/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
மகாபிரதோஷத்திற்கு வாங்க! தலையெழுத்தே மாறுமுங்க!
/
மகாபிரதோஷத்திற்கு வாங்க! தலையெழுத்தே மாறுமுங்க!
ADDED : மார் 17, 2017 01:51 PM

சனி மகாபிரதோஷத்தன்று, தன் பிரதம சீடரான நந்தீஸ்வரரை வணங்கினால், தலையெழுத்தையே மாற்றும் கைலாச நாதர், திருநெல்வேலி மாவட்டம் பிரம்மதேசத்தில் அருள்கிறார்.
தல வரலாறு: பிரம்மஹத்தி தோஷத்தால் (கொலைப்பாவம்) பாதிக்கப்பட்ட பிரம்மாவின் பேரன் உரோமச முனிவர், தோஷம் நீங்க பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டார். இலந்தை மரங்கள் நிறைந்த இப்பகுதிக்கு வந்த போது, சிவன், சுயம்பு லிங்கமாக இருந்ததைக்கண்டார். அங்கு தீர்த்தம் ஒன்றை உருவாக்கி அபிஷேகம் செய்தார். உடனே அவரது தோஷம் நீங்கியது. அந்த லிங்கத்திற்கு கைலாசநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. மன்னர்கள் இங்கு கோவில் எழுப்பினர்.
மாறும் தலையெழுத்து: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நவகைலாய கோவில்கள் உள்ளன. அவற்றுக்கெல்லாம் தலைமையானது 'ஆதிகைலாயம்' எனப்படும் பிரம்மதேசம் ஆகும். உரோமசர், தனது தாத்தா பிரம்மாவின் பெயரை இந்த தலத்துக்கு சூட்டினார். இத்தலத்தில்
உள்ள சிவனை வணங்கினால் காசி, ராமேஸ்வரம் சென்று சிவனை வணங்கிய பலன் கிடைக்கும்.
நம் தலையெழுத்து எப்படியிருந்தாலும், பிரம்மாவின் பெயர் பெற்ற இந்த தலத்தில் கால் வைத்தாலே போதும்...நன்மை நடந்து விடும். இவ்வூருக்கு 'அயனீஸ்வரம்' என்பது புராணப்பெயர். (அயன் - பிரம்மன்; வரம் - தேசம்). நான்கு வேதமும் தெரிந்த அந்தணர்களுக்கு இவ்வூரை ராஜராஜசோழன் தானமாக வழங்கியதால் 'ராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்றும் அழைக்கப்பட்டது. காஞ்சி மடத்தில் தற்போது 69 பீடாதிபதி பதவி வகிக்கிறார். இந்த மடத்தின் இரண்டாவது பீடாதிபதி சர்வக்ஞாத்மேந்திர சரஸ்வதி சுவாமி இவ்வூரில் அவதரித்தவர்.
சூரியத்தலம்: நவக்கிரகங்களில் சூரியத்தலமான இங்கு சூரியபகவான் தனி சன்னிதியில் அமர்ந்துள்ளார். தட்சிணாயண புண்ணிய காலமான ஆடி, உத்ராயண புண்ணிய காலமான தை மாதங்களில் அவர் சுவாமியின் மீது தனது ஒளிக்கதிர்களை பரப்பி அவரை வணங்குவதாக ஐதீகம். ஜாதக ரீதியாக சூரிய தசை, சூரிய புத்தி நடப்பவர்கள் அதனால் ஏற்படும் பாதிப்பு குறைய இந்த சூரியனை வழிபடலாம்.
சிற்பக்கலை: தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு இணையான சிற்பச்சிறப்பு இங்கு உள்ளது. ராஜகோபுரத்தின் நிழல் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் மட்டுமே விழும். சிற்ப வேலைப்பாடுகள் சோழமன்னர் காலத்திலும், மர வேலைப்பாடுகள் சேர மன்னர் காலத்திலும், மண்டப வேலைப்பாடுகள் பாண்டிய மன்னர் காலத்திலும் செய்யப்பட்டவை. பிரகாரத்தில் உள்ள தாமரை வடிவ கல்லின் மீது நின்றால், விமானங்களையும், கோபுரங்களையும் ஒரு சேர தரிசிக்கலாம்.
ஏழு அடி உயரத்தில் சலங்கை, சங்கிலி மற்றும் ஆபரணங்கள் அணிந்த பெரிய நந்தி இங்கு உள்ளது. குழந்தை இல்லாத தம்பதிகள், இவருக்கு இலந்தைப் பழம் படைத்து, நந்தீஸ்வரன், நந்தீஸ்வரி என பெயர் சூட்டுவதாக வேண்டிக் கொள்கின்றனர்.
பிரகாரத்தில் பெரியநாயகி அம்பாள், கோமதி சங்கரர், பாலசுப்பிரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். தூண்களில் அர்த்தநாரீஸ்வரர், வாலி, சிவன், சுக்ரீவன், மன்மதன், ரதி அருட்காட்சி தருகின்றனர்.
இங்கு பிட்சாடனர், கால் மாறி அமர்ந்த வியாக்கிய தட்சிணாமூர்த்தி, ஓம் வடிவ திருவாசிக்குள் நடனமிடும் நடராஜர், நாலாயித்தரம்மன் என்னும் காளி சிலைகள் பிரம்மாண்டமாக உள்ளது. கல்லில் செய்த சங்கிலி, வாழைப்பூ ஆகியவை சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு.
திருவிளக்கு வழிபாடு: இந்த ஆண்டின் முதல் சனி மகாபிரதோஷம் வரும் 25ல் நடக்கிறது. இதையொட்டி லட்சத்து எட்டு திருவிளக்கு ஏற்றப்படுகிறது. 1008 செவ்விளநீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. தாமரை, செண்பகம், மனோரஞ்சிதம் மலர்களால் மட்டும் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படுகிறது
திருவிழா: சித்திரை பிறப்பு, வைகாசி விசாகம், ஆனி, மார்கழியில் நடராஜர் அபிஷேகம், நவராத்திரி, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்.
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 34 கி.மீ., தூரத்தில் அம்பாசமுத்திரம். இங்கிருந்து 3 கி.மீ., தூரத்தில் பிரம்மதேசம். தென்காசிஅம்பாசமுத்திரம் சாலையில் 30 கி.மீ., தூரத்திலுள்ள வாகைக்குளம் விலக்கில் இறங்கி 3 கி.மீ., சென்றாலும் பிரம்மதேசத்தை அடையலாம். அருகில் உள்ள மன்னார் கோவிலில், கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோவிலான ராஜமன்னார் சுவாமி கோவில் உள்ளது.
நேரம்: காலை 7:00 - 9:30 மணி, மாலை 5:30 - 7:30 மணி.
அலைபேசி: 83002 57762

