/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
பணத்தைப் பார்க்காதே.. குணத்தை மட்டும் பார்
/
பணத்தைப் பார்க்காதே.. குணத்தை மட்டும் பார்
ADDED : ஜன 12, 2018 11:52 AM

ஜன.15 திருவள்ளுவர் தினம்
* மனிதன் மற்றவருடைய குணத்தை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவரிடம் இருக்கும் பணத்துக்காக மதிப்பது கூடாது.
* மழையை எதிர்பார்த்து உயிர்கள் வாழ்வது போல மக்கள் நேர்மையானவர்களின் நல்லாட்சியை எதிர்பார்த்து வாழ்கின்றனர்.
* என் வீடு, நாட்டையும் மேன்மை அடைய செய்வேன் என்னும் உறுதியுடையவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்தி கொண்டு உதவ முன் வரும்.
* துன்பம் வரும் போது தாங்குவதற்கு நல்ல பிள்ளைகள் இல்லாத வீடும், நாடும் அடிப்பகுதியை வெட்டினால் சாயும் மரம் போல் விழுந்து விடும்.
* குளத்தில் உள்ள தாமரை மலரின் தண்டு, நீரின் ஆழத்திற்கேற்ப வளர்வது போல, ஒருவரின் உயர்வு அவரின் முயற்சிக்கேற்ப இருக்கும்.
* பிறருக்கு உதவுபவர்கள் வறுமையுடன் இருப்பது கொடுமையானது. பிறருக்கு தீங்கு செய்பவர்கள் செல்வ வளத்துடன் இருப்பது கொடுமையிலும் கொடுமையானது.
* எதிரியை விட பொறாமையால் தான் ஒருவருக்கு அதிகமாக துன்பம் வருகிறது. இந்த குணம் எப்போதும் கொஞ்சம் கூட நன்மை தராது.
* எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொல்வது போல, அன்பு இல்லாத உயிர்களை அறக்கடவுள் காய்ந்து கொல்வார்.
* இன்பம் தரும் இனிய சொற்களை விட்டு, துன்பம் தரும் தீய சொற்களை கூறுவது, நல்ல பழம் இருக்க காய்களை உண்பது போலாகும்.
* ஒருவர் செய்த உதவியை ஒருபோதும் மறப்பது கூடாது. அவர் செய்த கெடுதலை நினைக்கவே கூடாது.
* நல்லவனிடம் சேரும் பணம், இனிய பழங்கள் நிறைந்த மரம் ஊரின் நடுவில் வளர்ந்தது போல, பலருக்கும் பயன்படும்.
* நல்ல மனைவி அமைந்து விட்டால், ஒருவனது வாழ்விற்கு தேவையான எல்லாம் நாடி வந்து விடும்.
* ஒரு பிறவியில் ஒருவன் பெற்ற கல்விச் செல்வம், ஏழேழு பிறவிக்கும் தொடர்ந்து வந்து பாதுகாப்பு அளிக்கும்.
* வெற்றியை அடைய விரும்புபவன், சிறிதும் மனச்சோர்விற்கு இடம் கொடுக்காமல் காலத்தை எதிர்பார்த்து காத்திருப்பான்.
* ஆடை அவிழ்ந்தால், கை அதை விரைந்து சரி செய்வது போல, துன்பத்தை துடைக்க ஓடி வருபவனே உண்மையான நண்பன்.
* பிறருக்கு சொந்தமான ஒன்றை, திருட வேண்டும் என மனதால் நினைப்பது கூட பெரும்பாவம்.
* உடலில் வெளிப்புறத்தை நீரால் துாய்மைப் படுத்தலாம். ஆனால் உள்ளத்தை உண்மை ஒன்றே துாய்மையாக்கும்.
* நற்குணம் கொண்டவன் என்று பெருமையுடன் வாழ விரும்பினால், பொறுமையை வாழ்வில் வளர்த்துகொள்ள வேண்டும்.
திருத்துகிறார் தெய்வப்புலவர்