/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
திரும்பிய பக்கமெல்லாம் தீபங்கள் எரியட்டும்!
/
திரும்பிய பக்கமெல்லாம் தீபங்கள் எரியட்டும்!
ADDED : அக் 27, 2016 03:26 PM

* மனதில் இருக்கும் இருள் குணங்கள் அனைத்தும் விலகட்டும். சத்தியம், தர்மம், கருணை போன்ற தெய்வீக குணங்கள் திரும்பிய பக்கமெல்லாம் தீபமாய் ஒளி வீசட்டும்.
* சத்தியத்தின் இருப்பிடமே இறைவன் இருக்குமிடம். சத்தியத்தையும், உண்மையையும் கடைபிடிப்பவனிடமே கடவுளின் அருள் பரிபூரணமாக நிறைந்திருக்கும்.
* மனம் ஒரு பாலிஷ் செய்யப்பட்ட நிலைக்கண்ணாடி. அதன் மீது தூசி படியாமல் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும்.
* கடவுள் மீதான நம்பிக்கை உன்னிடம் உறுதியாக இருந்தால், எப்போதும் நேர்மையாக வாழ்வதற்கான சூழ்நிலையை அமைத்துக் கொடுத்து விடுவார்.
* கடவுளின் தொண்டனாக இருந்து உலகிலுள்ள அனைவருக்கும் தொண்டாற்று. ஆன்மிகத்திற்காக உன் வாழ்க்கையை அர்ப்பணித்திடு.
* இதுநாள் வரை இப்படி இருந்தோமே என்று சிந்திக்காமல் 'இன்று முதல் இப்படி மாற வேண்டும்” என்ற ஆர்வத்துடன் பணியாற்றுபவனே புத்திசாலி.
* விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் பாறாங்கல்லாக இருக்கும் தடை கூட தகர்ந்து விடும். வெற்றிக்கான வழி திறக்கும்.
* சுயகாலில் நிற்கப் பழகு. நேர்மை, நியாயம், அடக்கமான வீரம் இவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்கு. உன் அருகிலேயே வெற்றி
காத்திருப்பதைக் கண்டு மகிழ்வாய்.
* எண்ணம், பேச்சில் தர்மசிந்தனை இருப்பதை விட செய்யும் செயல்களில் அது வடிவம் பெற வேண்டும். அதுவே உலகிற்குப் பயனுள்ளதாக இருக்கும்.
* மலர் தன்னை வெளிப்படுத்தும் விதத்தில் திறந்தே இருக்கிறது. நீயும் அது போல வெளிப்படையானவாக இரு. உன் பார்வையில் சமத்துவமும், கருணையும் நிறைந்திருக்கட்டும்.
* கட்டுப்பாடு இன்றி மணத்தை வாரி வழங்கும் மலர் போல உயர்ந்த பண்புகளால் பிறருக்கு நன்மை செய்பவனே நல்ல மனிதன்.
* வாழ்வின் உண்மையான நோக்கம் கடவுளுக்காக அல்லது உண்மைக்காக வாழ்தல். நாம் இரண்டுக்காகவும் வாழ முயற்சிக்கலாம்.
* மனிதனாகப் பிறந்திருப்பது அரிய வாய்ப்பு. இதை தவற விட்டால் மீண்டும் பெற ஆயிரக்கணக்கான ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கலாம். அரிய இந்த பிறப்பில் நற்செயல்களில் ஈடுபட்டு வாழ்வைப் பயனுள்ளதாக்கு.
* மனித உயிர்களுக்கு மட்டும் அன்பு சொந்தமானது அல்ல. தாவரம், விலங்கும் கூட அன்புக்கு கட்டுப்பட்டு நடக்கிறது. கல், மண் போன்ற ஜடப் பொருட்களிலும் கூட அன்பைக் காணலாம்.
* மனக் கட்டுப்பாடு இல்லாதவன் மனிதனாக மாட்டான். கண்டிப்பு கலந்த நேர்மையுடன் கட்டுப்பாட்டை தேர்வு செய்தால் அது வளர்ச்சிக்கு வித்திடுவதாக அமையும்.
* சிறிய லட்சியத்தில் வெற்றி பெறுவதைக் காட்டிலும், மகத்தான பெரிய லட்சியத்திற்காக வாழ்ந்து அதில் தற்காலிகமாகத் தோல்வி அடைவது கூட மேலானது.
* தனக்கென சுயநலம் பாராட்டுவது பக்தி ஆகாது. பிறருக்காக தன்னை அர்ப்பணிப்பவனே சிறந்த பக்தன். அவனது தூய உள்ளத்தை கடவுள் விரும்பி ஏற்பதோடு வரங்களை வாரி வழங்குவார்.
தீபாவளி வாழ்த்து சொல்கிறார் ஸ்ரீஅன்னை

