/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே!
/
தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே!
ADDED : பிப் 02, 2020 12:40 PM

சிறப்பு மிக்க தஞ்சைத்தரணி
தஞ்சாவூரைத் தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்யப்பட்ட பகுதி சோழ நாடு. தஞ்சை என்பதற்கு ' குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி' என பொருள். பெருகி வரும் காவிரியாற்றால் இப்பகுதி வளம் மிக்கதாக திகழ்ந்தது. இவ்வூர் பற்றிய குறிப்புகள் திருச்சி மலைக்கோட்டை பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவின் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. தஞ்சையில் கோயில் கட்டப்படுவதற்கு முன் 'தஞ்சை தளிக்குளத்தார் கோயில்' இங்கு இருந்தது. தற்போதும் இங்கு தஞ்சபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் பெயராலேயே 'தஞ்சாவூர்' என பெயர் ஏற்பட்டது.
தமிழகத்தின் பாரம்பரியச் சின்னம்
1987ல் யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக தஞ்சை பெரிய கோயிலை அறிவித்தது. இதன் மூலம் இக்கோயிலின் பெருமை உலகெங்கும் பரவத் தொடங்கியது. மனித மரபினை, பண்பாட்டினைப் பறைசாற்றும் கலைப்பொக்கிஷமாகத் திகழும் இக்கோயிலைக் காண வெளிநாட்டவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதை பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவிக்க காரணங்கள்:
1. பொதுவாக பெரிய கோயில்களை பல மன்னர்கள் பல்வேறு காலத்தில் கட்டுவர். ஆனால் இக்கோயில் ராஜராஜசோழனால் மட்டுமே பிரம்மாண்டமாக எழுப்பப்பட்ட கோயிலாகும்.
2. ஒரே தன்மையான செந்நிறக்கற்களால் அமைந்த திருக்கற்றளி கோயிலாக அமைந்தது. (கற்களால் ஆன கோயில்களை கற்றளி என்பர்)
3. கருவறைக்கு மேலே உயரமான விமானம் அமைத்தது மாறுபட்ட அமைப்பாக இருந்தது.
4. புவியீர்ப்பு மையத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது.
5. ராஜராஜசோழன், கோயிலை தானே கட்டியதற்கான ஆதாரத்தை கல்வெட்டில் பொறித்ததோடு எந்தெந்த வகையில் பொருள் வந்தது, கோயிலுக்கு யாருடைய பங்களிப்பு, கும்பாபிேஷகம் நடத்திய வரலாறு ஆகியவற்றை கல்வெட்டில் பொறித்துள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
6. கற்றளியால் அமைந்த விமானம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டது.
7. தஞ்சை பெரிய கோயில் ஒரு வழிபாட்டுத்தலமாக திகழ்வது மட்டுமல்லாமல், தமிழகத்தின் வரலாறு, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் பெட்டகமாகத் திகழ்கிறது.
பிரம்மாண்டமான சிவலிங்கம்
கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிகப் பெரியது. ஆறடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரம், 23 1/2 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தைச் சுற்றி வர இடமும் உள்ளது. நமது பார்வையில் தென்படுவது சிவலிங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிேஷகம், ஆராதனை நடத்த இருபுறங்களிலும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோமுகத்தை தாங்கும் பூதகணம்
கருவறையில் அபிஷேக தீர்த்தம் வெளிவரும் நிர்மால்யத் தொட்டி இங்கு வித்தியாச மானதாகும். விமானத்திற்கு வடக்குப்புற அடிபாகத்தில் உள்ள கோமுகத்தை பூதகணம் ஒன்று தாங்குகிறது. எதையும் பிரம்மாண்டமாகவும், வித்தியாசமாகவும் செயல்படுத்துபவர் ராஜராஜன் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
நினைத்தது நிறைவேற...
இந்த கோயில் ராஜராஜசோழனால் ஆத்மார்த்தமாக கட்டப்பட்ட கோயில் என்பதால், இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால் நிறைவேறும். கன்னியர் பிரார்த்தனை செய்தால் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மூலவரான பெருவுடையாரை வழிபட்டால் மனஅமைதி கிடைக்கும். பிரதோஷத்தன்று நந்தி அபிஷேகத்தை தரிசித்தால் நினைத்தது நிறைவேறும்.
25 டன் எடையுள்ள நந்தி
தஞ்சாவூர் என்றாலே அங்குள்ள விமானமும், நந்தியும் நினைவிற்கு வரும். ஒரே கல்லால் செய்யப்பட்ட நந்திகளில் இதுவும் ஒன்று. திருச்சி அருகிலுள்ள பச்சை மலையிலிருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல்லால் ஆன இது, 19 1/2 அடி நீளம், 8 3/4 அடி அகலம், 12 அடி உயரம் கொண்ட இதன் எடை 25 டன். விஜய நகரக் கலை பாணியில் அழகும், கம்பீரமும் கொண்டு அமைந்துள்ள இந்த நந்தி தஞ்சை நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்டது.
நந்தி, நந்தி மண்டபத்தை 17ம் நுாற்றாண்டில் நாயக்க மன்னர்களான அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகியோர் உருவாக்கினர். இவர்களது சிலைகள் இந்த மண்டபத்தில் உள்ளது. நந்தி மண்டபத்தின் மேல் விதானத்தில் மூன்றாம் சிவாஜி மன்னர் காலத்தில் பூக்களும், பறவைகளும் ஓவியங்களாக தீட்டப்பட்டன.