பலாமரப்பொந்தில் ஒளிந்தது.
மன்னர் அம்பு எய்த போது குறி தவறி மரப் பொந்தில் பட்டது. பலா மரத்தில் இருந்து ரத்தம் வந்தது. அப்போது அசரீரியாக, 'யாம் சுயம்பு வடிவில் இந்த மரத்தின் அடியில் உள்ளோம். எமக்கு கோயில் கட்டு' என கட்டளையிட்டார் சிவபெருமான். ஆனால் அவரால் கோயில் கட்டமுடியவில்லை.
பின் ஆட்சிக்கு வந்த பூதி ஆதிச்சம்பிடாரி என்னும் பெரியகுந்தவை நாச்சியார் இங்கு கோயில் கட்டினார். பவுர்ணமியன்று அசரீரி கேட்டதால் சுவாமிக்கு சந்திரசேகரர் எனப் பெயர் ஏற்பட்டது. கைகளில் மான், அங்குசம் ஏந்தியபடி மானேந்தியவல்லி அம்மன் என்னும் பெயரில் அருள்கிறாள்.
தொடர்ந்து எட்டு திங்கள் நெய் தீபம் ஏற்றி, சுவாமிக்கு அபிஷேகம் செய்த திருநீறை உடம்பில் பூசினால் தோல்நோய் தீரும். சுவாமி, அம்மன் சன்னதி அருகில் பஞ்சபூத சக்திகளை ஒரு துாணில் அமைத்துள்ளனர். அங்கு கை வைத்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். இங்கு தலவிருட்சம் பலாமரம்.
எப்படி செல்வது: திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 12 கி.மீ.,
விசேஷ நாள்: அமாவாசை, பவுர்ணமி, மகாசிவராத்திரி.
நேரம்: காலை 9:00 - 11:00 மணி; மாலை 5:30 - 7:30 மணி
தொடர்புக்கு: 99408 72022
அருகிலுள்ள கோயில்: உறையூர் வெக்காளி அம்மன் 13 கி.மீ., (திருமணத்தடை விலக...)
நேரம்: காலை 6:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 0431 - 276 1869