/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
ஜோதிர்லிங்கத்தலம் (8) - பாவம் போக்கும் ராமேஸ்வரம்
/
ஜோதிர்லிங்கத்தலம் (8) - பாவம் போக்கும் ராமேஸ்வரம்
ADDED : ஜூலை 15, 2012 10:19 AM

ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தலம் ராமேஸ்வரம். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்பும் இத்தலத்திற்கு உண்டு. புனித நீராடலுக்குரிய ஆடி அமாவாசையில் இங்கு நீராடி ராமநாதரை வழிபட்டால் பாவ நிவர்த்தி உண்டாகும்.
தல வரலாறு: சீதையை மீட்ட பின் ராவணனை கொன்ற பாவம் தீர, ராமன் சிவ பூஜை செய்ய வேண்டுமென விரும்பினார். காசி சென்று ஒரு லிங்கத்தை கொண்டு வரும்படி அனுமனிடம் கூறினார். அனுமன் காசி சென்று வர தாமதமாகி விட்டது. இதற்குள், சீதாதேவி கடற்கரை மணலில் ஒரு லிங்கம் செய்து பூஜிக்குமாறு ராமனை கேட்டுக் கொண்டாள். தான் வருவதற்குள் ஒரு லிங்கம் வடிவமைக்கப்பட்டு விட்டதை கண்ட அனுமனுக்கு வருத்தம் ஏற்பட்டது. அவர் சீதை செய்து வைத்திருந்த லிங்கத்தை வாலால் அடித்து உடைக்க முயற்சித்தார். ஆனால், லிங்கம் உடையவில்லை. ராமேஸ்வரம் மூலவர் ராமலிங்கத்தின் மீது அனுமனின் வால் பட்ட வடு இருப்பதை காணலாம். ராமன் அனுமனை சமாதானம் செய்து அவர் கொண்டு வந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். அதன் பிறகே சீதை செய்த லிங்கத்திற்கு அபிஷேகம் நடத்தினார். அனுமன் கொண்டுவந்த லிங்கம் அனுமலிங்கம் என்றும், சீதை உருவாக்கிய லிங்கம் ராமலிங்கம் என்றும் அழைக்கப்பட்டது. இங்கு அம்பிகை மலைவளர் காதலியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள்.
ஜோதிர்லிங்கம்: ராமேஸ்வரத்தில் உள்ள ஜோதிர்லிங்கம், ராவணனின் தம்பி விபீஷணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அண்ணனுக்கு உதவாமல் ராமனுடன் சேர்ந்து, அவனது இறப்பிற்கு காரணமானான் விபீஷணன். இந்த தோஷத்தைப் போக்க ராமேஸ்வரத்தில் தங்கி சிவனை வழிபட்டான். அவனுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்த சிவன் ஒரு லிங்கத்தில் ஐக்கியமானார். அதுவே ஜோதிர்லிங்கமாயிற்று.
தீர்த்தங்கள்: ராமேஸ்வரத்தில் 22 தீர்த்தங்கள் உள்ளன. இங்கு நீராடினால் பாவம் தொலைந்து முன்னோர் ஆசி கிடைக்கும். ராமேஸ்வரம் வரும் முன் தேவிபட்டணம், திருப்புல்லாணி ஆகிய இடங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடிவிட்டு, ராமநாதர் கோயிலில் நீராடவேண்டும். இங்குள்ள கடலை அக்னிதீர்த்தம் என்பர். சீதையைச் சோதித்த பாவம் தீர, அக்னி தேவன் இங்கு நீராடியதால் அக்னிதீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது. வடநாட்டையும், தென்னாட்டையும் இணைக்கும் பாலமாக இத்தலம் விளங்குகிறது.
இருப்பிடம்: மதுரையிலிருந்து 198 கி.மீ.,.
அர.சிங்காரவடிவேலன்

