/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
செந்தமிழ் நகரின் சந்தனமாரியம்மன்
/
செந்தமிழ் நகரின் சந்தனமாரியம்மன்
ADDED : மார் 11, 2011 12:45 PM

செந்தமிழ் நகரான மதுரை பரவை சத்தியமூர்த்தி நகரில், சந்தனமாரியம்மன் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தருபவளாக அருள்பாலிக்கிறாள்.
தல வரலாறு: ஜமதக்னி முனிவர் யாகங்கள் நடத்துவதில் வல்லவர். இவருடைய மனைவி ரேணுகா. அம்பிகையின் அம்சமான இவள், ரைவதன் என்பவரின் மகள். ஜமதக்னிக்கு தன்னுவன், அனுவன்,விச்வாவசு, பரசுராமன் என்னும் நான்கு பிள்ளைகள். பரசுராமன் திருமாலின் அவதாரம். ரேணுகா கற்புத்திறன் மிக்கவள். தன் பதிவிரதா தன்மை காரணமாக, ஆற்று மணலில் குடம் செய்யும் வல்லமை பெற்றிருந்தாள். தினமும் நதியில் நீராடி, மணல் எடுத்து குடம் வனைவாள். அதில் தண்ணீர் எடுத்து வந்து யாக பணிகளுக்கு உதவுவாள். ஒருநாள், அவள் வானில் வலம் வந்த கந்தர்வனின் பிம்பத்தை நதி நீரில் கண்டாள். ''இப்படியும் உலகில் ஆணழகர்கள் இருப்பார்களா?' என கணநேரம் மனதில் நினைத்தாள். இதனால், மண்ணில் குடம் செய்யும் விசேஷ சக்தியை இழந்தாள். ஜமதக்னிக்கு ஞானதிருஷ்டியில் நடந்தது தெரிந்து விட்டது. தப்புக்கு தண்டனையாக மனைவியை வெட்டுவது என்று முடிவெடுத்து, பரசுராமரிடம் பணியை ஒப்படைத்தார். 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்பதற்கேற்ப, அன்னையை வெட்டினார் பரசுராமர். ஜமதக்னி அவரைப் பாராட்டி, ''என்ன வரம் வேண்டும்?'' என்றார். தனது தாயை மீண்டும் உயிர் பிழைக்கச் வேண்டும்,'' என்றார். ஜமதக்னியும் அவ்வாறே செய்தார். அவளே, கலியுகத்தில் மாரியம்மனாக எங்கும் வீற்றிருந்து மக்களுக்கு மழை வளம் தரவும், நோயற்ற வாழ்வளிக்கவும் வரம் தந்தார். மழைக்கு 'மாரி' என்ற சொல் உண்டு. 1
தலசிறப்பு: மதுரை, நெல்லை, ராமேஸ்வரம் போன்ற கோயில்களில் இருப்பது போன்று சிவபெருமான் சந்நிதியின் வலது புறம் அம்மன் சந்நிதி உள்ளது. 1960ல் சிறு பீடத்தில் சூலாயுதத்துடன் அம்மன் அருள்பாலித்தாள். தற்போது 21 அடி உயர மூன்று நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது.
சந்தனமாரி பெயர்க்காரணம்: ஜமதக்னி முனிவர் கார்த்தவீரியன் என்பவனால் கொல்லப்பட்டார். ரேணுகா கணவருடன் உடன்கட்டை ஏற தீயில் விழுந்தாள். பெருமழை கொட்டி, சிதை அணைந்தது. தீக்காயங்களுடன் ரேணுகா மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டாள். ஒரு வேப்பமரத்தின் அடியில் ஒதுங்கினாள். தீக்காயத்தின் கடுமையைத் தடுக்க வேப்ப இலைகளை ஆடையாக்கிக் கொண்டாள். சந்தனத்தை பூசினாள். குளிர்ச்சிக்காக கூழைப் பருகினாள். இதன் காரணமாகத் தான், மாரியம்மன் கோயில்களில் இத்தகைய வழிபாடுகள் நடப்பதாகக் கூறுவர். இந்த சம்பவத்துக்குப் பிறகு பார்வதியை எண்ணி தியானத்தில் ஆழ்ந்தாள். தவத்திற்கு இணங்கிய அம்பிகை ரேணுகா முன்தோன்றி, தன் அம்சத்தை அவளுக்கு வணங்கி அருள்புரிந்தாள். சந்தனம் பூசிய உடம்பைக் கொண்டவள் என்பதாலும், பக்தர்களின் துயரத்தீயை சந்தனம் கொண்டு குளிர்விப்பவள் என்பதாலும் 'சந்தனமாரி' என்ற பெயரில் நாடெங்கும் அருள்புரியத் தொடங்கினாள். வெப்பு நோய்களான அம்மை, வயிற்றுவலி போன்றவற்றுக்கு, சந்தன மாரியம்மனை வேண்டும் வழக்கம் இருக்கிறது.
நாகதோஷ வழிபாடு: கோயில் பிரகாரத்தில் ஐந்து தலை நாகதேவிக்கு சந்நிதியுள்ளது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். திருமணத்தடை நீக்கும் இந்த அம்பாள், நம்பிக்கையுடன் தன்னைச் சரணாகதி அடைபவர்களுக்கு, குழந்தை வரம் அளிப்பவளாகவும் இருக்கிறாள்.
திருவிழா: பங்குனியில் பத்து நாட்கள் திருவிழா,
திறக்கும் நேரம்: காலை 7- 9 மணி, மாலை 7- இரவு 9 மணி.
இருப்பிடம்: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து வாடிப்பட்டி, சமயநல்லூர் செல்லும் பஸ்சில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பவர் ஹவுஸ் ஸ்டாப்பில் இறங்கி, சத்தியமூர்த்திநகரில் உள்ள கோயிலுக்கு செல்லலாம்.
திறக்கும் நேரம்: காலை 6-12 , மாலை 3-8 மணி. செவ்வாய், வெள்ளியில் காலை 6-1, மாலை 3-9 மணி.
போன்: 99426 47121.