ADDED : அக் 27, 2023 11:12 AM

தோல் நோயால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த பரிகாரத்தலமாக உள்ளது தஞ்சாவூர் மாவட்டம் திருநறையூரில் உள்ள சித்தநாதேஸ்வரர் கோயில்.
மகரிஷியான மேதாவிக்கு ஒருசமயம் மகாலட்சுமியே தனது மகளாக பிறக்க வேண்டுமென ஆசை எழுந்தது. அதற்காக இத்தலத்திலுள்ள தீர்த்தக் கரையில், வஞ்சுள மரத்தின் அடியில் சிவனை வேண்டி தவமிருந்தார். மகிழ்ந்த சிவபெருமான் அவர் வேண்டிய வரத்தை கொடுத்தருளினார். அதன்படி பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் தடாகத்தின் தாமரை மலரில் மகாலட்சுமி அவதரித்தாள். அவளுக்கு 'வஞ்சுளாதேவி' எனப்பெயரிட்டு வளர்த்த மகரிஷி, பெருமாளுக்கே மணம் முடித்துக் கொடுத்தார். சிவபெருமான் இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
சரியாக பேச்சு வராதவர்கள், குரல் வளம் சிறக்க வேண்டுபவர்கள் சிவன், அம்பாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்கிறார்கள். ஐப்பசி அன்னாபிேஷகம் இங்கு சிறப்பாக நடக்கிறது.
சித்தர்களில் ஒருவரான கோரக்கருக்கு, தேவர்களின் சாபத்தால் தோல் வியாதி உண்டானது. நோய் நீங்க இங்கு சுவாமியை வழிபட்டு பலன் அடைந்தார். சித்தருக்கு அருள்புரிந்ததால் சுவாமி, 'சித்தநாதேஸ்வரர்' என்று பெயர் பெற்றார். சுவாமி கோஷ்டத்தில் சிவவழிபாடு செய்யும் கோரக்கர் சிற்பம் உள்ளது. அருகிலேயே இங்கு தவமிருந்த மேதாவி மகரிஷியும் இருக்கிறார். தோல் வியாதி உள்ளவர்கள் கோரக்கருக்கு பவுர்ணமி, வியாழக்கிழமைகளில் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, உடலில் பூசிக் கொள்கிறார்கள். தாயாரான சவுந்தர்யநாயகிக்கு தை மாத கடைசி வெள்ளியன்று சந்தனக்காப்பு செய்யப்படுகிறது.
இது மகாலட்சுமி அவதரித்த தலம் என்பதால் அவள் குழந்தை வடிவில் காட்சி தருகிறாள். 'மழலை மகாலட்சுமி' என்றழைக்கப்படும் இவளுக்கு பாவாடை, சட்டை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள். வெள்ளிக்கிழமை, பவுர்ணமியில் கோமாதா பூஜை, யாகம் நடக்கிறது. அப்போது 108 தாமரை மலர்களால் இவளை பூஜிக்கிறார்கள்.
அதைப்போல் பெருமாளை திருமணம் செய்து மகாலட்சுமி அருகிலுள்ள நாச்சியார் கோயிலில் அருளுகிறாள். தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் பட்டுப்புடவை, சீயக்காய், எண்ணெய், பொங்கல்பானை, வெல்லம் என இங்கிருந்து பிறந்த வீட்டு சீர் அவளுக்கு கொடுக்கின்றனர்.
இத்தலவிநாயகர் 'ஆண்டவிநாயகர்' என்ற பெயரில் அருள்கிறார். பிரகாரத்தில் மூன்று சண்டிகேஸ்வரர்கள் இருப்பது விசேஷமான அமைப்பு. அருகில் உமையொருபாகன், பிச்சாண்டவர், பிரம்மா ஆகியோரும் இருக்கின்றனர்.
எப்படி செல்வது: கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ.,
விசேஷ நாள்: ஐப்பசி அன்னாபிஷேகம், தீபாவளி மார்கழி திருவாதிரையில் 10 நாள் பிரம்மோற்ஸவம்
நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மாலை 4:30 - 7:00 மணி
தொடர்புக்கு: 0435 - 246 7343; 246 7219
அருகிலுள்ள தலம்: தஞ்சாவூர் திருநறையூர் நம்பி கோயில் 1 கி.மீ., (கடன் பிரச்னை தீர...)
நேரம்: காலை 7:30 - 12:30 மணி; மாலை 4:30 - 9:00 மணி
தொடர்புக்கு: 94435 97388, 0435 - 246 7017