sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மலையில் குடியிருக்கும் மாருதி

/

மலையில் குடியிருக்கும் மாருதி

மலையில் குடியிருக்கும் மாருதி

மலையில் குடியிருக்கும் மாருதி


ADDED : செப் 23, 2016 10:34 AM

Google News

ADDED : செப் 23, 2016 10:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை அருகிலுள்ள வாடிப்பட்டி பொன் பெருமாள் மலையில், மாருதி என அழைக்கப்படும் ஜெயவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

புரட்டாசி சனிக்கிழமையன்று இவரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.

தல வரலாறு: ராமருக்கும், ராவணன் மகனான இந்திரஜித்துக்கும் இலங்கையில் போர் நடந்தது. இந்திரஜித் விஷம் மிக்க நாகபாசத்தை ராமரின் வானரப்படை மீது ஏவினான். அனைவரும் மூர்ச்சையடைந்தனர். கரடிகளின் தலைவனான ஜாம்பவான் அறிவுரைப்படி, வானரங்களின் உயிரைக் காப்பாற்ற மூலிகைகள் அடங்கிய சஞ்சீவி மலையை எடுத்து வந்தார். வழியில் அதன் ஒரு பகுதி பூமியில் விழுந்தது. அதுவே பொன் பெருமாள் மலையாக விளங்குகிறது. ஆஞ்சநேயர் சுமந்து வந்த மலை என்பதால் அவருக்கு இங்கு கோவில் அமைக்கப்பட்டது. சுவாமிக்கு ஜெயவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் என பெயர் சூட்டப்பட்டது.

மலைக்கோவில்: மலையடிவாரத்தில் சீனிவாசப்பெருமாள் கோவில் உள்ளது. 562 படிகள் ஏறினால் மலை மீதுள்ள ஆஞ்சநேயர் கோவிலை அடையலாம்.

ஆஞ்சநேயர் ஆறடி உயரம் உள்ளவர். வலது கையில் சஞ்சீவி மலையும், இடது கையில் கதாயுதமும் ஏந்தியுள்ளார். இவருக்கு துளசிமாலை சாத்தி 12 முறை வலம் வந்து வழிபட்டால் நினைத்தது விரைவில் நிறைவேறும். புரட்டாசி சனியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். தல விருட்சமான வில்வமரம் சிவ அம்சமாக கருதப்படுகிறது. ஆஞ்சநேயர் சன்னிதி அருகில் ராமர் பாதம் உள்ளது. சனிக்கிழமை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுகின்றனர். மலையைச் சுற்றி 3 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்க உள்ளனர்.

சீனிவாசப் பெருமாள்: மலை அடிவாரத்திலுள்ள சீனிவாசப்பெருமாள், திருப்பதி சீனிவாசர் போல தோற்றம் கொண்டுள்ளார். இவர் நந்தகம் என்னும் வாளை தாங்கி இருப்பது வித்தியாசமானது. பெருமாள் நேர் எதிரில் கை கூப்பிய நிலையில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்சவர் சீனிவாசர் காட்சி தருகிறார். பெருமாளுக்கு தை மாதத்தில் நடக்கும் திருக்கல்யாணத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் மாலை வரவழைக்கப் படுகிறது.

குலசேகரன் கோட்டை: மதுரையை ஆட்சி செய்த குலசேகரப் பாண்டியன் நாட்டின் மேற்கு எல்லையை நிர்ணயம் செய்து கோட்டை அமைக்க விரும்பினான். மன்னரது கனவில் தோன்றிய பெருமாள் இந்த மலையை எல்லையாகச் சுட்டிக் காட்டினார். அதன்படியே இங்கு கோட்டை அமைக்கப்பட்டது. தற்போது இந்த இடம் குலசேகரன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. மலை மீதுள்ள ஆஞ்சநேயருக்கு வழிபாடு செய்யவும், அங்குள்ள கல் தூணில் நெய் விளக்கேற்றவும் மன்னர் உத்தரவிட்டார்.

இருப்பிடம்: மதுரை-திண்டுக்கல் சாலையில் 30 கி.மீ. தூரத்தில் வாடிப்பட்டி. இங்கிருந்து குலசேகரன்கோட்டை செல்லும் வழியில் 1கி.மீ. தூரத்தில் கோவில்.

நேரம்: பெருமாள் கோவில்: காலை 7:00 - 9:00, மாலை 4:00 - இரவு 9:00 மணி.

ஆஞ்சநேயர் கோவில்: மாலை 4:30 - இரவு 7:00 மணி, புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவில் காலை 7:00 - 9:00 மணி.

அலைபேசி: 94426 14461, 98421 13873.






      Dinamalar
      Follow us