ADDED : ஆக 10, 2018 08:23 AM

தன் 'ஜீவன்'ஆன சிவனை அடைவதற்காக, பத்மாசன கோலத்தில் கோலவிழியாள் பார்வதி தவம் செய்த தலமே திருவண்ணாமலை பச்சையம்மன் கோயில்.
கணவனின் கோபத்தை சாந்தப்படுத்துவதற்காக சராசரி மனைவி ஏதேதோ முயற்சி எடுப்பாள் என்பது நாம் அறிந்ததே. ஆனால், அண்டம் காக்கும் அரசனின் மனைவி எடுக்கும் முயற்சிகள் எப்படி இருக்கும்? எப்படி இருந்தாலும் இப்படி இருக்காது!
ஆம்... இது சத்தியத்தின் சோதனை; நித்தியத்தின் சாதனை!
கயிலாயத்தில் சிவனுடன் காதல் மொழிந்து கொண்டிருந்தாள் பார்வதி. அப்போது, சிவனின் கண்கள் சூரியன், சந்திரன் என்பது தெரிந்தும் விளையாட்டாக கைகளால் கண்களை மூடினாள். விளையாட்டு வினையாகும் என்பது திருவிளையாடல் நாயகிக்கு பொருந்தாமல் போகுமா என்ன?
பூகோளமே இருண்டது... எங்கும் இருள்; எதிலும் இருள். பிரபஞ்ச பேரியக்கமே ஸ்தம்பித்தது. உயிர்கள் அத்தனையும் நடுங்கின.
எல்லாம் தெரிந்த தீர்க்கதரிசிக்கு இந்த சிக்கலைத் தீர்க்கவா தெரியாது?
திறந்தது நெற்றிக்கண்... உலகம் ஒளி கொண்டது; உயிர்கள் விழி கொண்டன; பார்வதி பழி கொண்டாள்!
பார்வதி செய்த தவறுக்காக அவளை நீங்கினான் பரமசிவன்.
சிவம் இல்லாமல் சக்திக்கு ஏது கதி? மீண்டும் சிவத்தை அடைய சிவனிடமே யோசனை கேட்டு பூலோகம் வருகிறாள் பார்வதி. காஞ்சிபுரத்தில் ஒரு ஊசியின் மேல் நின்று நெடுந்தவம் புரிகிறாள். சிவன் கொஞ்சம் மனமிரங்குகிறார்.
'முழுமையாக என்னை அடைய, தலங்களுக்கு எல்லாம் தலையாக விளங்கும் அண்ணாமலைக்கு வா... அங்கு மலையாகவே நான் அருளும் கலையைப் பார்... பின் என்னை வந்து சேர்' என்ற சிவனின் கட்டளையால் திருவண்ணாமலையை அடைகிறாள் பார்வதி.
அங்கு அவள் தங்குவதற்காக, வாழை இலைகளால் பந்தல் அமைத்து தருகிறான் கந்தன். அங்கு தங்கியதில் அவளது உடல் வாழை இலையின் நிறத்திற்கு மாறி, பார்வதி அம்மன் - 'பச்சை அம்மன்' ஆகிறாள். அந்த இடம் வாழைப்பந்தல் ஆகிறது.
பின்னர் பச்சையம்மனாகவே திருவண்ணா மலை அடிவாரத்தை வந்தடைகிறாள் பார்வதி. அங்கு கவுதம மகரிஷியின் ஆலோசனைப்படி பத்மாசன கோலத்தில் தவமிருக்கிறாள். தேவ கன்னிகள், தேவ ரிஷிகள், சப்த முனிகள், நாக தேவர்கள் காவலாக நிற்கின்றனர். கடைசியாக அவளது தீரா தவத்தினால் சிவன் கோபம் தீர்ந்து காட்சியளிக்கிறார்.
இந்த காட்சியின் சாட்சியாக பிறந்ததே பச்சையம்மன் கோயில்.
திருவண்ணாமலை அடிவாரத்தின் வடகிழக்கே காடு, குளம் சூழ ரம்மியமாக உள்ளது கோயில். உள்ளே நுழைந்ததும் இருபுறமும் பிரம்மாண்ட முனி சிலைகள் வரவேற்கின்றன; கருவறைக்குள் கவுதம ரிஷி, தேவ ரிஷிகள், தேவ கன்னியர் சிலைகள் இடம்பெற்றிருக்கின்றன; நடுவில் பத்மாசன கோலத்தில் 'பச்சையம்மன்' ஆக பார்வதி... அவளுக்கு இடப்புறத்தில் தலை சாய்த்து, அவளது தவத்தை ரசித்தபடி 'மன்னார்சாமி' யாக சிவன்... கருவறைக்கு வெளியே முருகன், சுயம்புவாக விநாயகர்... என 'அருள் கடலில்' குளிப்பாட்டி நம்மை வழியனுப்புகிறாள் பச்சையம்மன். அதோடு மட்டுமில்லாமல், திருமணத்தடை, குழந்தையின்மை போன்ற எண்ணற்ற சிக்கல்களுக்கு தீர்வும் அளிக்கிறாள்.
இவளை தரிசித்து வந்தபின் ஒன்றுமட்டும் தெளிவாய் தெரிகிறது, 'உனக்காக எல்லாம் உனக்காக...' என்று அவள் சிவனை நோக்கி தவமிருப்பது 'நமக்காக எல்லாம் நமக்காக...'
எப்படி செல்வது: திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ.,
விசேஷ நாட்கள்: தமிழ் மாதப்பிறப்பு, திங்கள் (சோமவார) வழிபாடு, பவுர்ணமி, ஆடி மாதம் முழுவதும் நேர்த்திக்கடன் வழிபாடு
நேரம்: காலை 5:00 - இரவு 9:00 மணி
தொடர்புக்கு: 04175 - 251 685
அருகிலுள்ள தலம்: 35 கி.மீ.,யில் படைவீடு ரேணுகாம்பாள் கோயில்