ADDED : டிச 15, 2017 10:36 AM

கல்லில் கிடைத்த கல்லுக்குழி ஆஞ்சநேயரை, திருச்சி ரயில் நிலையம் அருகிலுள்ள ரயில்வே காலனியில் தரிசிக்கலாம்.
தல வரலாறு: பல்லாண்டுகளுக்கு முன் திருச்சி ரயில் நிலைய வேலைக்காக கொண்டு வந்த ஒரு கல், ஆஞ்சநேயர் வடிவில் இருந்தது. இந்தக் கல்லை, பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். ஒரு சமயம் ஆங்கிலேய ரயில்வே அதிகாரி ஆர்ம்ஸ்பி, சிலை மீது கால் தடுக்கி விழுந்தார். கோபத்துடன் சிலையை அகற்ற சொல்லி விட்டார். அன்றிரவில் அவரை நுாற்றுக்கணக்கான குரங்குகள் சூழ்ந்துகொண்டு துன்புறுத்துவது போல கனவு கண்டார். இதையடுத்து ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஆஞ்சநேயருக்கு கோயில் கட்ட அனுமதி தந்தார். அப்போது சிறியளவில் கட்டப்பட்ட கோயில், பின் பெரிதாக வளர்ந்தது.
ராமநவமி விழா: கிழக்கு நோக்கிய சன்னதியிலுள்ள ஆஞ்சநேயர், முகத்தை வடக்காக வைத்துள்ளார். வலது கண் மட்டும் தெரிகிறது. வலது கையை அபய முத்திரையாக (ஆசிர்வதிக்கும் நிலை) வைத்திருக்கிறார். இடக்கையில் பாரிஜாத மலர் இருக்கிறது. ஆஞ்சநேயர் ஜெயந்தியன்று லட்சார்ச்சனை நடக்கும். அன்று சுவாமி கேடயத்தில் பவனி வருவார். மூலம் நட்சத்திர நாளில் சுவாமிக்கு விசஷே திருமஞ்சன பூஜை நடக்கும்.
ராமநவமி விழாவின் 10 நாட்களும், ஆஞ்சநேயர் விசஷே அலங்காரத்தில் காட்சி தருவார். ராம நவமியன்று ஒன்பது யானைகள் மீது காவிரி தீர்த்தம் எடுத்து வந்து, ஆஞ்சநேயருக்கு விசஷே திருமஞ்சனம் நடக்கும்.
சுதர்சன ஹோமம்: பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார் 16 கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறார். சித்திரை நட்சத்திர நாட்களில், இவருக்கு மஹா சுதர்சன ஹோமம் நடக்கும். மன அமைதி பெற, திருமணத்தடை நீங்க, வழக்குகளில் வெற்றி பெற, உடல் ஆரோக்கியமாக இருக்க இதில் கலந்து கொள்கிறார்கள். பண்டரிபுரம் பாண்டுரங்கன், விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. திருமணத்தடை உள்ளவர்கள் நாகரை வணங்குகின்றனர்.
சனி, குரு பெயர்ச்சி காலங்களில் பரிகார ஹோமம் நடத்தப்படும். தியான மண்டபத்தில் ஆஞ்சநேயர் தவக்கோலத்தில் இருக்கிறார்.
எப்படி செல்வது: திருச்சி ரயில் நிலையம் அருகிலுள்ள ரயில்வே காலனி.
நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 4:30 - 8:30 மணி
சனிக்கிழமைகளில் மதியம் 1:30 - இரவு 11:00 மணி
தொடர்புக்கு: 94435 31110, 0431 - 246 5073
அருகிலுள்ள தலம் 5 கி.மீ.,ல் மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயில்