/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
இறுதித் தேர்வுக்கு முன் இங்கே வாங்க!
/
இறுதித் தேர்வுக்கு முன் இங்கே வாங்க!
ADDED : பிப் 25, 2013 05:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் ஆரணவல்லி அம்பிகையை மாணவர்கள் வழிபட்டால், இறுதித்தேர்வில் தரத்தேர்ச்சி பெற முடியும்.
தல வரலாறு:
தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களையும், அசுரகுரு சுக்ராச்சாரியாரின் தாயாரையும் மகாவிஷ்ணுஅழித்தார். இந்த தோஷம் நீங்க, தடாகத்தின்(குளம்) வடிவில் சிவனை வழிபட்டார். சிவபெருமான் ஒரு தாமரையின் மத்தியில் வேதநாதம் ஒலிக்க எழுந்தருளி, அவரது பாவம் போக்கியருளினார். இதனால் இவர் 'வேதபுரீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். இதன் தமிழாக்கம் 'திருமறைநாதர்'. இங்குள்ள தீர்த்தம் விஷ்ணு தீர்த்தம் என பெயர் பெற்றது.
யாக அம்பிகை:
படைப்புத்தொழில் சிறப்பாக நடக்க, பிரம்மா இங்கு 'ஆரண கேதம்' யாகம் நடத்தினார். அவரது தவத்திற்கு அவரது மனைவியரான சரஸ்வதி, காயத்ரி, சாவித்திரி துணையிருந்தனர். பிரம்மாவிற்கு காட்சி தந்த அம்பிகை, படைப்புத்தொழில் சிறக்க அருளினாள். ஆரண யாகத்தின் காரணமாக காட்சி தந்ததால் இவள் 'ஆரணவல்லி' என்று பெயர் பெற்றாள். இங்கு திருமணக்கோலத்தில் காட்சி தருகிறாள்.
புருஷாமிருகம்:
பாண்டவர்கள், நாரதரின் ஆலோசனைப்படி ராஜசூய யாகம் நடத்த எண்ணினர். யாகத்திற்கு பொருள் வேண்டி பல இடங்களுக்கும் சென்றனர். குபேரபட்டணம் சென்ற பீமன், அவனது நந்தவனத்தில் மனிதன், விலங்கு சேர்ந்த புருஷாமிருகம் இருந்ததைக் கண்டான். அதன் பலமறிந்த பீமன், யாகத்திற்கு உதவி செய்ய வரும்படி அழைத்தான். அந்த மிருகம் அவனிடம், ''பீமா! என் சிந்தையில் எப்போதும் சிவன் இருக்கிறார். நீ முன்னே செல்ல, நான் உன்னை பின்தொடர்ந்து வருவேன். எந்த நிலையிலாவது நான் உன்னை நெருங்கிவிட்டால் என் சிவ தியானத்திற்கு இடையூறாக அமைந்துவிடும். அப்போது நான் உன்னைக் கொன்று விடுவேன். எனவே, என் பிடியில் அகப்படாத அளவு தூரத்தில் நீ போய்க் கொண்டிருக்க வேண்டும்,'' என்று நிபந்தனை விதித்தது. புருஷாமிருகம் தன்னை நெருங்கிய போதெல்லாம் பீமன் அவ்விடத்தில், கிருஷ்ணரால் தனக்கு வழங்கப்பட்ட மந்திரக்கல்லை எறிந்தான். அங்கு தீர்த்தத்துடன் சிவலிங்கம் தோன்றியது.
புருஷாமிருகம், அந்த லிங்கத்தை வழிபட்ட பிறகு பயணத்தைத் தொடர்ந்தது. அதன் பூஜை நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட பீமன், அதன்பிடியில் அகப்படாமல் வேகமாகச் சென்றான். இந்த மிருகம், மகாவிஷ்ணுவின் கட்டளைப்படி திருவாதவூர் கோயிலிலுள்ள விஷ்ணு தீர்த்தத்தின் நடுவில் தங்கியது.
மழை பிரார்த்தனை:
புரட்டாசி 3ம் சனிக்கிழமையன்று புருஷாமிருகத்திற்கு 'கருப்பு' என்னும் மருந்து சாத்தும் வைபவம் நடக்கிறது. இதற்காக பல தேங்காய்களை தீயிலிட்டு எரிப்பர். அதில் கிடைக்கும் கரித்துகளில் நல்லெண்ணெய் சேர்த்து கலவையை தயாரிப்பர். இப்பகுதியில் வறட்சி ஏற்படும்போது, மழை பெய்ய வேண்டி, கருப்பு சாத்தி வழிபடும் வழக்கம் உள்ளது.
மாணிக்கவாசகர் அவதார தலம்:
இவ்வூரில் வசித்த சம்புபாதசிரியரின் மகனாகப்பிறந்த மாணிக்கவாசகர், அரிமர்த்தன பாண்டிய மன்னனின் அமைச்சராகப் பணியாற்றினார். திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோவில்) சிவனிடம் உபதேசம் பெற்று, திருவாசகம் பாடினார். சிவனால் 'மாணிக்கவாசகர்' என பெயர் சூட்டப்பெற்றார். இவருக்கு இங்கு சந்நிதி இருக்கிறது.
கபிலர் சந்நிதி:
கடைச்சங்க புலவர்களில் ஒருவரான கபிலருக்கு இக்கோயிலில் சந்நிதி இருக்கிறது. கையில் சுவடி வைத்திருக்கும் இவரது பெயரில் ஒரு தீர்த்தமும் இருக்கிறது. தினமும் சுவாமிக்கு பூஜை நடக்கும் வேளையில் இவருக்கும் பூஜை உண்டு.
கல்வி வழிபாடு:
பவுர்ணமி, அமாவாசை நாட்களில் பிரம்மா, தன் தேவியருடன் இங்கு அம்பிகையை வழிபடுவதாக ஐதீகம். கல்வியில் சிறப்பிடம் பெற விரும்புபவர்கள் இந்நாளில் அம்பாள் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்கிறார்கள். பள்ளி இறுதித்தேர்வு நெருங்கும் வேளையில் மாணவர்கள் வழிபட்டு வரலாம்.
வாகனம் இல்லாத பைரவர்:
சிவனின் அம்சமான பைரவர், வேதத்தின் வடிவமான நாயுடன்தான் காட்சி தருவார். ஆனால், இங்கு நாய் இல்லை. சூலமும் கிடையாது. இத்தலத்தில் சிவன், வேதத்தின் வடிவில்
அருளுவதால் வாகனம் இல்லை என்கிறார்கள். வாகனங்களை தொலைத்தவர்கள் மீண்டும் கிடைக்க, இவரது சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி வேண்டுகிறார்கள். இங்குள்ள விநாயகர் யானை வாகனத்துடன் காட்சி தருகிறார்.
சனிக்கே நிவர்த்தி:
மாண்டவ்ய மகரிஷி சனியின் சஞ்சாரத்தால் துன்பத் திற்கு ஆளானார். எனவே, அவர் சனீஸ்வரரின் கால் முடமாகும்படி சபித்து விட்டார். சனீஸ்வரர் இதற்கு விமோசனம் வேண்டி சூரியனின் ஆலோசனைப்படி, திருமறைநாதரை வழிபட்டு நிவர்த்தி பெற்றார். இதனால் இத்தல சிவனுக்கு, 'வாதபுரீஸ்வரர்' என்றும் பெயருண்டு. முடக்குவாதம், கை, கால், உடல் வலி உள்ளவர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்து, சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வேண்டுகிறார்கள். இவர் கைகளில் தண்டம், சூலத்துடன், காகத்தின் மீது கால் வைத்த நிலையில் காட்சி தருகிறார்.
இருப்பிடம்:
மதுரை- மேலூர் ரோட்டிலுள்ள ஒத்தக்கடையில் இருந்து பிரியும் ரோட்டில் திருவாதவூர். தூரம் 24 கி.மீ.,
திறக்கும் நேரம்:
காலை 6-12, மாலை 4-இரவு 8.
போன்:
0452-234 4360.