/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
லட்சுமி கடாட்சம் தரும் ஆமை தரிசனம்
/
லட்சுமி கடாட்சம் தரும் ஆமை தரிசனம்
ADDED : ஜன 26, 2024 07:34 AM

ஆமையைக் கண்டால் ஆகாது. ஆனால் கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகிலுள்ள காடுமல்லிகார்ஜுன சுவாமி கோயில் குளத்திலுள்ள ஆமைகளைக் கண்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். இங்கு குடிகொண்டிருக்கும் மல்லிகார்ஜுன சுவாமியை திங்களன்று தரிசித்தால் முன்வினை பாவம் தீரும்.
வெற்றிலை வியாபாரி ஒருவர் இப்பகுதியில் தங்கிய போது மூன்று கற்களை சேர்த்து அடுப்பு உருவாக்கி தீ மூட்டினார். சமையல் செய்த போது உணவு ரத்தமாக மாறியது. அதைக் கண்டு அவர் மயங்கிய போது அசரீரி ஒலித்தது. 'சுயம்பு லிங்க வடிவில் பாறையின் மீது குடியிருக்கிறேன். நலமுடன் வாழ என்னை வழிபடு'' என சிவன் தெரிவித்தார். அந்த இடத்தில் பீடம் அமைத்து வழிபடத் தொடங்கினர். சோழ மன்னர்கள் கோயில் எழுப்பினர். கருவறையில் காடுமல்லேஸ்வரர் என்னும் பெயரில் சுயம்புலிங்கமாக சிவன் இருக்கிறார். அருகில் விநாயகர், பிரமராம்பாள், காசி விஸ்வநாதர், மகாவிஷ்ணு சன்னதிகள் உள்ளன.
கன்னட மன்னரான எலமல்லப்பா ஷட்டர் திருப்பணி செய்துள்ளார். மராட்டிய மன்னர் வீரசிவாஜி ஓவியம் பிரகாரத்தில் உள்ளது.
அருணாசலேஸ்வரர், காலபைரவர் சன்னதி பிரகாரத்தில் உள்ளது. குளத்திலுள்ள நந்தியின் வாயில் இருந்து தீர்த்தம் சிவலிங்கத்தின் மீது விழுகிறது. ஆண்டு முழுவதும் குளம் வற்றுவதில்லை. இங்கு வாழும் ஆமைகளை கண்டால் கடன் பிரச்னை தீர்ந்து செல்வம் சேரும். தீர்த்தத்தை தலையில் தெளித்தாலும், குடித்தாலும் பாவம் தீரும். இத்தீர்த்தத்தின் அம்சமாகத் திகழும் கங்கையம்மன் கோயில் அருகில் உள்ளது.
கார்த்திகை மூன்றாம் திங்கள் அன்று கடலைக்காய் விழா நடக்கிறது. தங்கள் வயல்களில் விளைந்த நிலக்கடலையை காணிக்கையாக செலுத்துகின்றனர். அனைத்து தெய்வங்களும் நிலக்கடலை அலங்காரத்தில் காட்சி தருகின்றனர். மகாசிவராத்திரிக்கு மறுநாள் தேர்த்திருவிழா நடக்கும்.
இங்கு தலவிருட்சம் அரசமரம். தினமும் காலையில் மட்டும் பூஜை நடக்கிறது. சிருங்கேரி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் அம்மன் சன்னதியில் உள்ளது.
எப்படி செல்வது: பெங்களூரு சர்பிகே சாலை வழியாக 30 கி.மீ.,
விசேஷ நாள்: கார்த்திகை மூன்றாம் திங்கள், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, சனிப்பிரதோஷம்.
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:30 - 9:00 மணி
தொடர்புக்கு: 98450 75961
அருகிலுள்ள தலம்: கங்கையம்மன் கோயில் (பாவம் தீர...)
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:30 - 9:00 மணி
தொடர்புக்கு: 94483 79260