
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுாரில் அங்காளபரமேஸ்வரி என்னும் பெயரில் அம்பிகை குடிகொண்டிருக்கிறாள். அமாவாசையன்று இவளை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.
சிவபெருமானை மணம் புரிந்தாள் தட்சனின் மகளான தாட்சாயணி. பரம்பொருளான சிவனுக்கு மாமனாராகி விட்டதால் தட்சன் கர்வத்துடன் நடந்தான். ஒருமுறை மருமகனான சிவனைக் காண கைலாயம் வந்த தட்சனை தடுத்தார் நந்தீஸ்வரர். இதனால் கோபமடைந்த தட்சன், யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் அதற்கு சிவனை அழைக்கவில்லை. தந்தையின் கர்வத்தை அடக்க தாட்சாயணி அகோர வடிவெடுத்து யாகத்தை அழித்தாள். உக்கிர வடிவத்தில் 'அங்காளி' எனப் பெயர் கொண்டாள். சிவனும் அவளைத் தன் தோளில் சுமந்தபடி ஆக்ரோஷமாக நடனம் ஆடினார்.
அப்போது அங்காளியின் கை துண்டாகி பூலோகத்தில் விழுந்தது. அந்த இடம் தண்டகாரண்யம் என்னும் சக்தி பீடமானது. அதன் ஒரு பகுதியே மேல்மலையனுார் தலமாகும். இங்கு கருவறையில் அம்மன் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறாள். இங்கு வில்வம் தல விருட்சமாக உள்ளது.
பர்வதராஜனின் மகளாக பிறந்த பார்வதிக்கும் சிவனுக்கும் திருமணம் நடந்தது. இருவரும் கைலாயத்தில் இருந்த போது சிவன், பிரம்மா இருவருக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ஒருமுறை சிவனைப் பார்ப்பதற்காக கைலாயம் வந்தார் பிரம்மா.
அப்போது பார்வதி கவனக் குறைவாக ஐந்து தலையுடன் இருந்ததால் பிரம்மாவைத் தவறுதலாகச் சிவன் என எண்ணி காலில் விழுந்தாள். நிமிர்ந்த போது அவர் பிரம்மா என்பதை அறிந்து வருந்தினாள். இதன்பின் பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் இருப்பது கூடாது எனக் கருதி, அவரின் ஒரு தலையைக் கொய்யும்படி சிவனிடம் வேண்டினாள். அதனை ஏற்று பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளி எறிந்தார் சிவன். இதனால் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானார். இந்த தோஷம் தீரவும், கலியுகத்தில் மக்களுக்கு அருள்புரியவும் பார்வதியே புற்று வடிவில் அங்காளம்மனாக மேல்மலையனுாரில் வடக்கு நோக்கி தவமிருக்கத் தொடங்கினாள்.
இதன் பின் திருவண்ணாமலையில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கப் பெற்று வயதான மூதாட்டி கோலத்தில் இத்தலத்தில் தங்கினாள். இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அம்மனுக்கு கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர்.
எப்படி செல்வது : திருவண்ணாமலையில் இருந்து 35 கி.மீ.,
விசேஷ நாள் : ஆடிவெள்ளி, நவராத்திரி, மாசித் தேரோட்டம்.
நேரம்: காலை 7:00 -- 12:00 மணி; மதியம் 2:00 -- 8:00 மணி
அமாவாசையன்று இரவு முழுவதும் திறந்திருக்கும்.
தொடர்புக்கு: 04145 - - 234 229
அருகிலுள்ள கோயில் : திருவண்ணாமலை அண்ணாமலையார் 38 கி.மீ., (சிவபுண்ணியம் சேர...)
நேரம்: அதிகாலை 5:00 -- 12:30 மணி; மதியம் 3:00 -- 9:30 மணி
தொடர்புக்கு: 04175 - 252 438