108 திவ்ய தேசங்களில் முதல் இரண்டு தலங்கள் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருச்சி உறையூர் கமலவல்லித்தாயார் கோயில். இந்த இரண்டு கோயில்களுக்கும் உற்ஸவராக இருப்பவர் ஸ்ரீரங்கம் பெருமாள் தான். தாமரை பூவினில் அவதரித்தவளான கமலவல்லித் தாயாரைத் தரிசித்தால் விரும்பிய வரம் கிடைக்கும்.
திருச்சி பகுதியை ஆட்சி செய்த நந்தசோழன் குழந்தைப்பேறு இல்லாமல் வருந்தினார். அவருடைய கவலையைப் போக்க ரங்கநாதர் முடிவெடுத்தார். ஒருநாள் நந்தசோழன் வேட்டைக்குச் சென்ற போது குளம் ஒன்றில் தாமரை மலர் மீது பெண் குழந்தை படுத்திருப்பதைக் கண்டார். குழந்தைக்கு 'கமலவல்லி' என பெயரிட்டு வளர்த்தார். கமலம் என்பதற்கு 'தாமரை' என்பது பொருள். அக்குழந்தை பருவ வயதை அடைந்த போது ஒருநாள் தோழியருடன் வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது குதிரையின் மீது சென்ற ரங்கநாதரைக் கண்டு காதல் கொண்டாள். அவரையே கணவராக அடைய வேண்டும் என விரும்பினாள். நந்தசோழனின் கனவில் தோன்றிய ரங்கநாதர், இளவரசியான கமலவல்லியைத் தான் மணக்க விரும்புவதாக தெரிவித்தார். இதன்பின் கமலவல்லியை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மன்னர் அழைத்துச் செல்ல ரங்கநாதருடன் அவள் ஐக்கியமானாள். இதன் பின்னர் உறையூரில் கமலவல்லித்தாயாருக்கு கோயில் கட்டப்பட்டது. பெருமாளின் திருநாமம் அழகிய மணவாளன். பக்தர்களுக்கு மஞ்சள் காப்பு பிரசாதமாக தரப்படுகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் பத்தினியாக கமலவல்லித்தாயார் கருதப்படுவதால் ஸ்ரீரங்கத்தை போல இங்கும் விழா நடக்கிறது. கமலவல்லித்தாயார் அவதரித்த பங்குனி ஆயில்யத்தன்று உறையூருக்கு எழுந்தருளும் இவர் தாயாருடன் மணக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
எப்படி செல்வது: திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து 5 கி.மீ.,
விசேஷ நாள்: நவராத்திரி, கார்த்திகை திருப்பாணாழ்வார் திருவிழா, பங்குனி ஆயில்யம்.
நேரம்: காலை 6:30 -- 1:00 மணி; மாலை 4:00 -- 8:00 மணி
தொடர்புக்கு: 0431-276 2446
அருகிலுள்ள தலம்: திருச்சி தாயுமான சுவாமி கோயில் (5 கி.மீ.,)
நேரம்: காலை 6:00 -- 12:00 மணி; மாலை 4:00 -- 8:30 மணி
தொடர்புக்கு: 0431-270 4621