ADDED : மார் 25, 2011 02:06 PM

இப்போது குழந்தைகளைப் பற்றிய கவலை பெற்றோருக்கு அதிகமாக இருக்கிறது. ''என் மகன் கெட்டுப் போகிறானே, என் மகள் பாய் பிரண்ட்ஸ்களுடன் அலைகிறாளே,'' என்று புலம்புபவர்கள் மிகச்சிலரே. இந்த கலாச்சார சீரழிவுக்கு காரணம், 'டிவி', சினிமா, இன்டர்நெட். இதை இளையதலைமுறைக்கு கற்றுக் கொடுத்தது யார்? இதே பெற்றோர் தான்! பிள்ளைகளுக்கு எதிரான குற்றத்தை செய்துவிட்டு, அந்த பிள்ளைகள் கெட்டுப்போவதாக குற்றம் சாட்டுகிறார்கள்.
பெற்றவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும்.
* நீங்கள் காலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுவீர்களா?
* பல் துலக்கிய பிறகு தான் காபி, டீ சாப்பிடுகிறீர்களா?
* படுக்கை விரிப்புகளை ஒழுங்குபடுத்தி. வீட்டை சுத்தம் செய்து, ஏழு மணிக்குள் குளித்து விடுகிறீர்களா?
* நாளிதழ்களை படித்து அன்றாட விஷயங்களைத் தெரிந்து கொள்கிறீர்களா?
* எட்டு மணிக்கு விளக்கேற்றி வழிபாடு செய்கிறீர்களா? அப்போது ஸ்லோகம் சொல்கிறீர்களா?
* ஒன்பதரை மணிக்கு அலுவலகம் என்றால், 5 நிமிடம் முன்பே நுழைந்து விடும் வகையில் பயணத்திட்டத்தை வகுத்துக் கொள்கிறீர்களா?
* வீட்டில் சமைக்கும் நேரத்தில் <உங்கள் இல்லத்தில் ஏதாவது தெய்வப்பாடல் ஒலிக்கிறதா?
இத்தனையையும் பெரியவர்களான நீங்கள் பின்பற்றி வந்தால், பிள்ளைகளும் அதையே பின்பற்றியிருப்பார்கள். இதை விட்டுவிட்டு எந்நேரமும் 'டிவி' சினிமா என உங்களை நீங்களே சீரழிக்கும் போது, குழந்தைகளும் உங்களைப் பார்த்து சீரழிந்து போகிறார்கள். மாலையில் விளக்கேற்றும் வேளையில், 'டிவி'யில் நடிகை கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறாள், அல்லது புருஷனைத் திட்டுகிறாள் அல்லது ஒரு குடும்பத்தை சீரழிக்கிறாள். இப்படிப்பட்ட காட்சிகள் தானே கருக்கல் வேளையில் நம் வாழ்வை கருக்கிக் கொண்டிருக்கின்றன! குழந்தைகளும் படிப்பை விட்டுவிட்டு, அவர்களுடன் அமர்ந்துள்ளார்கள். ஒரு சிலரை கட்டாயப்படுத்தி படிக்க வைத்தாலும், பார்வை தான் புத்தகத்தில் இருக்கிறது! சிந்தனை யெல்லாம் இங்கு தான் இருக்கிறது.
ஒரு கதை கேளுங்க!
ஆற்றில் பெரும் வெள்ளம்! அதில் மூடை ஒன்று மிதந்து வந்தது.
நண்பர்கள் சிலர் கரையில் நின்றனர். நீச்சல் தெரிந்த ஒருவன்,''டேய், மூடையில் விலைமதிப்பு மிக்க நிறைய பொருள் இருக்கும் போல் தெரிகிறது. நான் போய் எடுத்து வருகிறேன், பங்கிட்டுக் கொள்ளலாம்,'' என தண்ணீரில் குதித்தான். மூடையை பிடித்து இழுத்தான். என்ன ஆச்சரியம்! அது அவனை இழுத்து சென்றது.
கரையில் நின்றவர்கள், ''டேய்! பாரம் அதிகமென்றால் விட்டு விடு!'' என்று கத்தினர்.
பதிலுக்கு, ''நான் விட்டு விட தயார், அது விட மறுக்கிறதே!'' என்றான்.
மூடை போல தெரிந்த பொருள் என்ன தெரியுமா? வெள்ளத்தில் சிக்கி வந்த ஒரு கரடி!
இதுபோலத் தான் பெற்றோர்கள் சில பழக்கங்களுக்குஆளாகி விடமுடியாமல் தவிக்கிறார்கள். பிள்ளைகளும் அவர்களைப் பின்பற்றுகிறார்கள். கடைசியில், பிள்ளைகளை மட்டும் குற்றம்சாட்டுகிறார்கள். பெற்றோர்கள் முதலில் திருந்தட்டும், இளைய தலைமுறை தானாகத் திருந்தும்.