ADDED : நவ 13, 2016 12:29 PM

* உங்களின் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கினைத் தர்மம் செய்யுங்கள். தினமும் பகவத்கீதையில் ஒரு அத்தியாயம் படியுங்கள். இதனால் வாழ்வில் எல்லா நாளும் நல்ல நாளாக அமைந்திருக்கும்.
* நம் ஒவ்வொருவருக்கும் அன்பான தாயும் தந்தையுமாக கடவுள் இருக்கிறார். அவரே நம்மை விட்டு அகலாத உயிர்த்தோழனாகவும் இருக்கிறார்.
* உலகில் ஒரு வழிப்போக்கனைப் போல வாழக் கற்றுக்கொண்டால் ஆசைகள் மனதில் குறையத் தொடங்கும். ஆசை குறைந்தால் ஆண்டவனை எளிதாக அடைய முடியும்.
* நல்லொழுக்கம், மன அடக்கம், இரக்கம், மக்கள் சேவை போன்ற உயர்ந்த பண்புகளுடன் வாழ்வதே தெய்வீக வாழ்வாகும்.
* எந்த நிலையிலும் உண்மையைப் பேசுங்கள். இனிமையும் அதில் கலந்திருக்கட்டும். எல்லா உயிர்களையும் கடவுளின் அம்சமாகக் கருதுங்கள்.
* எண்ணம், பேச்சு, செயல் மூன்றிலும் மனிதன் தூய்மையைக் கடைபிடிக்க வேண்டும். உங்களின் அந்தரங்க வாழ்வும் பரிசுத்தமானதாகவே இருக்க வேண்டும்.
* சமுதாயமே புகழும் விதத்தில் நற்செயல்களில் ஈடுபடுங்கள். இந்த பண்பு ஒன்றே நல்லொழுக்கத்திற்கு துணையாக நிற்கும்.
* பன்னிரண்டு ஆண்டுகள் மனதாலும், பேச்சாலும் உண்மையை மட்டும் பேசுபவனுக்கு வாக்குசித்தி உண்டாகும். அவன் சொன்னதெல்லாம் பலிக்கத் தொடங்கும்.
* சத்தியம் இருக்கும் இடமே கடவுள் இருக்குமிடம். அங்கு எல்லா நல்ல குணங்களும் நிறைந்திருக்கும்.
* பகைவரையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். யாரையும் பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் வேண்டாம். அன்பே பகையை வெல்லத் தக்க ஒரே ஆயுதம்.
* நல்லதையே கண்களால் காணுங்கள். காதால் கேளுங்கள். மனதால் சிந்தியுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும் அங்கு தெய்வீகச் சூழ்நிலை உருவாகும்.
* தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழுங்கள். செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்வதில் அக்கறை காட்டுங்கள்.
* வாழ்க்கையில் எளிமையும், குறிக்கோளில் உயர்ந்த சிந்தனையும் கொண்டவராக இருங்கள். கடமையைச் செய்வதில் ஒருபோதும் பின்வாங்காதீர்கள்.
* தினமும் அரைமணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள் அல்லது சுறுசுறுப்பான விளையாட்டில் ஈடுபடுங்கள். நீண்ட தூர நடைப்பயிற்சி மேற்கொள்வதும் நல்லது.
* நேர்மையை உயிராக மதியுங்கள். உழைப்பினால் கிடைத்த பணத்தில் வாழ்வு நடத்துங்கள். நியாயமற்ற வழியில் கிடைக்கும் பரிசு, பணம், பொருளை ஒருபோதும் ஏற்க வேண்டாம்.
* திறந்த மனதுடன் அனைவரிடமும் பழகுங்கள். ஒளிவுமறைவின்றி நம்பகத்தன்மை உள்ளவராக நடந்து கொள்ளுங்கள். இதனால் அனைவரின் போற்றுதலுக்கும் உரியவராக விளங்குவீர்கள்.
சொல்கிறார் சிவானந்தர்

