
கடமையை செய் பலனை எதிர்பாராதே
கீதையை ஒரே வார்த்தையில் விளக்குவதாக இருந்தால் அதற்கு சரியான வார்த்தை 'சாட்சி' என்பதே. கீதையில் பல இடங்களில் சாட்சி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு நடக்கின்ற நிகழ்வுகளுக்கு நாமே காரணம் என நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உண்மையை புரிந்து கொள்ள இந்த வார்த்தை பயன்படும். எல்லாவற்றையும் நாமே கட்டுப்படுத்துகிறோம் என நினைப்பவர்களுக்கு நாம் எப்படி சாட்சியாக (பார்வையாளராக) மட்டும் இருக்கிறோம் என்பது புரிய வேண்டியிருக்கிறது.
உண்மையில் எது நடந்தாலும், அதில் நாம் ஒரு பார்வையாளராக தான் இருக்கிறோம். குருேஷத்திர போர் நடக்கும் போது அர்ஜூனனுக்கு வயது அறுபது. அதுவரை அவர் மகிழ்ச்சியாகவும், ஆடம்பரமாகவும் வாழ்ந்தார். ஒரு போர்வீரனாக பல வெற்றிகளை சந்தித்தார். அந்த வெற்றிகளுக்கு அவரே காரணம் எனக் கருதினார். அதே நேரத்தில் போரில் பலரும் இறந்த போதும், காயமுற்ற போதும் அதற்கு தானே காரணம் என வருந்தினார். விரக்தியுடன் போரை சந்தித்து வந்தார்.
நடக்கும் எல்லா செயல்களுக்கும் நாம் காரணமல்ல என்பதை விளக்குவது தான் கீதை. அர்ஜூனனுக்கு அப்படித்தான் கிருஷ்ணன் விளக்கினார். நடப்பதற்கு எல்லாம் நான் காரணம் இல்லை என்றால், 'நான் யார்' என்பதே அர்ஜூனனின் கேள்வி. அதற்கு 'நீ ஒரு சாட்சி (பார்வையாளர்) மட்டுமே' என்றார். அறுபதாண்டுகளில் எத்தனையோ நல்லதையும், கெட்டதையும் சந்தித்திருக்கும் அர்ஜூனனுக்கு இந்த சூட்சுமம் புரியவில்லை. பகவான் கிருஷ்ணர் விளக்கிய பின்னரே வாழ்வின் யதார்த்தம் புரிந்தது.
முதலில் இந்த தத்துவத்தை ஆன்மிக வாழ்வைத் தொடங்குபவர்கள் புரிந்து கொள்ள சிரமப்படுகின்றனர். 'எல்லாம் அவன் செயல்; நாம் எதுவுமில்லை' என்பதை புரிந்து கொள்வது ஒரு ஞானநிலை. அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை புரிந்து கொள்ளவும், நம் உள்மனதை அறிந்து கொள்ளவும் இந்த ஞானநிலை உதவும்.
'கடமையை செய்; பலனை எதிர்பாராதே' என்கிறார் கிருஷ்ணர். ஒரு செயலின் முடிவில் இன்பமோ, துன்பமோ ஏற்படலாம். பலன் எதுவானாலும் அதைப் பற்றி கவலைப்படாத மனநிலை, உணர்வுகளை அடிபணிய வைக்கும் திறனை நாம் பெற வேண்டும்.
-தொடரும்
கே.சிவபிரசாத், ஐ.ஏ.எஸ்.,
-- தமிழாக்கம்: ஜி.வி.ரமேஷ் குமார்

