
பாண்டிய மன்னர்களின் குலதெய்வமான மதுரை மீனாட்சியம்மனுக்கு கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் கோயில் உள்ளது. இங்கும் ஆவணி மூலத்திருவிழா நடக்கிறது.
பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையின் மீது அந்நியர்கள் படையெடுப்பு அடிக்கடி நடந்தது. அதனால் மீனாட்சியம்மன் உற்ஸவர் சிலை, ஆபரணங்களை பாதுகாப்பாக வைக்க ஆரல்வாய்மொழியை தேர்ந்தெடுத்தனர்.
ஆரை, ஆரல் என்பது கோட்டை மதில் சுவரைக் குறிக்கும். இப்பகுதிக்கு அரணாக இருந்த பொதிகை மலைக்கு 'ஆரல்வாய் வழி' என்று பெயர். தற்போது 'ஆரல்வாய் மொழி' எனப்படுகிறது. முன்பு இங்கு பரகண்ட சாஸ்தா சன்னதி இருந்த இடத்தில் மதுரையில் எடுத்து வந்த மீனாட்சி அம்மன் சிலையை பாதுகாத்தனர். தற்போது அங்கு தெற்கு நோக்கிய சன்னதியுடன் கோயில் உருவாக்கப்பட்டது.
இங்கு பங்குனி திருவிழாவின் போது குதிரை மீது சாஸ்தா சுற்றி வரும் 'தம்புரான் விளையாட்டு' நிகழ்ச்சி நடக்கிறது. வாழ்க்கை ஒரு சக்கரம்; அதை தர்மம் இயக்குகிறது என்பதை இது நினைவுபடுத்துகிறது.
முன்மண்டபத் துாணில் ஆவணி மூலத்திருவிழாவை ஏற்படுத்திய திருவிதாங்கூர் மன்னரின் சிலை உள்ளது. கோயிலின் அருகில் தெப்பக்குளம் உள்ளது.
விநாயகர், முருகன், விஸ்வநாதர், தட்சிணாமூர்த்தி, பைரவர், பூதத்தார் சன்னதிகள் உள்ளன. அருகில் முருகன், அவ்வையார் கோயில்கள் உள்ளன.
எப்படி செல்வது: திருநெல்வேலி - நாகர்கோவில் சாலையில் 65 கி.மீ.,
விசேஷ நாள்: சித்திரை திருக்கல்யாணம், ஆவணி மூலத்திருவிழா, பங்குனி உத்திரம்.
நேரம்: அதிகாலை 5:00 - 10:30 மணி; மாலை 5:00 - 8:00 மணி
அருகிலுள்ள தலம்: தோவாளை செக்ககிரி முருகன் கோயில் 4 கி.மீ., (எதிரி பயம் தீர...)
நேரம்: காலை 6:00 - 10:00 மணி; மாலை 5:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 97896 37854