
கற்பனை, பயம், குழப்பத்தால் சிரமப்படுபவர்கள் மதுரை உசிலம்பட்டி புத்துார் முருகப்பெருமானை தரிசித்தால் பிரச்னை தீரும்.
நாகாசுரன் என்ற கொள்ளைக்காரன் மக்களை துன்புறுத்தி வந்தான். இப்பகுதியை ஆட்சி செய்த மன்னரால் அவனை அடக்க முடியவில்லை. முருகப்பெருமானிடம் தஞ்சம் அடைந்தார். ஒருநாள் அவன் கொள்ளையடிக்க வந்த போது இளைஞன் வடிவில் தோன்றி கால்களில் வீரதண்டை அணிந்து வாள், கத்தியுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். ' நல்லவனாக மாறு' என எச்சரித்தும் அவன் திருந்தவில்லை.
கருணைக்கடலான அவர் சூரபத்மனைக் கொல்லாமல் மயிலும், சேவலுமாக மாற்றி அருள் செய்தவர் அல்லவா... தன்னை தாக்க வந்த அவனை பிடித்து மன்னரிடம் ஒப்படைத்து விட்டு மறைந்தார்.
உண்மையை உணர்ந்த மன்னர் இங்கு முருகன் கோயிலைக் கட்டினார். இளைஞனாக வந்ததால் சுவாமிக்கு 'குமரன்' என்றும், தலத்திற்கு 'குமார கோயில்' என்றும் பெயர் வந்தது. பாம்பு புற்றுகள் நிறைந்த பகுதி என்பதால் 'புற்றுார்' எனப்பட்டது. பிற்காலத்தில் புத்துாராகி விட்டது.
இடுப்பில் கத்தி, காலில் தண்டை அணிந்தபடி வில்லேந்திய நிலையில் முருகன் முன்பு காட்சியளித்தார். திருமலை நாயக்கரின் காலத்தில் வள்ளி, தெய்வானை சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதோடு முருகனுக்கு வேல் வைக்கப்பட்டது.
பிரகாரத்தில் தாணுமாலய லிங்கம் உள்ளது. அதாவது ஆவுடையார் (பீடம்) இல்லாமல் பாணம் மட்டும் உள்ள இந்த லிங்கத்திற்குள் பிரம்மா, திருமால், சிவன் மூவரும்
உள்ளனர். அகத்திய முனிவருக்கு இங்கு மும்மூர்த்திகள் காட்சி தந்ததால் இவரை 'அகத்திய லிங்கம்' என்கின்றனர். காசி விஸ்வநாதர், விசாலாட்சி, இரட்டை விநாயகர், நாகர் சன்னதிகளும் உள்ளன.
எப்படி செல்வது: மதுரையில் இருந்து 42 கி.மீ.,
விசேஷ நாள்: வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்.
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 5:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 98421 51428, 04552 - 251 428
அருகிலுள்ள தலம்: திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் கோயில் 28 கி.மீ., (திருமணத்தடை அகல...)
நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 4:30 - 8:00 மணி
தொடர்புக்கு: 04543 - 259 311