ADDED : மார் 27, 2023 08:45 AM

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் என்றதுமே நினைவிற்கு வருவது ஆண்டாள் கோயில். இந்த ஊர் பல கோயில்களைக் கொண்ட பகுதி. அதில் ஒன்றுதான் குப்பம்மாள் கோயில். இங்கு வந்தால் நல்வாழ்வு அமையும்.
தற்போது கோயில் உள்ள இடம் பல ஆண்டுக்கு முன்பு புளியமரம் நிறைந்த காடாக இருந்தது. ஒருநாள் மாலை நேரத்தில் புளியங்காய்களை பறிக்க இரண்டு சகோதரிகள் வந்தனர். அப்போது ஆடு மேய்த்த ஒருவன், தவறான நோக்கத்தோடு பின்தொடர்ந்தான். இதையறியாமல் புளியங்காய்களை பொறுக்கிக் கொண்டிருந்தனர். மறைவில் பதுங்கியிருந்த அவன், இவர்களை நோக்கி வந்தான். இவனைப் பார்த்தவர்கள் வசமாக சிக்கிக் கொண்டோமே என பயந்தனர். பின் ஒரு பெரிய புளியமரத்தின் முன் மண்டியிட்டு, காப்பாற்றுமாறு கண்ணீர் விட்டனர். அப்போது கடவுளின் அருளால் அம்மரம் இரண்டாக பிளந்தது. உடனே இருவரும் அதில் சென்று ஒளியவே, அந்த தெய்வமரம் மூடிக்கொண்டது.
இதைப்பார்த்தவன், தெய்வ அம்சம் நிறைந்தவர்களை இப்படி செய்து விட்டோமே என வருந்தினான். தன் தவறை உணர்ந்தவன் நாக்கை அறுத்து உயிர் விட்டான். இந்த செய்தியை அறிந்த மக்கள் அங்கு கூடினர். அப்போது அங்கு வந்த சாமியார் ஒருவர், இவர்களை வணங்கினால் நல்வாழ்வு அமையும் என அருள்வாக்கு கூறினார். அன்று முதல் பக்தர்கள் இவர்களை வழிபடுகின்றனர்.
இவர்களை குப்பம்மாள், சீரங்கம்மாள், லாடசன்னாசி என பெயரிட்டு தனித்தனி பீடங்களில் வழிபடுகின்றனர். மஹா சிவராத்திரியன்று மட்டும் உருவம் வைத்து வழிபடுகின்றனர். அன்று இரண்டு பெண் தெய்வங்களும் சாமி வந்து அருள்வாக்கு சொல்வர். ஆண் தெய்வம் உருது மொழியில் அருள்வாக்கு கூறுவார்.
எப்படி செல்வது: ஸ்ரீவில்லிபுத்துார் ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ.,
விசேஷ நாள்: மஹா சிவராத்திரி
நேரம்: காலை 7:00 - 1:00 மணி; மாலை 4:00 - 6:00 மணி
அருகிலுள்ள தலம்: ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசாயி, ஆண்டாள் கோயில் 1 கி.மீ.,
நேரம்: காலை 6:30 - 1:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 04563 - 260 254

