ADDED : ஏப் 25, 2016 01:01 PM

கருவறையில் நரசிம்மர் விடும் மூச்சுக் காற்றால் தீபம் அசைகிறது. இந்த அதிசய நரசிம்மர் நல்கொண்டா மாவட்டம் வாடபல்லியில் அருள்புரிகிறார்.
தல வரலாறு: சிவனின் உத்தரவுபடி அகத்தியர் இமயத்தில் இருந்து தெற்கே வந்த போது, கிருஷ்ணா மற்றும் மூசி நதிகள் இணையும் இடத்தில் தங்கினார். அப்போது வானில் அசரீரி ஒலித்தது. 'அகத்தியரே! நதிகள் சங்கமிக்கும் இந்த இடத்தில் நரசிம்மரின் விக்ரஹம் ஒன்று உள்ளது. அதைப் பிரதிஷ்டை செய்த பிறகு, உங்களின் திருத்தல யாத்திரையைத் தொடருங்கள்'' என்றது. அகத்தியரும் அதை பிரதிஷ்டை செய்தார்.
நாளடைவில் இந்த சிலை புதைந்து விட்டது. ரெட்டி ராசுலு என்பவர் இங்கு ஒரு நகரத்தை உருவாக்க முயன்ற போது நரசிம்மரின் சிலை வெளிப்பட்டது. கி.பி.1377ல் கோவில் கட்டப்பட்டு வழிபாடு தொடங்கியது.
மூச்சில் ஆடும் தீபம்: இங்கு பூஜை செய்த அர்ச்சகர் ஒருவர், கருவறையில் இருந்த நரசிம்மரிடம் இருந்து மூச்சு வெளிப்படுவதை உணர்ந்தார். அதை சோதிக்க மூக்கின் அருகில் ஒரு விளக்கை ஏற்றிப் பிடிக்க, அதன் சுடர் காற்றில் அசைந்தது. அதே நேரத்தில் சுவாமியின் பாதத்தில் ஏற்றிய தீபம் அசையாமல் நேராக எரிந்தது. இப்போதும் இங்கு விளக்குகள் இவ்வாறு அசைந்தும் அசையாமலும் எரியும் அதிசயத்தைக் காண முடிகிறது.
சிறப்பம்சம்: நல்கொண்டா, கிருஷ்ணா, குண்டூர் மாவட்ட மக்கள் இவரை வணங்கிய பிறகே மற்ற கோவில்களுக்குச் செல்வதை ஐதீகமாகக் கொண்டுள்ளனர். ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் சுதை சிற்பமாக காட்சி அளிக்கின்றனர். லட்சுமி தாயார் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறாள். கருடன், அனுமன் வாகனங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளன.
முதல் கோவில் : ஆன்மிக உபன்யாசகர் முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் 1992ல் இக்கோவிலில் யாகம் ஒன்றை நடத்தினார். அதன் பின், இந்த கோவில் மிகவும் வளர்ச்சி அடைந்தது. ஆந்திராவின் பஞ்சநரசிம்ம தலங்களில் இதுவே முதல் கோவிலாகப் போற்றப்படுகிறது. அளவில் சிறியது என்றாலும் உயிரோட்டமுள்ள நரசிம்மரின் தரிசனத்தால் பக்தர்கள் பக்திப் பரவசத்தில் மூழ்குகின்றனர்.
இருப்பிடம்: மட்டபல்லி நரசிம்மர் கோவிலில் இருந்து ஹுசூர் நகர் வழியாக குண்டூர் செல்லும் ரோட்டில் 100 கி.மீ., கடந்தால் மிரியாலக்குடா என்னும் ஊர் வரும். அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ., தூரத்தில் வாடபல்லி.
திறக்கும் நேரம்: காலை 7.00- 11.00 மணி, மாலை 6.00- 7.30 மணி

