sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ஹளபேடு ஹோய்சாளேஸ்வரர்

/

ஹளபேடு ஹோய்சாளேஸ்வரர்

ஹளபேடு ஹோய்சாளேஸ்வரர்

ஹளபேடு ஹோய்சாளேஸ்வரர்


ADDED : ஜூன் 17, 2011 09:03 AM

Google News

ADDED : ஜூன் 17, 2011 09:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடகாவை ஆண்ட ஹொய்சாள மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்களில், ஹளபேடு ஹோய்சாளேஸ்வரர் கோயில் மிகவும் பெரியது. கலைநயம் மிக்க இங்கு ராஜா பெயரில் ஒரு மூலவரும், ராணி பெயரில் ஒரு மூலவருமாக இரு சந்நிதிகள் உள்ளன.

தல வரலாறு: ஹொய்சாள மன்னர்கள், தங்களை துவாரகாபுரியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். இருப்பினும், இவர்கள் கிருஷ்ணனை வணங்கியதில்லை. சமண சமயத்தையே பின்பற்றி வாழ்ந்தனர். ராமானுஜர் காலத்திற்குப் பிறகு. இவர்கள் மீண்டும் தங்கள் வேதசமயத்தைப் பின்பற்றத் தொடங்கினர். அதன்பின், சிறியதும், பெரியதுமாக சிவபெருமான், மகாவிஷ்ணுவை மூலவராகக் கொண்டு 150 கோயில்கள் கட்டினர். பதினோராம் நூற்றாண்டில் ஹளபேடு ஹொய்சாளர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. அப்போது, இங்கு ஒரு சிவாலயம் கட்டி, மூலவருக்கு தங்கள் இனத்தின் பெயரால் 'ஹோய்சாளேஸ்வரர்' என்று பெயரிட்டனர். 1127ல் தொடங்கிய கோயில் கட்டும்பணி 1207ல் நிறைவு பெற்றது. விஷ்ணுவர்த்தனின் அமைச்சரில் ஒருவரான 'கெட்டுமல்லா' இக்கோயிலைக் கட்டினார்.

வரவேற்கும் விநாயகர்: கோயில் வாசலில் விநாயகப்பெருமான் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மேலே உள்ள இருகைகளில் பாச அங்குசம் உள்ளது. வலதுகரம் இஸ்லாமியப் படையெடுப்பில் (மாலிக்காபூர் படையெடுப்பு) உடைக்கப்பட்டு விட்டது. இடக்கரம் மோதகத்தை தாங்குகிறது. துதிக்கையால் மோதகத்தைச் சுவைத்தபடி காட்சி தருகிறார். விநாயகரின் கிரீடமும், யாளியால் ஆன திருவாட்சியும் நுட்பமான வேலைப்பாடு மிக்கவை. கால்கள் இரண்டையும் மடித்து அமர்ந்திருக்கிறார். கழுத்தில் அணிந்திருக்கும் தாழ்வடம் பாதத்திற்கும் கீழே தரையில் கிடக்கிறது. வெயிலும் மழையும் பாராமல் வெட்டவெளியில் வெயிலுகந்த விநாயகராக காட்சியளிக்கிறார்.

ராஜாசிவன் ராணிசிவன்: கோயிலில் இரண்டு பிரதான சந்நிதிகள் அமைந்துள்ளன. முதல் சந்நிதியில் ஹொய்சாளேஸ்வரர் என்னும் திருநாமத்தோடு சிவபெருமான் வீற்றிருக்கிறார். எளிமையாக காட்சி தரும் சிவலிங்க பாணத்தின் மேல் நாகாபரணம் குடைபிடிக்கிறது. பாணத்தின் மீது இரு கண்கள் அழகு செய்கின்றன. இச்சந்நிதி முன்னுள்ள நவரங்க மண்டபம் மிகுந்த வேலைப்பாடு மிக்கதாகும். விஷ்ணுவர்த்தனன் என்னும் ஹொய்சாள மன்னனின் மனைவி சாந்தளாதேவி. ராணியின் பெயரால் இவர் சாந்தளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். வடநாட்டு பாணியில் சாந்தளேஸ்வரர் மீது தாராபாத்திரம் வைக்கப்பட்டுள்ளது. இரு சந்நிதிக்கும் நேரே கிழக்கு வாசல்கள் உள்ளன. வடக்கு தெற்கு வாசல்களும் உண்டு. மன்னரின் அரண்மனை தெற்குப்பகுதியில் இருந்ததாகவும், அவ்வாசலை மன்னர் பயன்படுத்தியதாகவும் கூறுகின்றனர். வெளியில் எவ்வளவு வெயில் இருந்தாலும் கோயிலுக்குள் நுழைந்ததும் குளிர்ச்சி நம்மைத் தீண்டும். சுவாமி தரிசனத்தின் போது, தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. சாந்தளேஸ்வரர் சந்நிதியில் உற்சவர் சிலைகள் உள்ளன.

ஒய்யார துவாரபாலகர்: சிவாம்சத்துடன் நந்தி, மகாகாளர் என்னும் துவாரபாலகர்கள் சந்நிதிகளில் காவலாக நிற்கின்றனர். இதில் சாந்தளேஸ்வரர் முன்புள்ள துவாரபாலகர்கள், கையில் திரிசூலமும், டமருகம் என்னும் உடுக்கையும் ஏந்தி சிவாம்சத்துடன் உள்ளனர். கைகளை லாவகமாக வளைத்தும், கால்கள் சற்று சாய்ந்தும் ஒய்யார பாவனையில் இந்த சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. சிவனைச் சரணடைந்தால் நாமும் இவர்களைப் போல ராஜாவீட்டு கன்றுக்குட்டியாக வாழலாம் என்பது ஐதீகம். அவர்களின் அருகில் சாமரம் வீசும் சேடிப்பெண்களின் சிலைகள் கண்களைக் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. துவார பாலகர்களின் பாதத்தில் காவல்வீரர்கள் நிற்கின்றனர்.

நந்தி மண்டபம்: ஹோய்சாளேஸ்வரருக்கும், சாந்தளேஸ்வரருக்கும் நேராக நந்தி மண்டபங்கள் உள்ளன. நந்தியும், மண்டபத் தூண்களும் கலைநயம் மிக்கவை. நந்தி மண்டபத்தைச் சுற்றி மரச்செப்பு கடசல் போல கல்லில் வடித்த கலைநயம் மிக்க தூண்கள் உள்ளன. ஒற்றைக் கருங்கல்லினால் நந்தி வடிக்கப்பட்டுள்ளது. இரு நந்திகளும் ஒன்று போலவே உள்ளன. கழுத்து சிறிது வளைந்திருக்கிறது. தமிழ்நாட்டுப் பாணியில் நாக்கை வெளியில் நீட்டாமல் இருப்பது மாறுபட்டது.

சித்திர வேலைப்பாடு: பிரகார சுவர் முழுவதும் சித்திர வேலைப்பாடுகள் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளன. யானை, சிங்கம், குதிரைவீரர்கள், பூவிதழ் என்று அடுக்கடுக்காக சிற்பங்கள் நூற்றுக்கணக்கில் ஒன்றின்மேல் ஒன்றாக உள்ளன. கோயில் ஒரு தேர் போலவும், அதை இழுத்துச் செல்வது போல சிற்ப வரிசைகளும் உள்ளன. யானைகள் ஒன்றையொன்று முட்டி மோதிக் கொள்ளும் சிலைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இரண்யனை வதம் செய்யும் உக்ர நரசிம்மர், கோவர்த்தனகிரியைக் குடையாகத் தாங்கும் கிருஷ்ணர், ராமலட்சுமணர், அர்ஜுனனுக்கு தேரோட்டும் கிருஷ்ணர் என்று ராமாயண மகாபாரத கதை தொடர்பான சிற்பங்களும் உள்ளன. இக்கோயில் தொல்லியல் துறையின்கீழ் செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியப் படையெடுப்பின் போது சிதைந்த சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிற்பக்கலையில் ஆர்வமுள்ளவர்களை மிக மிக ரசிக்க வைக்கும் கோயில் இது. ஆதிநாதர், சாந்திநாதர், பார்சவநாதர் ஆகிய சமணக்கோயில்களும் இக்கோயிலின் சுற்றுப்புறங்களில் உள்ளன.

திருவிழா: மகாசிவராத்திரி, திருக்கார்த்திகையன்று தேர்பவனி

திறக்கும்நேரம்: காலை6 - மாலை 6மணி

இருப்பிடம்: மைசூருவில் இருந்து 120கி.மீ., தொலைவில் உள்ள ஹாசன் சென்று, அங்கிருந்து 39கி.மீ,சென்றால் ஹளபேடுவை அடையலாம்.

போன்: 098803 19949.






      Dinamalar
      Follow us