
சுவாமியை தரிசிக்கும் பக்தர்கள் மகிழ்வது இயல்பு. பக்தர்களை கண்டு சுவாமி மகிழ்வதை பார்க்க வேண்டுமா... திருவாரூர் மாவட்டம் பாடகச்சேரி, 'கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள்' கோயிலுக்கு வாருங்கள். இவரை தரிசித்தால் 'ஹேப்பி! இன்று முதல் ஹேப்பி' என பாடுவீர்கள்.
இலங்கைக்கு கடத்தப்பட்ட போது சீதை தன் ஆபரணங்களை வழிநெடுக வீசி சென்றாள். ராமரும், லட்சுமணரும் பாடகச்சேரி என்னும் இத்தலத்திற்கு வந்த போது சீதையின் கொலுசு கிடந்ததைக் கண்டார். 'பாடகம்' என்பதற்கு 'கொலுசு' என்பது பொருள். 'இது சீதாப்பிராட்டியின் கொலுசு தான்' என்றார் லட்சுமணர். 'அது எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறாய்?' என்று கேட்டார் ராமர். 'நான் அண்ணியின் பாதம் தவிர வேறு எதையும் பார்த்ததில்லை' என்றார். உள்ளம் சிலிர்த்த ராமர், 'பாடகம் கண்டு உள்ளம் மகிழ்ந்தேன்' என்றார். அவருக்கு 'கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள்' என்று பெயர். பாடகம் கிடைத்த இடம் என்பதால் ஊர் 'பாடகச்சேரி' எனப் பெயர் பெற்றது.
இங்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இருக்கிறார். திருவோண நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனத்தை தரிசிக்க திருமணயோகம், குழந்தை பாக்கியம், மனநிம்மதி கிடைக்கும். பெருமாளிடம் வேண்டிக் கொள்ள தொலைந்த பொருள் விரைவில் கிடைக்கும். இங்கு பசுபதீஸ்வரர் என்னும் பெயரில் சிவனும், சவுந்தரநாயகி என்னும் பெயரில் அம்பிகையும் இருக்கின்றனர். இங்கு வாழ்ந்த பாடகச்சேரி மகான் என்னும் ராமலிங்க சுவாமிக்கு ஆடிபூரத்தன்று குருபூஜையும், பவுர்ணமி தோறும் அன்னதானமும் நடக்கிறது. கும்பகோணம் நாகேஸ்வரர் உட்பட பல கோயில்களுக்கு திருப்பணி செய்த இவர், பக்தர்களின் நோயையும் குணப்படுத்தினார். பைரவரின் பக்தரான இவர் அன்னதானம் செய்யும் போது நுாற்றுக்கணக்கில் நாய்கள் தோன்றி மறையும் அதிசயம் நடந்துள்ளது.
எப்படி செல்வது
* கும்பகோணம் - ஆலங்குடி வழியில் 14 கி.மீ.,
* கும்பகோணம் - மன்னார்குடி வழியில் வலங்கைமான் சென்று அங்கிருந்து 5 கி.மீ.,
விசஷே நாள்: மாத திருவோணம், வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராம நவமி
நேரம்: காலை 6:00 - 10:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 97517 34868
அருகிலுள்ள தலம்: கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் 14கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மாலை 4:00 - 9:30 மணி
தொடர்புக்கு: 0435 - 242 0276