
உடல்நிலை சரியில்லை என்றால் வாழ்க்கை சுமையாகி விடும். அப்படிப்பட்டவர்களின் கவலையை போக்க காத்திருக்கிறார் கேரள மாநிலம் திருவனந்தபுரம் கரமனை சத்தியவாகீஸ்வரர்.
முன்பு திருவனந்தபுரம் 'அனந்தன் காடு' என அழைக்கப்பட்டது. இங்குள்ள ஆற்றங்கரையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டைசெய்து வழிபட்டு வந்தார் கரமகரிஷி. நாளடைவில் மகரிஷியின் பெயரால் 'கரமனையாறு' என ஆறும் அழைக்கப்பட்டது.
ஒருமுறை மழையின்றி ஆறு வறண்டதால் மக்கள் தவித்தனர். அந்தணர் ஒருவரின் கனவில் சிவன், ' கரமனை சிவலிங்கம் உக்கிரமாக உள்ளது.
இதனருகில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்தில் உள்ள அம்மன் சிலைைய பிரதிஷ்டை செய்யுங்கள். நாடு செழிக்கும்' என்றார். அதன்படி அம்மன் சிலை நிறுவப்பட்டது. சுவாமிக்கு 'சத்திய வாகீஸ்வரர்', அம்மனுக்கு 'கோமதி' என பெயர் சூட்டினர். இந்த அம்மன் சிலை, மீனாட்சியம்மன் கோயிலுக்காக செய்யப்பட்ட முதல் சிலை.
கோமதி அம்மனுக்கு வஸ்திரம் சாத்தி, அரளிப்பூ மாலை அணிவித்தால் தீராத நோய் தீரும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் விலக, சிவனுக்கு ஜலதாரா வழிபாடு செய்கின்றனர். சிவலிங்கத்திற்கு மேலே பாத்திரம் கட்டப்பட்டு அதில் தீர்த்தம் நிரப்பி, சொட்டு சொட்டாக விழச் செய்வது ஜலதாரா.
கணபதி, சுப்பிரமணியர், தர்மசாஸ்தா, நாகர் சன்னதிகள் உள்ளன. யானை கட்டும் இடத்தில் விநாயகர் சிலை உள்ளது. இங்கு மணி அடித்த பின்னரே நடை திறக்கின்றனர்.
எப்படி செல்வது: நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் நெடுஞ்சாலை வழியாக 73 கி.மீ.,
விசேஷ நாள்: அட்சய திரிதியை, தைப்பூசம் 12 நாள் பிரம்மோற்ஸவம், விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி.
நேரம்: அதிகாலை 5:15 - 11:30 மணி; மாலை 5:30 - 8:45 மணி
தொடர்புக்கு: 0471 - 234 5667
அருகிலுள்ள தலம்: திருப்பாதபுரம் மகாதேவர் கோயில் 15 கி.மீ., (கண்நோய் தீர...)
நேரம்: அதிகாலை 5:00 - 10:30 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0471 - 244 3555