
எட்டெழுத்து மந்திரத்தின் வடிவாகத்திகழும் அஷ்டாங்க விமானத்தின் கீழே மதுரை கூடலழகர் குடி கொண்டிருக்கிறார். இங்குள்ள கருவறை விமானத்தை 12 முறை சுற்றினால் விருப்பம் நிறைவேறும். இத்தலத்திற்கு வந்தாலும், நினைத்தாலும், 'வாழ்க பல்லாண்டு' என வரம் கிடைப்பது நிச்சயம்.
பிரம்மாவின் புத்திரரான சனத்குமாரர், திருமாலை மனித வடிவில் தரிசிக்க எண்ணி பூலோகத்தில் தவமிருந்தார். அவருக்கு அருள்புரிய திருமாலும் தேவியருடன் காட்சியளித்தார். தேவசிற்பி விஸ்வகர்மா மூலம் அத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்து கோயில் கட்டினார் சனத்குமாரர். இவர் மதுரையில் 'கூடலழகர்' என்னும் திருநாமத்துடன் இருக்கிறார்.
எட்டெழுத்து மந்திரமான 'ஓம் நமோ நாராயணாய' வடிவத்தில் இருப்பது அஷ்டாங்க விமானம். இங்கு 125 அடி உயர விமானம் மூன்று நிலையுடன் எட்டு பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. கீழ் தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்தில் தேவியருடன் உள்ளார். முதல் தளத்தில் சூரியநாராயணர் நின்ற நிலையிலும், இரண்டாம் தளத்தில் பாற்கடல் நாதர் பள்ளி கொண்ட நிலையிலும் உள்ளனர். பூவராகர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணர், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர் சிலைகளை விமானத்தில் தரிசிக்கலாம். மதுரவல்லித்தாயார், சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் உள்ளனர்.
திருமாலே பரம்பொருள் என்பதை நிரூபித்தவர் பெரியாழ்வார். இவர் பாடிய 'திருப்பல்லாண்டு' பாடலே அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் பாடப்படுகிறது.
சத்திய விரதன் என்னும் பாண்டிய மன்னர் கூடலழகர் மீது பக்தி கொண்டிருந்தார். வைகையின் துணைநதியான கிருதுமால் நதியில் மன்னர் நீராடிய போது மீன் வடிவில் காட்சியளித்த பெருமாள் உபதேசம் செய்தருளினார். அதற்கு நன்றிக்கடனாக தங்கள் நாட்டின் சின்னமாக மீனை ஏற்றுக் கொண்டார்.
எப்படி செல்வது: மதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகில் கோயில் உள்ளது.
விசேஷ நாள்: கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மாசிமகம், ஸ்ரீராமநவமி, பங்குனி உத்திரம்.
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 0452 - 233 8542
அருகிலுள்ள தலம்: அழகர்கோவில் சுந்தரராஜப்பெருமாள் கோயில் (20 கி.மீ.,) (எம பயம் நீங்க...)
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0452 - 247 0228