ADDED : மே 19, 2011 11:25 AM

குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு கும்பகோணம் அருகிலுள்ள அம்மங்குடி துர்க்கை கோயிலில் உள்ள யோக சரஸ்வதியை வணங்கி வரலாம். இவளை வணங்கினால் கவனம் சிதறாத படிப்பைக் குழந்தைகளிடம் எதிர்பார்க்கலாம்.
தல வரலாறு: மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ததால், அன்னை துர்க்கைக்கு தோஷம் ஏற்பட்டது. இதனைப் போக்க, அவள் சிவனை எண்ணி தவமிருந்தாள். பூலோகத்திலுள்ள தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, விநாயகர் மற்றும் சிவலிங்கம் ஸ்தாபித்து தியானம் செய்தாள். 12 ஆண்டுகள் தவம் தொடர்ந்தது. தவத்தினால் மகிழ்ச்சியடைந்த சிவன் அம்பாள் முன்தோன்றி, ''உன்தோஷம் நீங்கி விட்டது. இத்தலத்திலேயே தங்கி, உன்னை தரிசிப்பவர்களின் சகல தோஷங்களையும் நீக்கி, அவர்கள் வேண்டும் செயல்களுக்கு வெற்றியை அருள்வாயாக', என்று வரமளித்தார். தேவி தவம் செய்த இடம் 'தேவி தபோவனம்' எனப்பட்டது. பிற்காலத்தில், அம்மன் குடியிருக்க தேர்ந்தெடுத்த இடம் என்ற பொருளில் 'அம்மன்குடி' என்றாகி, பேச்சு வழக்கில் 'அம்மங்குடி' ஆகி விட்டது. முதலாம் ராஜராஜசோழ மன்னனின் படைத்தலைவர் கிருஷ்ணன் ராமன் பிரம்மராயன் இவ்வூரில் பிறந்தவர். இவரே தங்கள் ஊரில் தங்கிய அம்பாளுக்கு கோயில் கட்டினார். ராஜராஜேஸ்வரியான துர்கா தேவி தங்கியதால் இவ்வூருக்கு, 'ராஜராஜேஸ்வரம்' என்று பெயர் வைத்தார். மன்னர் ராஜராஜ சோழனின் மீது அன்பு கொண்டவர் என்பதால், அவரது பெயரை வைத்ததாகவும் கூறுவர். அம்பாளுக்கு 'துர்கா பரமேஸ்வரி' என்ற பெயர் சூட்டப்பட்டது.
அம்பாள் பூஜித்த லிங்கமும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு 'கைலாசநாதர்' என்று திருநாமம் சூட்டப்பட்டது.
சிறப்பம்சம்: துர்கா பரமேஸ்வரி எட்டு கரங்களுடன், சிம்மவாகனத்தில் மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில் அருள்பாலிக்கிறாள். 'எதிரியை அழிப்பதே உன்னுடைய அமைதியான வாழ்க்கைக்காகத்தான்' என்று பக்தர்களுக்கு அறிவிப்பது போல முகத்தில் சாந்தம் நிறைந்த புன்னகை தவழ்கிறது. அம்பாளின் கைகளில் சூலாயுதம், சங்கு, சக்கரம், கேடயம், வில், கத்தி, அம்பு, மகிஷாசுரன் தலை ஆகியவை உள்ளன.இவ்வூருக்கு கேரளாந்தக சதுர்வேதமங்கலம், நாராயணபுரம் என்ற பெயர்களும் இருந்தன.
ஸ்காந்த புராண ÷க்ஷத்திரகாண்டம், 66வது அத்தியாயத்தில் சூதபுராணிகர், அம்மங்குடி கைலாசநாதர் குறித்து கூறியுள்ளார். துர்காஷ்டமி அன்று துர்கா தேவி வீதி உலா சென்று மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. சூரியன், சனீஸ்வரர், பைரவர் சன்னதிகளும் உள்ளன.
கிழமைக்கு ஒரு பலன்: செவ்வாய், அமாவாசை, அஷ்டமி, பவுர்ணமி, நவராத்திரி தினங்களில் கோயிலை வலம் வந்து வழிபடுபவர்களுக்கு திருமணத்தடை, ராகுகேது தோஷங்கள் நிவர்த்தியாகும். செல்வ அபிவிருத்திக்கு வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை, குழந்தை பாக்கியம் கிடைக்க திங்கள்கிழமை, பிணி அகல, வழக்குகளில் வெற்றி பெற, பகை நீங்க, வேலைவாய்ப்பு கிடைக்க செவ்வாய்க்கிழமை ராகுகாலம், ஆயுள் பலம் பெற சனிக்கிழமைகளில் துர்கா பரமேஸ்வரியை வணங்கி வரலாம்.
குழந்தைகளுக்கான வழிபாடு: கல்விக் கடவுளான சரஸ்வதி வீணையுடன் அருள்பாலிப்பது வழக்கம். இங்குள்ள 'யோக சரஸ்வதி' வீணையின்றி யோக நிலையில் இருக்கிறாள். இவளை வழிபட்டால் மனம் ஒருமுகப்படும். இதன் மூலம் கல்வியில் மேன்மை உண்டாகும். இவ்வாண்டு குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உள்ளவர்கள், இந்த சரஸ்வதியை வழிபட்டு வந்தால், அவர்களுக்கு படிப்பில் கவனமும் ஸ்திரத்தன்மையும் ஏற்படும்.
திருவிழா: நவராத்திரி, எட்டாம் நாள் வளர்பிறை அஷ்டமி (துர்கா அஷ்டமி) மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி.
திறக்கும் நேரம்: காலை 7.30- பகல் 12.30 மணி, மாலை 4-இரவு 8.30 மணி.
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரம், உப்பிலியப்பன்கோயில் வழியாக வடகரை செல்லும் ரோட்டில் 15 கி.மீ., தூரம்.
போன்: 94430- 46255, 94439-32983, 0435- 246 7167.

