
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் - பூளைச்செடி
கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் உள்ளது திருவெரும்பூளை என்னும் ஆலங்குடி. காவிரிக்கரையின் வடகரை தேவாரத் தலம் இது. இங்குள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகரின் திருநாமம் கலங்காமல் காத்த விநாயகர்.
இங்குள்ள மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் என்னும் காசி ஆரண்யேஸ்வரர். அம்மன் ஏலவார்குழலி. இங்குள்ள குருதட்சிணாமூர்த்தி விசேஷமானவராக திகழ்வதால் இக்கோயில் குருபரிகார தலமாக உள்ளது. குருபெயர்ச்சி சித்திரை திருவிழாக்களில் இவரை பெருமளவில் பக்தர்கள் தரிசிக்கின்றனர். விஸ்வாமித்திரர் வழிபட்ட தலமான இங்குள்ள ஞானகுரு தட்சிணாமூர்த்தி நம் தீவினைகளை போக்குவதோடு உடல், மனநோய்களையும் போக்குகிறார்.
பாற்கடலை கடையும் போது எழுந்த ஆலகால விஷத்தை கண்டதும் தேவர்கள் பயந்தனர். சிவபெருமானிடம் முறையிட்ட போது, அவர் தன் நண்பரான சுந்தரர் மூலம் விஷத்தை ஒன்று திரட்டி தன் தொண்டையில் அடக்கினார். இப்படி விஷத்தை அடக்கிய நிலையில் சுவாமி இருப்பதால் இத்தலம் 'ஆலங்குடி' எனப்பட்டது. சிவனருளால் இந்த ஊர் மக்களும் விஷக்கடியால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பது ஐதீகம். பூச்சிக்கடி பாம்புக்கடி விஷத்தால் ஏற்படும் பாதிப்பை போக்கும் சிறுபீளை பெருபீளைச் செடிகள் இங்கு தலவிருட்சமாக உள்ளன.
இக்கோயிலை சுற்றியுள்ள ஆரண்ய தலங்கள் ஐந்தில் இத்தலமே சிறப்பு மிக்கது. சோழர் காலத்தைச் சேர்ந்த இக்கோயிலில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த 11, 12 நுாற்றாண்டை சேர்ந்த செப்புத்தகடுகளில் விளக்குகள் எரிக்கவும் கோயிலை பராமரிக்கவும் தானமாக நிலம், பொற்காசுகள் வழங்கப்பட்ட செய்தி இடம் பெற்றுள்ளது.
அகழிக்கும் கோயிலுக்கும் இடையில் பூளைச்செடிகள் செழிப்பாக வளர்ந்துள்ளன.
திருவிரும்பூளை என்னும் பெயர்
கொண்ட இதில் சிறுபூளை,
பெரும்பூளை என இருவகை உண்டு.
ஏர்வா லேனேட்டா என்பது சிறுபீளைக்கும் ஏர்வா ஜவானிகா என்பது
பெரும்பீளைக்குமான தாவரவியல்
பெயர்கள். அமரந்தேசியே குடும்பத்தை சேர்ந்தவை இவை.
போகர் பாடிய பாடல்
விளங்கக் கேள் சனுங்கு வூசையென்றும் பேரு
வீரான ஊனின் பூடென்றிதற்குப் பேரு
உளங்கக்கேள் உரதமென்றும் அதீதப்பேரு
உறுதி பெறு ஊட்டுப் பர மூலியென்றும் பேரு
சிறுபூளையின் பெயர்களாக சனுகுஓசை பூனின்பூடு, துாங்கும் ஊதாளம், மூதேவி மூலம், மூங்கனி மூலி என்று போகர் குறிப்பிடுகிறார்.
அகத்தியர் பாடிய பாடல்
நீரடைப்பு கல்லடைப்பு நீங்காகக் குடற்சூலை
போரடரி ரத்தகணம் போக்குங்காண் - வாரிறுக்கம்
பூண்முலையே! கேளாய் பெருந்துஞ் சிறுபீளை
யாமிதுகற் பேதி யறி.
சிறுபூளை செடியை கஷாயம் செய்தோ பொடியாக்கியோ சாப்பிட ரத்தசோகை ரத்தபோக்கு, சிறுநீர் எரிச்சல், ஜன்னி கல்லடைப்பு, நீர்ச்சுருக்கு, உடல் சூடு தணியும்.
பாடாண பேதியெனப் பன்னுபெரும் பீளைக்கு
மேடான வீக்கம் விலகுங்காண்-நாடறிய
பேய்பூத மும்போகும் பேசிற் பலபிணிபோந்
தூயோ ரறிவரிதைச சொல்.
பெரும்பீளை செடியை கஷாயம் செய்து குடிக்க ரத்த சோகை, மனநோய்கள், வீக்கம் கட்டிகள் மறையும். சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் பாஷாணபேதி மூலம்
வீரியம் மிக்க பாஷாணங்களால் ஏற்படும் பாதிப்பு நீங்கும்.
தேரையர் பாடிய பாடல்
சுக்குஞ் சிறுபீளை கார்நெருஞ்சி மாவிலிங்கை
விக்கும்பே ராமுட்டி வேருடனே - யொக்கவே
கூட்டிக் கியாழமிட்டுக் கொள்ளவே கல்லடைப்பு
காட்டிக் கழன்றோடுங் காண்.
சிறுபூளை, சிறுநெருஞ்சில், மாவிலங்கம் தேராமுட்டி நான்கையும் கஷாயமாக்கி குடிக்க கல்லடைப்பு நீங்கும். சிறுபூளை கற்களை கரைக்கும் தன்மையுடையது. தைப்பொங்கலின் போது கூரையில் பூளை செடியை சொருகி வைப்பர். இதனால் கூரைப்பூ என்றும் இதற்கு பெயருண்டு.
எப்படி செல்வது: திருவாரூர் - மன்னார்குடி ரோட்டில் 30 கி.மீ.,
நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 04374 - 269 407
-தொடரும்
ஜெ.ஜெயவெங்கடேஷ்
98421 67567
jeyavenkateshdrs@gmail.com

