
பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான சோமநாதர் கோயில் குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் மாவட்டம் பிரபாசப் பட்டணத்தில் உள்ளது. இங்கு சோமநாதர் என்னும் பெயரில் சிவனும், சந்திரபாகா என்னும் பெயரில் அம்மனும் இருக்கின்றனர். இவர்களை தரிசிக்க மனப்பிரச்னை தீரும்.
வெண்மை நிறமும், அழகும் கொண்ட கிரகமான சந்திரனுக்கு 'சோமன்' என பெயருண்டு. இவருக்கும், தட்சனின் மகள்களான 27 பெண்களுக்கும் திருமணம் நடந்தது. அவர்களில் கடைசி மகளான ரோகிணி மீது மட்டும் சந்திரன் அன்பு காட்டினார். மற்ற மனைவியரான 26 பெண்களும் தங்களின் தந்தையான தட்சனிடம் முறையிட்டனர். ஆனாலும் நியாயம் கிடைக்கவில்லை. மருமகன் மீது கோபம் கொண்ட தட்சன், தொழுநோய்க்கு ஆளாகும்படி சந்திரனை சபித்தார். அழகை இழந்தார் சந்திரன். உயிர்கள் எல்லாம் வாடின. தேவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அவிர்ப்பாகம் நின்றது.
இத்தலத்தில் உள்ள பிரபாசத் தீர்த்தம் என்னும் திரிவேணி சங்கமத்தில் நீராடி சிவபூஜை செய்யும்படி சந்திரனுக்கு கட்டளையிட்டார் பிரம்மா. அவரும் ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து சிவனருளால் விமோசனம் பெற்றார். அங்கு ஜோதிர்லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார். அந்த லிங்கமே சோமநாத லிங்கமாகும். இந்நிகழ்வு நடந்த திருத்தலம் சோமநாதபுரம். பார்வதிக்குரிய 51 பீடங்களில் இது பிரபாசா சக்திபீடம்.
இங்கு சலவைக் கல்லால் ஆன சோமநாதர் கோயில் கடற்கரையில் கட்டப்பட்டுள்ளது. பார்வதி, அனுமன், துர்கை, விநாயகர் சன்னதிகள் பிரகாரத்தில் உள்ளன. கருவறை மீது பல கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. முன்வினை பாவம் தீரவும், முக்தி பெறவும் சோமநாதருக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்கின்றனர்.
சந்திரனுக்குரிய கிழமையான திங்கள், திதியான பவுர்ணமியன்று தரிசித்தால் மனநிம்மதி கிடைக்கும்.
எப்படி செல்வது: சென்னையில் இருந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட், அங்கிருந்து NH 27 தேசிய நெடுஞ்சாலை வழியாக 202 கி.மீ.,
விசேஷ நாள்: மகாசிவராத்திரி, பிரதோஷம்
நேரம்: காலை 6:00 - இரவு 9:30 மணி
தொடர்புக்கு: 94262 87659, 94282 14915, 94282 14993
அருகிலுள்ள தலம்: துவாரகா துவாரகாநாத் கோயில் 236 கி.மீ., (விருப்பம் நிறைவேற...)
நேரம் காலை 6:30 - 12:30 மணி; மாலை 5:00 - 9:30 மணி
தொடர்புக்கு: 02892 - 235 109, 234 080