
திருச்சி திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் - கல் வாழை
சப்தகன்னியரான பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் பார்வதியை வேண்டி தவமிருந்தனர். அவர்களுக்கு வாழை மரம் நிறைந்த ஞீலிவனத்தில் காட்சியளித்த பார்வதி நல்வாழ்வு அளித்தார். அத்தலத்தில் வாழை மரங்களாக தங்கிய அவர்கள், தங்களை வழிபடுவோருக்கு திருமணத்தடை போக்க ஆசி வழங்கினார்.
திருக்கடையூர் தலத்தில் கடமையில் இருந்து தவறிய எமதர்மனைக் காலால் எட்டி உதைத்து சிவபெருமான் சம்ஹாரம் செய்தார். இதன் பின்னர் எமன் இல்லாததால் பூமியில் இறப்பே இல்லாமல் போனது. இதனால் பாரம் தாங்க முடியாமல் வருந்திய பூமாதேவி முறையிடவே, சிவபெருமான் தன் காலடியில் கிடந்த எமனை மீண்டும் திருப்பைஞ்ஞீலியில் எழுப்பி நெறி தவறாமல் பணியாற்ற அறிவுறுத்தினார். குடைவரை சன்னதியான இங்கு சிவனின் திருவடியில் குழந்தையாக எமதர்மன் இருப்பது சிறப்பு. எமனுக்கு சன்னதி இருப்பதால் நவக்கிரகம் இங்கு கிடையாது. ராவணனுக்கு அடிமையாக நவகிரகங்கள் இருந்ததை உணர்த்தும் விதமாக சுவாமி சன்னதிக்கு கீழே 9 படிகள் உள்ளன.
ஒருமுறை சிவனடியாரான திருநாவுக்கரசர் இத்தலத்திற்கு வந்த போது பசியால் வாடினார். அந்தணர் வடிவில் தோன்றிய சிவன் உணவு கொடுத்ததோடு உடன் வந்தார். ஆனால் கோயிலுக்கு அருகில் வந்ததும் அந்தணர் மறைந்தார். வந்தவர் சிவனே என்பதை உணர்ந்த திருநாவுக்கரசர் நெகிழ்ச்சியடைந்தார். 'சோற்றுடைய ஈஸ்வரன்' என்ற பெயரில் அந்தணர் சிவன் தனி சன்னதியில் இருக்கிறார். வசிஷ்டருக்கும், அவருக்கு நடனக் காட்சியளித்த நடராஜருக்கும் எதிர் எதிராக ஓவியங்கள் உள்ளன.
இந்த கோயிலின் தலவிருட்சம் ஞீலி என்னும் கல் வாழை. வாழை வனத்தில் பார்வதி காட்சி தந்த இடத்தில் ஞீலிவனேஸ்வரராக சிவன் இருக்கிறார். நீலகண்டேஸ்வரர், வாழைவனநாதர், சுயதகிரி, வாலிகிரி என்றும் இவருக்கு பெயருண்டு. சப்தகன்னியருக்கு காட்சி தந்த அம்மன் நீலநெடுங்கண்நாயகி, விசாலாட்சி என்றும் அழைக்கப்படுகிறார். திருமணத்தடை உள்ளவர்கள் சப்தகன்னியரை வணங்கி கல் வாழைப் பழத்தை அம்மனுக்கு படைக்கின்றனர். இந்த பழம் உண்பதற்கு ஏற்றதல்ல. சுவாமிக்கு படைக்க மட்டுமே ஏற்றது. காட்டு வாழை என்றும் இதைக் குறிப்பிடுவர்.
என்சிட்டே சூப்பர்பம் என்னும் தாவரவியல் பெயரும். மியுசிசியே என்னும் குடும்பத்தை சார்ந்ததுமான கல் வாழை பழங்கள் வழிபாடு, மருத்துவத்திற்கு பயன்படுகின்றன.
திருஞானசம்பந்தர் பாடிய பாடல்
துாயவன் துாயவெண்நீறு மேனிமேல் பாயவன்
பாயபைஞ்ஞீலி கோயிலா
மேயவன் வேண்புரை தோளி பாகமா ஏயவன்
எனைச் செயுந் தன்மை என்கொலோ
வெண்மையான திருநீற்றை மேனியில் பூசிய திருப்பைஞ்ஞீலியில் வீற்றிருக்கும் துாயவன் என தேவாரப் பாடல் சிவனை போற்றுகிறது.
சித்தர் போகர் பாடிய பாடல்
வாழையுடப் பெயர்தனையே வழுத்தக்கேளு
மகத்தான ரம்பாவா கதலிமோசா
வீழையாம் விருந்தபுட்ப மரபலாவா
மிகையான காஷ்டிவா வாயுதானி
துாழையாஞ் சுகுமரந் தீர்க்கபத்திரந்
துரிதமாம் அஸ்தி விஷாணீகாவாகும்
நாழையாம் ரத்தபித்த ரசனியாகும்
நாட்டியதோர் வாழையுடப் பேருமாமே
ரம்பா, கதலி, மோசாவிளை, விருந்த புட்பம், மரபலா, காஸ்டியுவா, வாயுவுதானி, துாளை, சுகுமரம், தீர்க்க பத்திரம், அஸ்திவிசானிகம், ரத்தபித்தரசளி என்றும் கல் வாழைக்கு பெயர்கள் இருப்பதாக போகர் குறிப்பிடுகிறார்.
வாழை மரத்தில் காட்டுவாழை, அடுக்குவாழை, ரஸ்தாளி, தரு, பொட்டை, செவ்வாழை, நவரை, நாட்டு வாழை, பசு வாழை, பேயன், மலை வாழை, மொந்தன், வெள் வாழை எனப் பலவகை சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அகத்தியர் பாடிய பாடல்
நற்கதலிக் கந்தமனல் நல்குந்தண் டோகுலிற்
சிக்குமயிர் தோல்நஞ்சுந் தீர்த் திடுங்காண் -
தொக்குறுபூ
மேகமொழிக் கும்பிஞ்சால் வெங்கடுப்பே
கும்காயால்
நேகமுழுக் கக்காலாந் தேர்.
வாழைக் கிழங்கு, தண்டு உடல் வெப்பத்தை அதிகரிக்கும். வாழைத்தண்டை அதிகம் சாப்பிட சிறுகுடலில் சிக்கிய எலும்பு துண்டு, அந்நிய பொருட்கள் மலத்துடன் வெளியேறும்.
கருவாங் கதலிப் பூமுத்தங் கமழ்வி
டத்தேர்க் கொழுந்தெங்கின்
னுருவார் பாளை பெருமரத்தோ
லொனிர்மா துளர்பிஞ் சிருகழஞ்சு
தருவார் நீர்வார்த் தெட்டொன்றாய்ச்
சுருக்கிலவம்பி சின் விடயம்
ஒருமாத் திரையாய்க் கொண்டக்கா லுயரதிசார
மொழிந்திடுமே.
வாழைப்பூ பெண்களின் வெள்ளை நோயை போக்கும். வாழைப் பிஞ்சை சாப்பிட மூலக்கடுப்பு நீங்கும். வாழைக்காயை அடிக்கடி சாப்பிட வாய்வு பெருகும். வாழைப்பழம் வயிற்று மந்தத்தை உண்டாக்கும்.
வங்கத்தை யெல்லாம் வளைத்திடலா
லுண்டவரை
யங்கத்தைப் பொன்போ லணைத்திடலாற் - றுங்கி
யுரமிகவிந் தைப்பெருக்கி யுண்மை தரலால்
அரமகளைந் தேடிவென லாம்.
பழத்தால் சோம்பல் அதிகரிக்கும். ஆனால் ஆண்களுக்கு உயிரணுக்கள் பெருகும்.
வாழையின் கனியரை வாதமாய்க் காய்முழு
தாழுமம் மருந்தவ ரக்கினிமூலம்.
வாழைக்காயை விட வாழைப்பிஞ்சை சமைத்து சாப்பிடுவது நல்லது.
மின்னுஞ் சுகபோ கமுமன்னும்
அக்கினி மந்தம் மபலமொடு - திக்கிடுகால்
பாழை யிளைப்புமறும் பன்னுபித்த முஞ்சமனாம்
வாழை யிலைக்குணரு வாய்.
வாழை இலையில் சாப்பிட்டால் தோல் பளபளப்பு உண்டாகும். இளைப்பு வராது. பித்த நோய்கள் விலகும். தீப்புண்களுக்கு வாழையிலையின் மேல்பக்கத்தை இரண்டு நாட்களும் அதற்கு பின்பு அடிப்பக்கத்தை சில நாட்களும் வைத்து கட்ட புண்கள் ஆறும்.
நல்ல மலைவாழை நற்கனியை யுண்டார்க்குச்
சொல்லுமலச்சிக்கலறும் சோபையறும் -
பொல்லாத
மந்த முறுந் தீபனம்போம் வாயினிக்கு
மெல்லார்க்குங்
கந்தமலர்ப் பூங்குழலே காண்.
அதிக இனிப்பு சுவையுடைய மலைப்பழம் மலச்சிக்கலை போக்கும். வயிறு வீக்கம் குறையும்.
தின்றா லுரிசையுறுந் தீராத பித்தமறும்
மன்றாடுந் தீபனமும்மட்டாகும் - நன்றா
மருவாணம் போற்கூந்தல் மங்கைக் கரசே
கருவாழை நற்பழத்தைக் காண்.
காட்டு வாழை என்ற கருவாழை குளிர்ச்சியுடையது. பித்தத்தை தணிக்கும். பசியை கட்டுப்படுத்தும். ஆண்களின் உயிரணுக்களை பெருக்குவதுடன். கதலி மலடால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குழந்தைப்பேறு தரும் கல் வாழை தலவிருட்சமாக இங்குள்ளது.
எப்படி செல்வது: திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 23 கி.மீ.,
நேரம்: காலை 6:30 - 1:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0431 - 290 2654, 256 0011
-அடுத்த வாரம் முற்றும்
ஜெ.ஜெயவெங்கடேஷ்
98421 67567