
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில் அருள்புரியும் ராமானுஜருக்கு தீபாவளி முதல் தை மாதம் வரை வெந்நீரால் அபிஷேகம் செய்கின்றனர். தீபாவளியை முன்னிட்டு இவரை தரிசிப்போம்.
கைலாயத்தில் உள்ள பூதகணங்கள் சிவபெருமானின் சாபத்திற்கு ஆளாயினர். விமோசனம் பெற மகாவிஷ்ணுவை அவர்கள் சரணடைய, இங்குள்ள 'அனந்த சரஸ்' குளக்கரையில் காட்சியளித்து அருள்புரிந்தார். இதற்கு நன்றிக் கடனாக பூதகணங்கள் இங்கு கோயில் அமைத்தன. இதனால் பூதபுரி எனப்பட்ட இத்தலம், பிற்காலத்தில் ஸ்ரீபெரும்புதுார் எனப்பட்டது. சுவாமிக்கு ஆதிகேசவ பெருமாள் என்பது திருநாமம். தாயார் பெயர் யதிராஜவல்லி.
இங்கு வாழ்ந்த கேசவ சோமையாஜி, காந்திமதி தம்பதிக்கு 1017ல் பிறந்தவர் ராமானுஜர். விசிஷ்டாத்வைதம் என்னும் தத்துவத்தை உபதேசித்தவர் இவர். இவரது அவதார மகிமையால் இக்கோயில் 'நித்ய சொர்க்க வாசல்' தலமாக விளங்குகிறது. எனவே தனி சொர்க்கவாசல் இல்லை. வைகுண்ட ஏகாதசியன்று ஆதிகேசவர், ராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருள்வர். அப்போது சொர்க்கவாசல் திறப்பதைப் போல இங்குள்ள மணிக்கதவை (சன்னதி கதவு) திறப்பர்.
தீபாவளி தொடங்கி தை மாதம் அஸ்தம் நட்சத்திரம் வரை ராமானுஜருக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்கின்றனர். குளிர் காலம் என்பதால் ராமானுஜருக்கு கோட், கம்பளி போர்த்துகின்றனர். உடல் முழுவதும் போர்த்த வெல்வெட் அங்கி, உல்லன் சால்வை, தலை முதல் பாதம் வரை போர்த்த, 'குன்சம்' என்னும் ஆடையும் இங்குள்ளன. மாசி முதல் புரட்டாசி வரையில் கோடை காலத்தில் குளிர்ச்சிப்படுத்த சந்தனக் காப்பும் இடுகின்றனர்.
மன்னர் ஒருவர் தன் மகளின் விருப்பத்திற்காக, கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரம் கோயில் பெருமாள் சிலையை டில்லிக்கு எடுத்துச் சென்றார்.
இதை கேள்விப்பட்ட ராமானுஜர், சிலையை மீட்க டில்லி சென்ற போது சிலை அவரது மடியில் வந்து அமர்ந்தது. 'இதோ...என் செல்லப் பிள்ளை' என ஆனந்தக் கண்ணீர் விட்டார் ராமானுஜர். இதன் அடிப்படையில் பங்குனி பூசத்தன்று ராமானுஜர் மடியில் செல்லப்பிள்ளை அமரும் விழா நடக்கிறது.
எப்படி செல்வது: திருவள்ளூரில் இருந்து 20 கி.மீ.,
விசேஷ நாள்: ராமானுஜ ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மாசி பூரம், பங்குனி உத்திரம்.
நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 044 - 2716 2236
அருகிலுள்ள கோயில் : திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் 20 கி.மீ., (அறுவை சிகிச்சை நலமாக முடிய...)
நேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 97894 19330