ADDED : ஆக 27, 2013 12:43 PM

பக்தி உலகில், பலப்பல மதங்களிலும் ஒரே மாதிரியான ஒரு கதை நிலவுகிறது. அதன் சாரத்தைச் சொல்லுகிறேன்.
கடவுளை வழிபடும் போது மனம் அலைபாயக் கூடாது..
ஒரு முகமாகக் கடவுளை மட்டுமே தியானிக்க வேண்டும். இதுகுறித்த கதை பலப்பல மகான்கள் பெயரில் நிலவுகிறது. ஒரு பெரிய மகான். ஏதோ விஷயமாக அந்த ஊரில் உள்ள பெரிய பணக்காரர் வீட்டிற்குப் போனார்.
பணக்காரரோ பூஜையில் (தபத்தில்.. ஜெபத்தில்.. தொழுகையில்..) இருக்கிறார். மகானோ 'சரி.. பூஜை முடியும் வரை காத்திருக்கிறேன்' என்று திண்ணையில் இருக்கிறார்.
மகான் வந்திருப்பது தெரிந்தாலும் தன்னை அவர் மெச்ச வேண்டும் என்கிற நினைப்பில் விஸ்தாரமாகப் பூஜை செய்து வெளியில் வந்த பணக்காரர், ''ஆஹா.. எப்போது வந்தீர்கள்?'' என்றார்.
''நீ பூஜை செய்யும் போது..''என்றார் மகான்.
''அடடா.. நான் மிக நேண்ட நேரம் பூஜை செய்பவனாயிற்றே.. ஆரம்பத்திலேயே வந்தீர்களா? முடியும் போது வந்தீர்களா?'' என்று பெருமையுடன் கேட்டார் செல்வர்.
ஒரு விநாடி யோசித்த சாது, ''அந்தப்பயல் நமக்குத் தர வேண்டிய வட்டியை ஆறு மாதமாகத் தரவில்லையே.. அவனை இன்று ஆள்வைத்து அடித்தாவது வட்டி வசூல் பண்ணவேண்டும் என்று நீ நினைத்தாயே! அப்போதுதான் உள்ளே வந்தேன்,'' என்றார்.
ஆக, வழிபாட்டில் மனம் குவியாது அலை பாய்வது பெரும் பாவம் என்பதே பல மதங்களின் கருத்து.
இது உண்மை என்றால், நாம் தொழிலில் ஈடுபடும் போதும் மனம் அலைபாயாமல் இருப்பதும் அவசியமல்லவா? சலனம்.. சபலம்.. மேலோங்க மனக்குவிதல் இல்லாமல் வேலை செய்தால் எந்த வேலையாவது உருப்படுமா? உண்மையாகவே ஒரு
வேலையில் நாம் லயமாகும் போது, சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியுமா என்ன?
சிலபேர் ஒரு வேலையில் ஈடுபட்டு விட்டால் தலையில் இடி விழுந்தால் கூடத் தெரியாது என்பார்களே..! அத்தகு மனோபாவமே இன்று நமக்கு மிக மிக அவசியம். பணியானாலும் பக்தியானாலும் இதே மனோ நிலை... அதாவது மன ஒருமைதான் மகத்தான மந்திரம்.
அக்பர் வாழ்வில் ஒரு சம்பவம் சொல்கிறார்கள்.
காட்டில் வேட்டைக்குப் போன அக்பர் மாலை நேரம் வந்ததும் தமது மேலாடையைக் கீழே விரித்து மண்டியிட்டுத் தொழுகையைத் தொடங்கினார். கொஞ்ச நேரத்தில் அவர் முகத்தின் மீது ஒரு பெண்ணின் ஆடைத்தலைப்பு உரசிப் போனது. அவள் ஓடுவது புரிந்தது. என்றாலும் தொழுகையின் போது கோபப்படக் கூடாது என்று பொறுத்துக் கொண்டார். தொழுகை முடிந்து ஓய்வாக அமர்ந்திருந்தபோது சிரித்தபடி ஒரு பெண் எதிரில் வருவதைப் பார்த்தார்.
அவளது ஆடைதான் தன் முகத்தில் உரசியது என்பதை ஒரு நொடியில் புரிந்து கொண்ட அக்பர், ''சக்கரவர்த்தி தொழுகையில் இருக்கும்போது இப்படியா கண் தெரியாதவள் மாதிரி ஓடுவது,'' என்று அவளைக் கடிந்து கொண்டார்.
அந்தப் பெண்ணோ பணிவுடன், ''ஆலம்பனா.. நான் என் கணவன் வரும் நேரத்தில் வரவில்லையே என்ற கவலையுடன் அவரை
நினைத்தபடி ஒடினேன். வழியில் தாங்கள் இருந்ததைக் கவனிக்கத் தவறிவிட்டேன். தவறுதான் மன்னிக்கவும். ஆனால், தாங்களோ கடவுள் நினைப்பில் இருந்தேன் என்கிறீர்கள்.. காதலன் நினைப்பில் இருந்த எனக்கே நீங்கள் இருப்பது தெரியாதபோது.. கடவுள் நினைப்பில் இருந்த உங்களுக்கு நான் ஓடியது தெரிந்திருக்கிறது.. தொழுகையில் நீங்கள் கரையவில்லையா அரசே!'' என்று கேட்டிருக்கிறாள்.
அக்பர் மிக நியாயமானவர். அந்தக் கேள்வியின் நியாயத்தை ஏற்று வெகுநாள் அது பற்றி யோசித்தார் என்கிறார்கள்.
இது கடவுள் பக்திக்கு மட்டுமல்ல.. தொழில் பக்திக்கும் வேண்டும் என்பதே என் வாதம். இன்று பலப்பல அலுவலகங்களில்
போய்ப்பாருங்கள் என்ன அரட்டை.. என்ன அமர்க்களம்.. வாடிக்கையாளர்களைக் அலட்சியமாக நடத்தும் அநியாயம் நடக்கிறது பாருங்கள். கேவலமாக நினைக்கும் கெட்ட குணம் இருக்கிறது. கவனியுங்கள் அலைபேசி வந்த பிறகு அலுவலகங்களில் சொந்த ஜோலி.. வெட்டி அரட்டை.. வேலைநேரத்தை வீணாக்கும் விபரீதம்.. பணியில் கவனச்சிதறல் வெகு சகஜமாகி விட்டது. பலப்பல பெரும் விபத்துகள் கூட இந்த நாட்டில் வெகு சாதாரணமாக நடைபெறுவதற்கு மூல காரணம் பணி நேரத்தில் நிகழும் கவனச் சிதறல்..இது நியாயமா? தர்மம் தானா? வண்டியோட்டிக் கொண்டே அலைபேசியில் பேசும் ஓட்டுநர்கள் எத்தனைபேர்? இவர்கள் மீது தற்கொலை அல்லது பிறர்மீதான கொலை முயற்சிப் பிரிவுகளில் காவல்துறை ஏன் வழக்குப் பதிவு செய்யக்கூடாது? யோசியுங்கள்! ஆலயத்தில் மட்டுமல்ல! அலுவலகத்தில் உங்கள் வேலையிலும் மன ஒருமை அவசியம்.
வ.உ சிதம்பரம் பிள்ளை செக்கிழுத்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஏன் செக்கிழுத்தார் என்பதைப் பேராசிரியர் ராஜாராம் ஒரு முறை விளக்கினார்.
தினம்தோறும் காலையில் சிறைக்குள் கண்களை முடி கண்ணீர் மல்க உருக்கமாகச் சிவபுராணம் ஓதுவது அவர் வழக்கம். ஒருமுறை அவ்வாறு அவர் பாடும் போது, சிறைத்துறைத் தலைவர் சிறைக் காவலரோடு அங்கே வந்திருக்கிறார். 'வ.உ.சி பிரிட்டிஷ் அரசுக்கு வெகு ஆபத்தானவர்' என்று சிறைக்காவலர் சொல்ல, அவரை வெளியில் கூப்பிடும்படி சிறைத்துறை தலைவர் ஆணையிட்டிருக்கிறார். சிறைக்காவலர் 'சிதம்பரம்.. சிதம்பரம்' என்று வெளியிலிருந்து அழைத்தார்.
சிறைக்குள்ளே தனக்குள்ளே, மிக உள்ளே திருவாசகத்தில் உருகி, சிவனில் தன்னை இழந்து பாடிக் கொண்டிருந்த வ.உ.சியின் காதுகளில் அது ஏறவில்லை. உள்ளே நுழைந்து, காவலர் உலுப்பி எழுப்பிய பிறகு தான் அவருக்குச் சுயநினைவு வந்தது.
''சிறைத்துறைத் தலைவர் வந்திருக்கிறார்.. இத்தனை பெரிய அதிகாரியை மதியாது நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்,'' என்று காவலர் கத்தியிருக்கிறார். சிவனை நினைத்து திருவாசகம் பாடியதை, ''அடடா! அவரை விடப் பெரிய அதிகாரியோடு அல்லவா நான் பேசிக் கொண்டிருந்தேன்,'' என்று நயம்படச் சொன்னார் வ.உ.சி.
'போச்சு.. போச்சு..'
'தன்னை விடப் பெரிய அதிகாரி' என்ற வார்த்தைகளால் கொதிப்படைந்த வெள்ளை அதிகாரி, ''இவனை மனிதன் போல் நடத்தாதீர்கள்.. மாடு போல கடுமையாக நடத்துங்கள்.. செக்கிழுக்க வையுங்கள்,'' என்று உத்தரவிட்டார்.
இத்தகைய மாமனிதர்களின் எச்சங்களா நாம்? இல்லையே! இப்படிக் கடவுள் பக்தியில் மட்டுமல்ல! கடமை உணர்விலும், பிள்ளைவாள் காட்டிய உறுதியை இந்த நாடு தொலைத்துவிட்டது! அதனால் தொலைந்து தேய்கிறது!
அவரைப்பற்றி இன்னும் ஒருசெய்தி சொல்கிறேன்.
வெள்ளையரை முறியடிக்க கப்பல் வாங்க மும்பை வந்தார் வ.உ.சி. அங்கே தூத்துக்குடியில் அவர் மகன் உலகநாதனுக்குக் கடும் காய்ச்சல்... அவசரமாகத் திரும்பி வரும்படி கடிதம் வருகிறது.. ''நான் இந்த உலகநாதனைப் பார்ப்பதா.. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான உலக நாதர்களைப் பார்ப்பதா? கப்பலோடு தான் இந்தச் சிதம்பரம் பிள்ளை திரும்புவான்.. அல்லது
கடலில் அவன் பிணம் மிதக்கும்,'' என்று காரியத்திலேயே கண்ணாக இருந்தார்.
இன்று வெளிநாடு செல்லும் நமது தலைவர்கள் நாட்டுப் பணிக்கு முதலிடம் தருகிறார்களா? வீட்டுப்பணிக்கு முதலிடம் தருகிறார்களா? என்னை விட நீங்கள் நிறைய தெரிந்து வைத்திருப்பீர்கள்! ஆனால், தேர்தலில் வாக்களிக்கும் போது மட்டும் மறந்து போகிறீர்கள்.. இது நியாயமா?
- மேலும் பேசுவோம்
சுகி.சிவம்
