ADDED : ஏப் 06, 2023 08:56 AM

கோயில்களில் கருவறைக்கு முன்பு நான்கு கரங்களையுடைய துவாரபாலகர்கள் கம்பீரமாய் அருள் செய்வர். அதில் ஒருவர் ஆள்காட்டி விரலை உயர்த்தி கடவுள் ஒருவரே என்றும், மற்றொருவர் கைகளை விரித்தபடி அவரை தவிர வேறு யாரும் உயர்ந்தவர் அல்ல என்ற தத்துவத்தை உணர்த்துவர். ஆனால் இரண்டு கரங்களை மட்டும் உடைய துவார பாலகர்கள் அருள் பாலிக்கும் தலம் எது தெரியுமா. அது தான் புதுக்கோட்டை மாவட்டம் குளத்துார் அருகே மலையடிப்பட்டியில் உள்ள மலைக்கோயில்.
இதற்கு திருவாலத்துார் மலை என பெயரும் உண்டு. இங்குள்ள சக்தி தீர்த்தத்தின் அருகே விளைந்த தர்ப்பை புற்கள் நேரடியாக பராசக்தி லோகத்தில் இருந்து வரப்பெற்றவை. ஸ்ரீராமனால் காட்டில் விடப்பட்ட சீதை லவனை பெற்றெடுத்த இடம் வால்மீகி ஆசிரமம். அதன் பின்னர் சீதைக்கு உதவியாக வால்மீகி தவவலிமையால் சக்தி வாய்ந்த தர்ப்பைப் புல்லை கொண்டு குசனை உருவாக்கிய தலம் இதுவே என்கிறது வரலாறு. திருமயத்தில் உள்ளது போலவே சிவபெருமான்,பெருமாளுக்கு தனித்தனியாக அமைந்த குடவரைக்கோயில் இது.
இங்கு கமலவல்லி சமேத அனந்தபத்மநாதராக அருள் செய்யும் பெருமாள் நின்ற, அமர்ந்த, சயனக்கோலத்தில் ஒரே இடத்தில் காட்சி தருவது இங்குள்ள சிறப்பு. இவரை கண்ணொளி வழங்கும் பெருமாள் எனவும் அழைக்கின்றனர். கோயிலில் காணப்படும் பெருமாளின் தசாவதாரக்காட்சிகள் அழகிய வேலைப்பாடு கொண்டவை. சனிக்கிழமை தோறும் துளசி மாலை சாற்றி, நெய் விளக்கேற்றி வழிபடுபவருக்கு கண்ணொளி நன்றாக கிடைக்கும். தனிச்சன்னதியில் அருள் செய்யும் சிவபெருமான் பக்தர்களின் கண் திருஷ்டிகளை போக்கி அவர்களுக்கு அருள் செய்வதால் கண்ணாயிரமுடையார் என்ற சிறப்பு பெயரை பெற்றார். இக்கோயிலில் பல்லவர்கள், விஜய நகர அரசர்கள் திருப்பணி செய்துள்ளனர்.
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் சப்தமாதர்கள், விநாயகர், முருகன், வீரபத்திரர், காளிகாம்பாள், நரசிம்மர், வராகமூர்த்தி சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது: புதுக்கோட்டையில் இருந்து 33 கி.மீ.,
விசேஷ நாள்: பிரதோஷம் திருக்கார்த்திகை வைகுண்ட ஏகாதசி
நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
அருகிலுள்ள தலம்: கீரனுார் செல்வநாயகி அம்மன் கோயில் 19 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 04257 - 243 533

