
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரே கோயிலில் இரட்டை பிரதோஷ பூஜை நடப்பதை தரிசிக்க வேண்டுமா! காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் கருடேஸ்வரர் கோயிலுக்கு வாருங்கள்.
தல வரலாறு:
கஷ்யப மகரிஷியின் மனைவி வினதை. இவள் அவரது மற்றொரு மனைவியான கத்துருவிற்கு அடிமையாக இருந்தாள். அடிமைத்தனத்தில் இருந்து விடுபட வேண்டி, வினதை இங்குள்ள சிவனான முத்தீஸ்வரரை வணங்க, அவளது மகன் கருடனால் விடுதலை கிடைக்கும் என்றார் சிவன். தன் சிற்றன்னையான கத்துருவிடம் சென்ற கருடன், தன் தாயை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டார். ''கருடனே! நீ தேவலோகம் சென்று அமிர்தகலசத்தை எடுத்து வந்து என்னிடம் கொடு, உன் தாயை விடுவிக்கிறேன்,'' என்றாள். அமிர்தம் எடுக்க புறப்பட்ட கருடன், தன் பயணம் வெற்றிகரமாக அமைய தன் தற்போது முக்தீஸ்வரர் லிங்கம் இருந்த இடத்தில், மற்றொரு லிங்கத்தையும் ஸ்தாபித்தார். கருடனால் பூஜிக்கப்பட்ட லிங்கம் 'கருடேஸ்வரர்' எனப் பெயர் பெற்றது.
நாயனார் முக்தி தலம்:
இங்கு வசித்த ஒரு சிவபக்தர், சிவனடியார்களின் ஆடையை, சலவை செய்து தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அடியார்களின் உள்ளக்குறிப்பை அறிந்து பணி செய்ததால் இவர் 'திருக்குறிப்புத்தொண்டர்' என பெயர் பெற்றார். இவரது பக்தியை உலகுக்கு உணர்த்த, சிவன், ஒரு அடியவரின் வடிவில் அழுக்கான ஆடையுடன் வந்தார். தன் ஆடையை சலவை செய்து தரக் கேட்டார். தன்னிடம் அந்த ஒரே ஆடை மட்டுமே இருப்பதால், கவனமாக துவைத்து தரும்படி சொன்னார்.
ஒப்புக்கொண்ட தொண்டர், ஆடையைத் துவைத்தபோது கிழிந்து விட்டது. அடியார் அவரிடம் ஆடையைக் கேட்க, கலங்கிய தொண்டர், சலவைக் கல்லில் மோதி உயிர்விடத் துணிந்தார். சிவன் அவருக்கு காட்சி தந்து, நாயன்மார்களில் ஒருவராக் கினார். சித்திரை சுவாதி நட்சத்திரத்தன்று இவரது குருபூஜை நடக்கும்.
இரண்டு பூஜை:
முத்தீஸ்வரர் சந்நிதிக்குப் பின்புறம் கருடேஸ்வரர் இருக்கிறார். பிரதோஷ வேளையில் முதலில் கருடேஸ்வரர் சந்நிதியிலுள்ள நந்திக்கு பிரதோஷ பூஜை நடக்கும். அதன்பின், முத்தீஸ்வரர் சந்நிதியில் பூஜை நடக்கும். ஆக, இரண்டு பிரதோஷ பூஜையைக் காணும் பாக்கியம் பக்தர்களுக்கு கிடைக்கிறது.
வழிபாட்டு முறை:
எதிரிகளின் தொல்லை நீங்க கருடேஸ்வரருக்கும், ஞானம் கிடைக்க முத்தீஸ்வரருக்கும் நெய்தீபம் ஏற்றி வேண்டுகிறார்கள். முத்தீஸ்வரருக்கு அக்னி நட்சத்திர காலத்தில் 1001 இளநீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.
இருப்பிடம்:
காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து செங்கல்பட்டு வழியில் 2 கி.மீ.,. காந்தி ரோடு ஆடிசன்பேட்டை பஸ் ஸ்டாப் அருகில்.
திறக்கும் நேரம்:
காலை 7- 12, மாலை 4.30- 8.30.
போன்:
93802 74939.
சி.வெங்கடேஸ்வரன், சிவகங்கை.