
உணவும் உணர்வும்
சனாதனம் என்பது வழிபாட்டை மட்டும் சொல்லவில்லை. வாழ்வியல் முறையைச் சொல்கிறது.
மனிதன் நோயின்றி இனிது வாழ வழிகளைத் தருகிறது. நம் முன்னோர் வகுத்த நெறியில் இருந்து விலகி வந்ததன் கேடே இன்று பெருகி நிற்கும் மருத்துவமனைகள். உணவு செரிக்காவிட்டால் விலங்குகள் சாப்பிடுவதில்லை. உடலில் ஏதாவது சிக்கல் என்றால் மூலிகையைத் தேடி உண்டு சரி செய்யும். நாமோ காலை 6:00 மணிக்கு டீக்கடை வடையில் தொடங்கி அதிகாலை 12:00 மணிக்கு பரோட்டா வரை நேரம் காலம் இல்லாமல் சாப்பிடுகிறோம்.
நம் முன்னோர்கள் இரண்டு வேளை மட்டுமே உண்டனர். விவசாயம் செய்பவர்கள் கூட காலை நீராகாரம் குடித்து விட்டு(முதல் நாள் இரவு சோற்றில் ஊற்றிய தண்ணீர்) மதியம் 12:00 மணிக்கே கஞ்சியைக் குடிப்பர். பின்னர் பணியை முடித்து மாலையில் குளித்து சூரியன் மறைவதற்குள் சாப்பிட்டு முடிப்பர். செரிமானத்திற்கும், சூரியனுக்கும் தொடர்புண்டு. சூரியன் மறைந்தால் செரிமான சக்தி குறையும். இரவு உணவு உண்ட பின் குறைந்தது மூன்று மணி நேரம் கழித்தே உறங்க வேண்டும். மேலும் தட்ப வெப்பத்திற்கேற்ப உண்ண வேண்டும்.
தமிழகம் வெப்பம் சார்ந்த பகுதி. அதற்கேற்ப அரிசி உணவைச் சாப்பிட்டோம். மேலைநாடுகளில் குளிர் அதிகம் என்பதால் வெப்ப உணவான கோதுமையைப் பயன்படுத்துகிறார்கள். நாம் அவற்றை உண்டால் உடல் மேலும் வெப்பமடையும். கோதுமையை மைதாவாக மாற்றி அதில் இருந்து பெறப்படும் பேக்கரி அயிட்டங்களால் தான் இன்று இந்தியா சர்க்கரை நோயின் தாய்நாடாக உள்ளது.
அந்தந்த தட்ப வெப்பங்களில் பயிராகும் காய்கறி, பூக்கள் பிற பகுதிகளில் அதே போல செழிப்பாக வளராது. அறிவின் மேம்பாடு எனச் சொல்லி அறிவியலின் துணையுடன் எல்லா இடங்களிலும் எல்லாப் பொருட்களும் கிடைக்கின்றன. அவற்றை ஆராயாமல் உண்டு உடலை நோய்க்கு இடமாக ஆக்கி விட்டோம்.
'நொறுங்கத் தின்றால் நுாறு வயது' என்றும் உணவைக் குடி; நீரை உண் என்றும் தமிழர்கள் சொல்லி வைத்தனர். உணவைத் தரையில் அமர்ந்து உண்பதால் கால் பகுதிகளில் ரத்த ஓட்டம் சீராகி உணவு செரிக்க உதவுவதாக தமிழ் மருத்துவம் சொல்கிறது. வெள்ளைக்காரர்கள் விதைத்த உடல்நலம் பெற உணவு, உணவு செரிமானமாக உண்ணும் முறை. தரையில் அமர்ந்து மெதுவாக வாயினுள் இட்டு கூழாக்கி, உமிழ்நீருடன் கலந்து உண்டால் சர்க்கரை நோய் வராது.
யோகி ஒருவர் தன் நண்பரான அந்நாட்டு மன்னரின் அரண்மனையில் சாப்பிட்டு தனியறையில் ஓய்வெடுத்தார். கண் விழித்த போது அங்கிருந்த முத்துமாலை மீது யோகிக்கு ஆசை ஏற்படவே, திருடி விட்டார். முத்துமாலை காணாமல் போனது குறித்து அரண்மனையில் பரபரப்பு ஏற்பட்டது. திருடியதால் கலக்கமுடன் இருந்த யோகி இரவு முழுவதும் கலக்கமுடன் இருந்தார்.
மறுநாள் அந்த முத்துமாலையை மன்னரிடம் ஒப்படைத்தார். வியந்த மன்னர் அதற்கான காரணம் கேட்ட போது, 'அரண்மனையில் நேற்று உண்ட உணவே காரணம்' என்றார் யோகி. அரண்மனையில் உண்டதால் திருடத் தோன்றியதா என மன்னர் ஆவேசப்பட, ''உணவுப்பொருள் வந்த விதத்தை விசாரியுங்கள்'' என்றார். உண்மை வெளிப்பட்டது. சுங்கத்துறையிடம் பிடிபட்ட திருடன் ஒருவனிடம் பெறப்பட்ட அரிசியை, உரியவர் வாங்காததால் அரண்மனை பண்டக சாலையில் அரிசி சேர்க்கப்பட்டது.
அதில் சமைக்கப்பட்ட உணவைத் துறவி உண்டதும் தெரிந்தது. 'ஹாரமும் ஆகாரமும்' என்ற தலைப்பில் காஞ்சி மஹாபெரியவர் இந்தக் கதையைச் சொல்லி உணவால் உணர்வு மாறுபடும் என்பதால் தர்மவழியில் பொருள் ஈட்டி நல்லெண்ணம் கொண்டவரால் சமைக்கப்பட்டு உண்பது அவசியம் என விளக்குகிறார்.
உணவே நம் உணர்வுக்கு அடிப்படை. முன்னோர்கள் காட்டிய நல்ல வழிகளைப் பின்பற்றி நாமும் உண்ணப் பழகுவோம்.
-தொடரும்
இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்
93617 89870