sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தலவிருட்சங்கள் - 28

/

தலவிருட்சங்கள் - 28

தலவிருட்சங்கள் - 28

தலவிருட்சங்கள் - 28


ADDED : நவ 24, 2023 04:02 PM

Google News

ADDED : நவ 24, 2023 04:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாணல்காடு திருகண்டீஸ்வரர் -- மாவிலங்கம்

தாமிரபரணி ஆற்றில் தினமும் நீராடி சிவபெருமானை வழிபட்டு வந்தாள் சிவகாமியம்மன். அதையறிந்த அசுரர்கள் அவளைக் கொல்லும் எண்ணத்துடன் ஆற்றில் விஷம் கலந்தனர்.

அசுரர்களின் சதியை அறிந்த சிவபெருமான் விஷம் கலந்த நீரையெல்லாம் தானே குடித்தார். அப்போது சிவகாமி, “எந்த காலத்திலும் தாமிரபரணி நீர் விஷமின்றி காத்தருளுங்கள்” என வேண்டினாள். அதை ஏற்ற சிவபெருமானே தர்ப்பாரண்யம் என்னும் இத்தலத்தில் 'திருகண்டீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன் கழுத்தில் விஷம் அடக்கியபடி இங்கிருக்கிறார்.

இப்பகுதியை கருணாகர பாண்டியன் என்னும் மன்னன் ஆட்சி புரிந்தார். அவரது ஒரே மகள் நிர்வாகத்தில் விருப்பமின்றி சிவன் கோயில் குளக்கரையில் தவம் புரிந்தாள். அவளைக் கொல்ல எண்ணிய எதிரிகள் சிலர், விஷம் கலந்த பிரசாதத்தை உணவாக வழங்கினர். அவளால் வளர்க்கப்பட்ட கிளி ஒன்று அங்கு பறந்து வந்தது. தானே பிரசாதத்தை சாப்பிட்டு உயிர் விட்டது. ஆபத்தில் இருந்து காப்பாற்றிய கிளியின் மீது அவள் இரக்கப்பட்டாள். அதை உயிர்பிக்க வேண்டி சிவனை வழிபட்டாள். அவர் கிளிக்கு உயிர் அளித்ததோடு ஆட்சி நிர்வாகத்தில் ஈடுபடுமாறு அவளுக்கு அறிவுறுத்தினார். அதன்படி அவளும் தந்தையின் ஆட்சிப்பணியில் பங்கேற்றாள்.

விஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திருக்கண்டீஸ்வரரை வழிபடுகின்றனர். தர்ப்பை, நாணல் புற்கள் அதிகம் இருப்பதால் தர்ப்பை வனம், நாணல் காடு என இத்தலம் அழைக்கப்படுகிறது. சனிபகவானுக்கு தனி சன்னதி இருப்பதால் தென்திருநள்ளாறு என்றும் பெயருண்டு.

இந்த ஊர் மக்கள் தனக்கு உணவு தராததால் கோபமுற்ற முனிவர் ஒருவர், 'இனி யாருக்கும் புத்திரப்பேறு கிடைக்காது' எனச் சபித்தார். அதற்கு பரிகாரமாக சந்தான கோபாலகிருஷ்ணரை இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர். குழந்தை இல்லாதவர்கள் இங்கு வழிபடுகின்றனர்.

நோயின்றி வாழவும், விருப்பம் நிறைவேறவும் திருக்கண்டீஸ்வரருக்கு வன்னியிலை, வில்வ மாலை சாத்தியும் வெண்பொங்கல் படைத்தும், சிவகாமி அம்மனுக்கு பிச்சிப்பூ, மல்லிகைப்பூ சாத்தியும், சர்க்கரை பொங்கல் படைத்தும் சந்தான கிருஷ்ணருக்கு சந்தன அபிஷேகம் செய்தும், சனீஸ்வரருக்கு எள் தீபமேற்றி, அச்சு வெல்லம் படைத்தும் வழிபடுகின்றனர்.

கோயிலின் தலவிருட்சம் மாவிலங்கம். கிரேடீவா லிரிஜியோசா (Crateva religiosa) என்னும் தாவரவியல் பெயரும், கெப்பாரேசியே என்னும் குடும்பத்தை சார்ந்ததுமான இம்மரங்களில் கொத்து கொத்தாக வெண்ணிற மலர்கள் பூத்துக் குலுங்கும்.

சித்தர் போகர் பாடிய பாடல்

மாவிலிங்கப் பேர்தனையே வகுக்கக்கேளு

வானோவ ருணச்சேது தித்தசாகம்

கோவிலங் கைக்குமாரகன் சுவேதபுட்பி

குணமாலிச் சாலுமா லிகமுமாகும்

எவிலங்கை யெழும்பியதீச் சுடருமாகு

மேற்றமாம் வன்னிதான் தீபனியாகும்

ஆவிலங்கை மாந்தித்தை யதற்றியாகு

மழகான மாவிலிங்கை யாண்மையாமே.

வருணசேது, பித்தசாகம், சுவேதபுட்பி, குணமாலி, சாருமாலிகம், இலங்கை எழும்பிய தீச்சுடர், வன்னி தீபனி, மாந்தத்தை அகற்றி என்னும் பெயர்களால் மாவிலிங்கம் அழைக்கப்படுவதாக சித்தர் போகர் குறிப்பிடுகிறார்.

சித்தர் அகத்தியர் பாடிய பாடல்

சுரங்கடியின் றோடந் தொலையாத வாதம்

உரம்பெறு விடங்க ளொழியும் - அரமுங்

கருமா வடுவயிலுங் கண்டஞ்கங் கண்ணாய்

ஒருமாயி லிங்குக் குரை.

வாத நோய், கல்லடைப்பை மாவிலங்க மரப்பட்டை போக்கும். இதை அரைத்து பற்றாக இட்டால் அடிபட்டதால் ஏற்படும் வீக்கம் மறையும். கழுத்தை பாதிக்கும் விஷம் தீரும்.

சித்தர் தேரையர் பாடிய பாடல்

மிலைக்கொள் மாவிலங்க முஷ்ணந்

துவர்கைப் பாமேழிற் பொற்பாவாய்

துலைக்கு மக்கினி மந்தத்தைக்

கபவா தங்களைத் துரத்து

விலக்கூறுங் கபால சூலை

குன்மவிப் புருதி தீர்க்கும்.

துவர்ப்பு, கசப்பு சுவை கொண்ட மாவிலிங்க இலை பசியை உண்டாக்கும். செரிமானத்தை அதிகப்படுத்தும்.கபம், ரத்த குன்மம் என்னும் அல்சரை குணப்படுத்தும். வியர்வையை பெருக்கும். பட்டை மலச்சிக்கலை போக்கும். பட்டையை கஷாயமிட்டு அருந்தினால் நீரடைப்பு, கல்லடைப்பு, பூப்புத்தடை, மாதவிலக்குத்தடை மறையும்.

எப்படி செல்வது: திருநெல்வேலி- துாத்துக்குடி சாலையில் வல்லநாட்டில் இருந்து 3 கி.மீ.,

நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 63835 72571, 94884 41001

-தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

98421 67567






      Dinamalar
      Follow us