
சிக்கல் தீர வழியில்லையே என கலங்கி நிற்பவரையும் கரை சேர்க்க காத்திருக்கிறார் சிவகோரி சிவன். காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தின் வனப்பகுதியில் இருக்கும் இவரை தரிசித்தால் பிரச்னைக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
காஷ்மீரி மொழியில் கோரி என்றால் 'குகை'. கத்ராவில் இருந்து மலையடிவாரம் வரை பஸ்சில் சென்று அங்கிருந்து 3 கி.மீ., துாரம் மலையேறினால் குகைக் கோயிலை அடையலாம். மலைப்பாதையில் ஓய்வு எடுக்கும் வகையில் மண்டபங்கள் உள்ளன. பக்தர்கள் பெரும்பாலும் நடந்து செல்கின்றனர். டோலி அல்லது குதிரை சவாரி வசதியும் உள்ளது.
குகை வடிவ கருவறை நுழையும் இடத்திலும், வெளியேறும் இடத்திலும் உடுக்கையைப் போல அகலமானதாக உள்ளது. பிரளய கால வெள்ளத்தில் உலகம் அழிந்த போது முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்குள்ள சிவலிங்கத்திற்குள் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். மூலவர் மூன்றடி உயர சிவலிங்கமாக காட்சியளிக்கிறார். காவி நிற வஸ்திரம் மட்டுமே இவருக்கு சாத்துகின்றனர். கருவறை மீது கூம்பு வடிவ கோபுரம் உள்ளது. பார்வதி, பஞ்சமுக கணேஷ், கார்த்திகேயன், ராமர், சீதை, ேஷக்நாக் சன்னதிகள் உள்ளன.
சிவலிங்கத்தின் மீது தாரா பாத்திரம் மூலம் தீர்த்தம் விழுகிறது. அடர்ந்த காட்டின் நடுவே கோயில் இருந்தாலும் பக்தர்கள் விரதமிருந்து பாதயாத்திரையாக வருகின்றனர். மாத சிவராத்திரி நாளிலும் விரதமிருந்து தரிசிக்கலாம். சுயம்புவான இவரை காலை 6:00 முதல் 8:00 மணிக்குள் தரிசிப்பது சிறப்பு. சிவகோரி தேவஸ்தான வளர்ச்சிக் குழுவினரால் கோயில், மலைப்பாதை நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறது. கத்ராவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயில் புகழ் மிக்கது. ஏப்ரல், அக்டோபரில் இங்கு நடக்கும் வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரிக்கு வரும் பக்தர்கள் சிவகோரி கோயிலுக்கும் வருகின்றனர்.
எப்படி செல்வது: கத்ராவில் இருந்து 80 கி.மீ.,
விசேஷ நாள்: பசந்த பஞ்சமி, நவராத்திரி, தீபாவளி, சிவராத்திரி.
நேரம்: காலை 7:00 - இரவு 7:00 மணி
தொடர்புக்கு: 94192 14613
அருகிலுள்ள கோயில்: சத்ரா வைஷ்ணவி தேவி 80 கி.மீ., (எதிரியை வெல்ல...)
நேரம்: காலை 7:00 - இரவு 7:00 மணி
தொடர்புக்கு: 01991 - 234 053