
அழகர்கோவில் அழகர் - சந்தனமரம்
திருப்பதியில் ஸ்ரீனிவாச பெருமாள் நின்ற கோலத்தில் இருப்பது போல, மதுரை அழகர்கோவிலில் அழகர் வீற்றிருக்கிறார். இங்குள்ள மலை மீது சோலைமலையில் முருகனும், அடிவாரத்தில் அழகரும் குடிகொண்டுள்ளனர். சைவமும், வைணவமும் தழைத்தோங்கும் புண்ணிய பூமி இது. அழகர் கோவிலில் மூலவரின் பெயர் பரமசுவாமி. உற்ஸவரின் பெயர் சுந்தரராஜர். சங்கு, சக்கரம், வாள், வில், கதை என்னும் ஆயுதங்களை தாங்கியபடி காட்சி தருகிறார் மூலவர். தங்கத்தால் ஆன உற்ஸவருக்கு இங்குள்ள புனித நீரான நுாபுரகங்கையால் மட்டும் அபிஷேகம் நடக்கிறது.
சித்திரை மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், அழகர் வைகை ஆற்றில் இறங்கும் உற்ஸவமும் பக்தர்கள் மெய்மறந்து கொண்டாடும் விழாக்கள் மதுரைக்கே உரித்தானது.
புராண காலத்தில் பூலோகத்தில் மக்கள் நேர்மையாக வாழ்ந்ததால் எமதர்மனால் உயிர்களை கொல்ல முடியவில்லை. வருத்தமுடன் இருந்த சமயத்தில் ஒரு பெண்ணை அவளின் கணவன் கொடுமைப் படுத்துவதைக் கண்டு அவனைத் தண்டித்தார். 'உயிரை எடுப்பது மட்டுமே உன் வேலை; தண்டிப்பதல்ல” என எமதர்மன் மீது கோபம் கொண்டதோடு அவனது முகத்தை கொடூரமாக்கினார் சிவபெருமான். அதன்பின் உலகமே அவனைக் கண்டு நடுங்கியது. அழகான தோற்றம் வேண்டி இங்கு எமதர்மன் தவமிருக்க, காட்சியளித்ததோடு விருப்பத்தையும் நிறைவேற்றினார் அழகர்.
அழகரின் புகழ் எங்கும் பரவும் விதத்தில் சந்தன மரம் இங்கு தலவிருட்சமாக உள்ளது. முருகப்பெருமானுக்கு உரிய இந்த மரம் அழகருக்கும் பெருமை சேர்க்கிறது. (தற்போது இங்குள்ள முருகனுக்கு நாவல் மரம் தலவிருட்சம்) சந்தன மரங்கள் சூழ்ந்திருக்க பட்டாம் பூச்சிகள் பறக்க இயற்கையான சூழலில் இத்தலம் இருப்பதாக ஆழ்வாரான ஆண்டாள் பாடியுள்ளார்.
இங்கு வழங்கப்படும் பிரசாதமான தோசை புகழ் மிக்கது. பச்சரிசி, உளுந்து, மிளகு, சீரகம், பெருங்காயம், சுக்கு, கறிவேப்பிலையுடன் நுாபுர கங்கை தீர்த்தம் சேர்த்து மாவாக்கி தோசை தயாரிக்கப்படுகிறது. விவசாயிகள் தங்களின் வயலில் விளையும் நெல்லை காணிக்கையாக தருகின்றனர்.
மலை மீதுள்ள நுாபுர கங்கையில் இருந்து 8 கி.மீ., துாரத்தில் ராமதேவர் சித்தரின் பீடம் உள்ளது. சித்த மருந்துகளை தயாரிக்கும் முறைகள், குண்டலினி ஆற்றல் பற்றிய நுால்களை இவர் எழுதியுள்ளார்.
பழநியிலுள்ள சித்தரான போகர் பாடிய பாடல்:
சந்தனத்தின் பேர்தனையே சாற்றக்கேளு
சாந்தமாங் கெந்தகெந்த சாரஞ்சமாகும்
பந்தனத்தின் மலையசோ பத்ரதிரிவாம்
சாந்தம், எந்தசாரம், வந்தனம், மலையசோ பத்திரி, சுவேத சந்திர காஞ்சம், நந்தனத்தினரோதி, திரயோக்கியம், பத்திசிரி, அரிசந்தனம், சீதகாந்தி, அர்ப்பணம் என சந்தனத்திற்கு பல பெயர்கள் உண்டு.
அகத்திய முனிவர் பாடிய பாடல்
நற்சந் தனமரத்தா னல்லறிவு மின்புமெழிற்
பொற்செந்த திருவருளும் பூதலத்துள் - மெச்சுஞ்
சரும வழகுந் தனிமோ கமுமாம்
பிரமிநோ யேகும் பிறழ்ந்து.
சந்தனத்தை பூசினால் உடல் குளிர்ச்சி பெறும். முகத்தில் பூசினால் அழகிய தோற்றம் உண்டாகும். சந்தனக் கட்டை ஊறிய தண்ணீரை குடித்தால் வயிற்றுவலி தீரும். ரத்தம் சுத்தமாகும். புத்துணர்ச்சி, மகிழ்ச்சி உண்டாகும்.
சித்தர் தேரையர் பாடிய பாடல்
மும்மையெனச் செல்வார் முருகசந்தனப்
பேதமவை
செம்மை மஞ்சள் வெண்மை யெனத்
தேர்முறையே - நன்மை தரும்
உத்தமும் மத்திபமும் ஒத்தம மும்மாகும்
தத்தை மொழியணங்கே சாற்று.
சிவப்பு, மஞ்சள், வெள்ளை என மூன்று நிறத்தில் சந்தன மரம் இருக்கும். இதில் சிவப்பு நிற சந்தனமே மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது.
பிரசாதமாக சம்பா தோசை, மிளகு அடை, குளிர்ந்த மலைக் காற்று, நோய் தீர்க்கும் நுாபுர கங்கை தீர்த்தம், மணக்கும் சந்தனமரம், புன்னகை ததும்பும் அழகரின் முகம், ஞானம் தரும் சித்தரின் பீடம் என பக்தர்களுக்கு அமைதி, நிம்மதி, ஆரோக்கியத்தை தரும் தலமாக அழகர்மலை உள்ளது.
எப்படி செல்வது: மதுரையில் இருந்து 20 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0452 - 247 0228
-தொடரும்
ஜெ.ஜெயவெங்கடஷே்
98421 67567
jeyavenkateshdrs@gmail.com

