sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தலவிருட்சங்கள் - 29

/

தலவிருட்சங்கள் - 29

தலவிருட்சங்கள் - 29

தலவிருட்சங்கள் - 29


ADDED : டிச 01, 2023 09:11 AM

Google News

ADDED : டிச 01, 2023 09:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வைரவன்பட்டி வயிரவர் கோயில் - ஏறழிஞ்சில்

தானே பெரியவன் என கர்வம் கொண்டார் படைப்புக் கடவுளான பிரம்மா. இதனை நிரூபிக்க காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவை வம்புக்கு இழுத்தார். அதைப் பொறுக்க இயலாத சிவன், உக்கிர வடிவில் பைரவரை ஏவினார். அவரும் பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்தார். பிரம்மாவின் தலையை கொய்த பாவத்தால் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளானார் பைரவர்.

கங்கையில் நீராடினால் பாவம் தீரும் என சிவன் கட்டளையிட்டார். அப்படியே செய்து பாவம் போக்கிய பைரவரை தன் அருகிலேயே வைத்துக் கொண்டார் சிவன்.

ஒருமுறை சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் என்னும் அசுரர்கள் மூவரும் சிவனிடம் வரங்கள் பெற்று தேவர்களை கொடுமைப்படுத்தினர். இதன்பின் பூலோகத்தில் அழிஞ்சல் மரங்கள் நிறைந்த வயிரவன்பட்டி காட்டில் வாழ்ந்தனர். அசுரர்கள் அங்கும் தேடி வர, அழிஞ்சில் மரத்தின் அடியில் இருந்த சுயம்புலிங்கத்தை சரணடைந்தனர். அவர் உக்கிர மூர்த்தியான பைரவரை உதவிக்கு அனுப்பினார். அழிஞ்சில் வனநாயகியான வடிவுடை அம்மனிடம் திரிசூலத்தை பெற்று அசுரர்களின் மீது வீசினார் பைரவர். அசுரர்களைக் கட்டியிழுத்தபடி வந்த திரிசூலம் அவர்களை சிறுசிறு மலைகளாக மாற்றி விட்டு, காட்டில் இருந்த சிவ தீர்த்தத்தில் நீராடி தன் பாவத்தைப் போக்கிய பின் பைரவரின் கையை வந்தடைந்தது. “சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து முருகப்பெருமான் தோன்றி அசுரர்களை அழிப்பார். அதுவரை அழிஞ்சில் வனத்தில் இளைப்பாறுங்கள்'' எனத் தேவர்களிடம் தெரிவித்தார் பைரவர். அந்த வனமே இளையாற்றங்குடி என அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் உள்ள சிவனின் திருநாமம் வளரொளிநாதர். இவர் பிரம்மாவுக்கும், மகாவிஷ்ணுவுக்கும் ஜோதி வடிவில் காட்சியளித்ததால் 'வளரொளிநாதர்' எனப்படுகிறார்.

அழிஞ்சில் வனத்தில் சிவபெருமானுக்கும், அம்பிகைக்கும் நடுவில் குடிகொண்ட உக்கிர பைரவரே, வயிரவராக வணங்கப்படுகிறார். தேவர்கள் ஒளிந்து கொள்ள ஏறிய மரமே வைரவன் சுவாமி கோயில் தலவிருட்சம் ஏறழிஞ்சில். அலஞ்சியம் சால்விபோலியம் (Alangiumsalvifolium) என்ற தாவரவியல் பெயர் கொண்டதும், கோர்னேசியே குடும்பத்தைச் சார்ந்ததுமான இது சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.

சித்தர் போகர் பாடிய பாடல்

அழிஞ்சிலென்ற பேரினுட ஆண்மைகேளு

ஆதியா மங்கோலந் தெரிசனியாகும்

பொழிஞ்சலென்ற போகுனல்வித் துாணியாகும்

புகழான சீவினி யிந்திரசாலி

கொழிஞ்சிலென்ற கோலினிற நிஷ்டோவாகுங்

கூரான தீர்க்கமூ லகமுமாகும்

பிழிஞ்சிலென்ற பித்தசத்தாம் பிரபலமாகும்

பேசியதோர் அழிஞ்சிலுடப் பேருமாமே.

ஆதி, அங்கோலம், திரிசனி, அனல் வித்தோனி, சீவினி, இந்திரசாலி, கோழிநிரநிஷ்டு, தீர்க்கமூலம், பித்தசத்து, பிரபலம் என அழிஞ்சில் மரத்திற்கு பல பெயர்கள் இருப்பதாக போகர் குறிப்பிடுகிறார்.

சித்தர் அகத்தியர் பாடிய பாடல்

அங்கோல விந்தை யயின்றான்முன்

போலவினை

யங்கோல வித்தை யடங்குமே - யங்கோல

முண்டா மரைவாசி யுட்பலமே லாகியதை

யுண்டா மரைவாசி யுள்.

அழிஞ்சில் மரக்கொட்டையை மிளகுடன் சேர்த்து சாப்பிட உடல் பலம் பெறும். நோய்கள் நீங்கும்.

அங்கோல வேருமே லாகவே யுண்டிடக்

கங்கலும் பூரக் கடிமுதலகலுமே

விஷக்கடியால் உண்டாகும் அரிப்பு, தோல் தடிப்பு மறைய அழிஞ்சில் வேர் பட்டையை வெள்ளாட்டு பாலில் ஊற வைத்து, உலர்த்தி, பொடித்து கொடுக்க வேண்டும். இதை கஷாயம் செய்தோ அல்லது ஊற வைத்த நீரை குடித்தாலோ விஷக்கடியால் தோன்றும் தோல் நோய்கள், வயிற்றுப் புழுக்கள் நீங்கும். தோல் அழுகல் நோய்க்கு அழிஞ்சில் தைலத்துடன் நாட்டுச்சர்க்கரை கலந்து சாப்பிடலாம்.

தேரையர் பாடிய பாடல்

அழிஞ்சிலது மாருதத்தை யையத்தைத்

தாழ்த்தும்

ஒழிஞ்சபித் தத்தை யுயர்த்தும் - விழுஞ்சீழாங்

கட்டமெனு நோயகற்றுங் கூறுமருந் தெய்திடல்

திட்ட மெனவறிந்து தேர்

வாதம், கபத்தை குறைக்கும். உடலின் பித்தத்தை அதிகப்படுத்துவதுடன் சீழ் வடியும் புண்களை அழிஞ்சில் குணப்படுத்தும்.

பொல்லா விஷக்கடியும் போராடும் பேதிவகை

செல்லாக் கிரந்திரணம் சேர்நோய்க -

ளெல்லாமும்

அங்கோலங் காணில் அரந்தைசெய்

நோய்களெல்லாம்

பொங்கோல மிட்டோடிப் போம்.

விஷக்கடி, பேதி, தோல் நோய்கள் அழிஞ்சில் விதையால் குணமாகும்.

நிகருமிடை மெல்லியலே யித்தரையில்

அழிஞ்சில் வித்தனாற் சாறுபல -

மென்னவெனில்

மறையு மஞ்சனமு மாகும் சனவசியம்

அது செய்திடவே நன்று.

அழிஞ்சில் விதையை முறைப்படி சாப்பிட பார்வை தெளிவடையும். அஷ்டமா சித்தி உண்டாகும்.

தன்வந்திரி சித்தர் பாடிய பாடல்

அங்கோல வளத்தை யாயின் அருங்கடு

ஸ்நிக்தம் தீக்ஷணம்

மங்காத வுஷ்ண வீர்யம் வளர்கடு விபாக மாகும்

சிங்காத வாத நோயும் செறியெலி நாய்வி டங்கள்

தங்காத பூத சேஷ்டை தகுதொண்டை வலியுந் தீரும்.

காரம், உஷ்ணம் உடைய அழிஞ்சில் விதையால் தொண்டைவலி, விலங்கு கடியால் ஏற்படும் விஷம் நீங்கும்.

வலிமையே யன்றிப் புஷ்டி வளர்விரே சனமு மாக்கும்

நலிவுறும் வாத பித்தம் நவில்கூப ரக்த மாதி

சொலவொணா விகாரத் தோடுஞ் சொல்லரு மெரிச்சல் போக்கும்

பொலிவுறும் வித்து வசியம் புகல்மறைப் பிவற்றுக் காகும்.

தோல் நோய்களை நீக்கி உடலுக்கு பலம் தரும். சித்துவேலை செய்வதற்கும் விதை பயன்படுகிறது. தாதுபுஷ்டி தந்து உடலுக்கு வீரியம் தரும்.

எப்படி செல்வது

மதுரையில் இருந்து திருப்புத்துார் வழியாக 77 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மதியம் 3:30 - 8:30 மணி

தொடர்புக்கு: 04557 - 264 237



-தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

98421 67567






      Dinamalar
      Follow us