sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

காஞ்சி காமாட்சி! உனைக்காணும் திருக்காட்சி!

/

காஞ்சி காமாட்சி! உனைக்காணும் திருக்காட்சி!

காஞ்சி காமாட்சி! உனைக்காணும் திருக்காட்சி!

காஞ்சி காமாட்சி! உனைக்காணும் திருக்காட்சி!


ADDED : அக் 15, 2012 01:00 PM

Google News

ADDED : அக் 15, 2012 01:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு முறை சொன்னாகோடி முறை சொன்ன மாதிரி நவராத்திரி நாயகியர் மூவரின் அம்சமாக அருளுகிறாள் காஞ்சிபுரம் காமாட்சி. 'கா' மகாலட்சுமியையும், 'மா' சரஸ்வதியையும் குறிக்கும். உற்சவ காமாட்சியுடன் லட்சுமி, சரஸ்வதி இருக்கின்றனர். அம்பிகையின் திருநாமத்தை ஒருமுறை உச்சரித்தாலும் கோடி முறை சொன்ன பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் காஞ்சிபுரத்திற்கு 'காமகோடி பீடம்' என்ற பெயர் ஏற்பட்டது.இங்கு அம்மனுக்கு தங்கரதமும், தங்க கோபுரமும் உள்ளன.

பண்டாசுர வதம்:

ஒரு சிறுமியைத் தவிர வேறு யாராலும் அழிவு ஏற்படக்கூடாது என வரம் பெற்ற பண்டன் என்னும் அசுரன், தேவர்களை துன்புறுத்தினான். அவர்கள் அம்பிகையிடம் முறையிட, அவள் சிறுமியாக உருமாறி அசுரனை அழித்தாள். தேவர்களின் வேண்டுதலுக்காக காஞ்சிபுரத்தில் எழுந்தருளினாள். இவளது பெயரை 'காம+அக்ஷி' என பிரிக்க வேண்டும். 'காமம்' என்றால் 'விருப்பம்'. 'அக்ஷி' என்றால் 'கண்'. பக்தர்களின் 'காமம்' எனப்படும் விருப்பங்களை அருளும் கருணைக்கண் கொண்டவள் என்பதால் 'காமாட்சி' என பெயர் பெற்றாள்.

சங்கரருக்கு மரியாதை:

முற்காலத்தில் காஞ்சியில் இருந்த காபாலிகர்கள், அம்பிகைக்கு மிருகங்களை பலியிட்டு பூஜை செய்தனர். இதனால் அம்பாள் உக்கிரமாக விளங்கினாள். ஆதிசங்கரர் காபாலிகர்களை வெளியேற்றி, ஸ்ரீசக்ரத்தை புனருத்தாரணம் (புதுப்பித்து உருவேற்றுதல்) செய்து அம்பிகையை சாந்தப்படுத்தினார். அம்பிகையின் அருளால் 'சர்வக்ஞ பீடம்' (அனைத்தும் அறிந்தவர்) பட்டம் பெற்றார். இவருக்குபிரகாரத்தில் சந்நிதி இருக்கிறது. விழாக்களின்போது ஆதிசங்கரருக்கு முதல் மரியாதை அளிக்கப்படுகிறது.

ஸ்ரீசக்ர மகத்துவம்:

* காமாட்சி முன்புள்ள ஸ்ரீசக்ரத்திற்கே முதல் பூஜை நடக்கிறது.

* பிரம்மோற்ஸவம், நவராத்திரி காலங்களில் அம்பாளுக்கு அபிஷேகம் கிடையாது. ஸ்ரீசக்ரத்திற்கே அபிஷேகம் செய்யப்படும்.

* பவுர்ணமியன்று இரவு 10.30 மணிக்கு மேல் அம்பாள் சந்நிதியில் திரையிட்டு, ஸ்ரீசக்ரத்திற்கு 'நவ ஆவரண பூஜை' நடக்கும். நள்ளிரவு 12 மணிக்கு மேல் திரையை விலக்கி, சுமங்கலி பூஜை செய்யப்படும். இவ்வேளையில் அம்பாளையும், ஸ்ரீசக்ரத்தையும் தரிசனம் செய்வது விசேஷ பலன் தரும். நவ ஆவரண பூஜையின்போது தீர்த்தப் பிரசாதம் தருகின்றனர்.

திருவடி தரிசனம்:

கோயில்களில் அம்பிகை ஒரு காலை மடித்து, மற்றொரு காலை தொங்க விட்ட நிலையில் காட்சி தருவாள். இதனால் அம்பிகையின் பாதத்தை தரிசிக்க முடியாது. இங்கு காமாட்சி கால்களை மடித்து அமர்ந்திருப்பதால் பாதங்களை நம்மால் தரிசிக்க முடியும். பாததரிசனம் பாவ விமோசனம் தரக்கூடியது. காமாட்சியின் தலையில் சிவனைப் போல் பிறைச்சந்திரன் இருக்கிறது. உலகை ஆளும் சர்வ அதிகாரம் கொண்டவள் என்பதால் இந்தச் சிறப்பு.

அரூப லட்சுமி:

காமாட்சியம்மன் சன்னதிக்கு இடப்புறம் அரூபலட்சுமி சந்நிதி உள்ளது. விஷ்ணுவின் சாபத்தால் அரூபமாக மாறிய லட்சுமி காமாட்சியை வழிபட்டு தன் சுயவடிவம் பெற்றாள். பக்தர்கள் காமாட்சி சந்நிதியில் தரும் குங்குமத்தை அரூபலட்சுமி மீது பூசி வழிபடுகிறார்கள். சந்நிதியின் வலப்புற சுவரில் கள்வப்பெருமாள் இருக்கிறார். காமாட்சி அருளால் லட்சுமி மீண்டும் அழகு பெற்றதைக் காண வந்த விஷ்ணு ஒளிந்திருந்து பார்த்தார். அவரே கள்வர் பெருமாளாக இங்கு வீற்றிருக்கிறார். இவருக்கு அருகில் சாபம் நீங்கப் பெற்ற சவுந்தர்யலட்சுமி சந்நிதி இருக்கிறது. திருமங்கையாழ்வார் இத்தலப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். அம்பாள் கோயிலுக்குள் அமைந்த திவ்யதேசம் இது.

பங்காரு காமாட்சி:

அந்தக் காலத்தில் காஞ்சியில் பங்காரு (தங்கம்) காமாட்சி சந்நிதி இருந்தது. அந்நியர் படையெடுப்பின்போது, பாதுகாப்பிற்காக அச்சிலையை தஞ்சையில் வைத்துவிட்டனர். பின்பு அங்கேயே கோயில் எழுப்பப்பட்டது. தற்போது பங்காரு காமாட்சி சன்னதி இருந்த இடத்தில் ஸ்ரீசக்ரமும், அம்பிகையின் பாதமும் இருக்கிறது.

பூனைக்கு பிரசாதம்:

மகரிஷிகள் காமாட்சியை தினமும் பூனை வடிவில் வழிபடுவதாக ஐதீகம். எனவே, அர்த்தஜாம பூஜை முடிந்ததும், அம்பிகைக்கு படைத்த பாலை ஒரு கிண்ணத்தில் வைத்துவிடுவர். தற்போதும் இங்கு வரும் பூனை ஒன்று, பாலை பருகிவிட்டுச் செல்கிறது. ரிஷிகளே இந்த பிரசாதத்தை எடுத்துக் கொள்வதாக ஐதீகம்.

சி.வெங்கடேஸ்வரன், சிவகங்கை.






      Dinamalar
      Follow us