
திருவாரூர் மாவட்டத்திலுள்ள தேவன்குடியில் குடியிருக்கும் ராமர் கோயிலுக்கு வாங்க... சூரியனை கண்ட பனி போல கண் பிரச்னை மறையும்.
ஒரு சமயம் இந்திரன் முதலான அஷ்ட திக்பாலகர்கள் மற்றும் தேவாதி தேவர்கள் யாவரும் இங்கு வசித்தனர். அவர்களால் வழிபாடு செய்த சிவபெருமானுக்கு இந்திரபுரீஸ்வரர் என்று பெயர். அது தனிக்கோயிலாக விளங்குகிறது. அதனால் இவ்வூருக்கு தேவன்குடி என பெயர் வந்தது. இத்தலத்தில் காஞ்சி மஹாபெரியவர் முகாமிட்டு பல ஆஸ்தீக பணிகளை மேற்கொண்டுள்ளார்.
எங்கெல்லாம் சிவபெருமானுக்கு கோயில் இருக்கிறதோ அங்கெல்லாம் மகாவிஷ்ணுவிற்கும் கோயில் உண்டு என்பது ஆகமவிதி. இங்குள்ள கோரையாற்றின் தென்கரையில் உள்ளது கோதண்ட ராமர் கோயில். கருவறையில் சீதை, ராமர், லட்சுமணர் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். முன்னொரு காலத்தில் பார்வையற்ற ஒருவர் இக்கோயிலை சுற்றி வந்து கண் ஒளி பெற்றார். அதனால் அவருக்கு கண்கொடுத்த ராமர் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
இக்கோயிலில் ஒலிக்கப்படும் மணி எட்டு திக்கும் கேட்கும். கோயிலுக்கு எதிரே பெண்களால் கட்டப்பட்ட தீர்த்த குளம் உள்ளது. காணும் பொங்கல் அன்று
சுவாமி தரிசனம் செய்தவர்கள் இக்குளக்கரையில் குடும்பத்துடன் சித்ரான்னங்கள் உண்டு மகிழ்வர்.
கருடாழ்வார், அனுமன் ராமாயண மூலிகை ஓவியங்கள் பொலிவிழந்து காணப்படுகிறது. 1909ம் ஆண்டில் காசி தாத்தா என்பவர் உருவாக்கிய பஜனை மண்டலி இன்றும் சிறப்பாக இயங்கி வருகிறது.
ஒவ்வொரு புனர்பூச தினத்தன்று சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறும். ஏகாதசி, புதன், சனிக்கிழமை அன்று விளக்கேற்றி முழு முந்திரி கலந்து புளியோதரை நைவேத்தியம் செய்து வழிபடுவோர்கள் இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவர். பித்ரு தோஷம் நீங்கும். குலம் விருத்தி அடையும். எண்பத்திரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலில் கும்பாபிஷேகத் திருப்பணி நடை பெற்று வருகிறது.
எப்படி செல்வது: நீடாமங்கலத்தில் இருந்து 20 கி.மீ.,
விசேஷ நாள்: ஸ்ரீராம நவமி, வைகுண்ட ஏகாதசி.
நேரம்: காலை 6:00 - 10:00 மணி; மாலை 5:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 94801 73760, 98409 41499
அருகிலுள்ள தலம்: இந்திரபுரீஸ்வரர் கோயில் 1 கி.மீ., (இழந்த பதவி கிடைக்க...)
நேரம்: காலை 6:00 - 10:00 மணி; மாலை 5:00 - 7:00 மணி