sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

இவ்ளோ பெரிய வேஷ்டியா?

/

இவ்ளோ பெரிய வேஷ்டியா?

இவ்ளோ பெரிய வேஷ்டியா?

இவ்ளோ பெரிய வேஷ்டியா?


ADDED : மார் 10, 2013 05:48 PM

Google News

ADDED : மார் 10, 2013 05:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவலிங்கத்தில் பெரியது தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம் என்று அறிவீர்கள். லிங்கத்தைத் தாங்கும் ஆவுடையாரில் பெரியதைப் பார்க்க வேண்டுமானால், புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோயிலுக்குச் செல்ல வேண்டும். இங்குள்ள ஆவுடையாருக்கு 90 அடி நீளமுள்ள வேஷ்டி கட்டப்படுகிறது. சிவராத்திரியை ஒட்டி இந்த அதிசய லிங்கத்தை தரிசித்து வரலாம்.

தல வரலாறு:





'ஓம்' என்ற பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாமல், செய்த தவறுக்காக பிரம்மா படைக்கும் தொழிலை இழக்க வேண்டியதாயிற்று. பார்வதியின் அறிவுரைப்படி, பூலோகத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, மீண்டும் தனது தொழிலைப் பெற பூஜை செய்து வந்தார். நான்கு முகங்களைக் கொண்டவர் என்பதால், லிங்கத்தில் சிவமுகத்தை உருவாக்கினார். இது சதுர்முக லிங்கம் எனப்பட்டது. 'சதுர்' என்றால் 'நான்கு'. இந்த லிங்கமே இங்கு வழிபாட்டில் இருந்தது.

பிற்காலத்தில், இரண்டாம் சுந்தர பாண்டியன் ஒரு கோயிலை எழுப்பினான். சோழர் கோயில்களில், ராஜகோபுரம் சிறிதாகவும், விமானம் உயரமாகவும் இருக்கும். பாண்டியர் கோயில்களில் நேர்மாறாக இருக்கும். இது கலப்படக் கோயில் என்பதால், ராஜகோபுரமும், விமானமும் மிக உயரமாக அமைக்கப்பட்டது. மூலஸ்தானத்தில் பிரம்மாண்டமான

ஆவுடையாருடன் கூடிய லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவரை 'விருத்தபுரீஸ்வரர்' என அழைத்தனர். 'விருத்தம்' என்றால் 'பழமை'. இவர் பழம்பதிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாவே வணங்கிய தலம் என்பதால், இது மிகப்பழமையான ஊராகக் கருதப்படுகிறது.

தஞ்சையை விட பெரிய ஆவுடையார்:





தஞ்சாவூர் லிங்கம் பெரியது. அதை விட, கங்கைகொண்டசோழபுரத்தின் லிங்கம் உயரம் கூடியது. தஞ்சை கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவுள்ள ஆவுடையாரும் கொண்டது. கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவுள்ள ஆவுடையாரும் கொண்டது. திருப்புனவாசல் கோயிலில் லிங்கம் 9 அடி உயரமே உடையதென்றாலும், ஆவுடையார் 82.5 அடி சுற்றளவு கொண்டது குறிப்பிடத்தக்கது. இதனால், ஆவுடையாருக்கு வஸ்திரம் அணிவிக்கும் போது, ஒருவர் பிடித்துக் கொள்ள இன்னொருவர் ஆவுடையாரை சுற்றி வந்து கட்டி விடுவார்.

லிங்கத்திற்கு 3 முழமும், ஆவுடைக்கு 30 முழமும் வேட்டி கட்டப்படுகிறது. இதை வைத்து 'மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று' என்ற வட்டாரமொழி இப்பகுதியில் சொல்லப்படுகிறது. இங்கே முழம் என்பது 'தச்சுமுழம்' கணக்கில் எடுக்கப்படுகிறது. ஒரு தச்சுமுழம் என்பது 2.75 அடி. இங்குள்ள ஆவுடையாருக்கு 82.5 அடி நீளமுள்ள வேஷ்டி கட்ட வேண்டும். இதை உத்தேசமாக 90 அடிக்கு நெய்து விடுகிறார்கள். இந்த வஸ்திரத்தை பக்தர்கள், ஸ்பெஷல் ஆர்டர் கொடுத்து நெய்து காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக ஆவுடையை சுற்றி பலகை கட்டியிருக்கிறார்கள். இதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்கின்றனர்.

திறக்கும் நேரம்:





காலை 6- 11.30 மணி, மாலை 4- 7.30 மணி.

இருப்பிடம்:





திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வர வேண்டும். இங்கிருந்து அறந்தாங்கி வழியாக 72 கி.மீ., தூரத்தில் திருப்புனவாசல். மதுரையில் இருந்து காரைக்குடி வழியாக அறந்தாங்கி சென்று திருப்புனவாசல். அறந்தாங்கியில் இருந்து 42 கி.மீ.,

போன்:





04371-239 352






      Dinamalar
      Follow us