sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மலை மீது தாயார்... கீழே பெருமாள் காரமடையில் தரிசிப்போம்.....

/

மலை மீது தாயார்... கீழே பெருமாள் காரமடையில் தரிசிப்போம்.....

மலை மீது தாயார்... கீழே பெருமாள் காரமடையில் தரிசிப்போம்.....

மலை மீது தாயார்... கீழே பெருமாள் காரமடையில் தரிசிப்போம்.....


ADDED : ஆக 19, 2016 02:23 PM

Google News

ADDED : ஆக 19, 2016 02:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மலை மீது பெருமாளும், கீழே தாயாரும் காட்சி தருவது திருப்பதியில். ஆனால் தாயார் மலை மேலும், பெருமாள் கீழேயும் இருக்கும் தலம் கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் ரங்கநாதர் கோவில். இங்கு சுவாமி சதுரவடிவில் வீற்றிருக்கிறார். இங்கு கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி ஆக.26ல் திருமஞ்சனமும், 27ல் உறியடி உற்ஸவமும் நடக்கிறது.

தல வரலாறு: ஒரு சமயம் கருடாழ்வாருக்கு திருமாலின் திருமணக்கோலம் காண வேண்டுமென்ற ஆசை எழுந்தது. அதை திருமாலிடம் தெரிவிக்க, சுவாமி பூலோகத்தில் இத்தலத்தில் திருமணக்கோலம் காட்டிஅருளினார். அந்த இடத்திலேயே சுயம்புமூர்த்தியாக எழுந்தருளினார். இப்பகுதி காரை மரங்கள் அடர்ந்த வனமாக இருந்தது. இங்கு வசித்த ஒருவர் பசுக்களை மேய்த்து வந்தார். அதில் ஒரு பசு குறிப்பிட்ட காரை மரத்தின் அடியில் இருந்த புதர் மீது தினமும் பால் சொரிவதைக் கண்டார். அப்புதரை வெட்டிய போது ரத்தம் பீறிட்டது. சுவாமி அந்த இடத்தில் தான் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருப்பதை அசரீரியாகத் தெரிவித்தார். அதனடிப்படையில் பிற்காலத்தில் இங்கு கோவில் கட்டப்பட்டது.

சதுர வடிவ மூலவர்: மூலவர் சதுர பீட வடிவில் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இவருக்கு ரங்கநாதர், வெங்கடேசப்பெருமாள் என்ற பெயர்கள் உண்டு. தாயார் ரங்கநாயகி. இங்கு பிரம்ம, கருட தீர்த்தங்கள் உள்ளன. முன் மண்டபத்தில் ருக்மிணி, சத்யபாமாவுடன் வேணுகோபாலர் சன்னிதி உள்ளது.

பிரகாரத்தில் சந்தான கிருஷ்ணர், பரவாசுதேவர், நாகர், ராமானுஜர் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. சுவாமி சன்னிதியின் இடப்புறம் உள்ள ஆஞ்சநேயர் சுவாமியை பார்த்தபடி இருக்கிறார். இவரது சிலை பெரிய சதுரக்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.

மலை மீது தாயார்: திருப்பதியில் வெங்கடாஜலபதி மலையிலும், அலர்மேலு மங்கைத் தாயார் அடிவாரத்திலும் உள்ளனர். ஆனால் இங்கு பெருமாள் கீழேயும், அருகிலுள்ள மலை மீது தாயாரும் வீற்றிருக்கின்றனர். இந்த தாயாரை பெட்டத்தம்மன் என அழைக்கின்றனர். மாசி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளில், கோவிலில் இருந்து அர்ச்சகர் மலைக்கோவிலில் உள்ள தாயாரை கும்பத்தில் ஆவாஹனம் செய்து (எழுந்தருளச் செய்து) அடிவாரக் கோவிலுக்கு கொண்டு வருவார். அக்கும்பத்தை கருவறையில் வைத்து பூஜை நடத்துவர். மறுநாள் அதிகாலையில் திருக்கல்யாண வைபவம் நடக்கும்.

ரங்கநாதருக்கு வலப்புறத்தில் ரங்கநாயகிக்கு பிற்காலத்தில் தனி சன்னிதி கட்டப்பட்டது. ராமானுஜர் தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திலுள்ள திருநாராயணபுரத்திற்கு சென்ற போது இங்கு சுவாமியை வழிபட்டுச் சென்றதாக கூறுகின்றனர்.

ராமபாண ஆசிர்வாதம்: பெருமாள் கோவிலில் பிரதானமாக இருப்பது சடாரி சேவை. இதில் திருமாலின் பாதம் இடம் பெற்றிருக்கும். இதை பக்தர்களின் தலையில் வைத்து ஆசிர்வதிப்பர். இங்கு பக்தர்களுக்கு சடாரி வைக்கப்படுவதில்லை. மாறாக, ராம பாணத்தால் ஆசியளிக்கின்றனர். இதற்குள் திருமாலின் ஆயுதமான சக்கரம், ஆதிசேஷன் வடிவம் உள்ளன.

சேவை வழிபாடு: மாசி பிரம்மோற்ஸவத்தில் மகம் நட்சத்திரத்தன்று பெருமாள் சுவாமி தேரில் எழுந்தருள்வார். தேர் நிலைக்கு வந்ததும், பக்தர்கள் தேன், பழம், கற்கண்டு, சர்க்கரை, தேங்காய் ஆகிய பொருட்கள் கலந்த பிரசாதத்தை ஏந்தி, 'ரங்கன் வருகிறான், கோவிந்தன் வருகிறான்,' எனச்சொல்லி ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வர். இதனை 'கவாள சேவை' என்று பெயர். அப்போது சுவாமியின் பாதத்தில் தண்ணீர் விடும் 'தண்ணீர் சேவை', கையில் பந்தம் ஏந்திக்கொண்டு சுவாமியை வணங்கும் 'பந்த சேவை' ஆகியவற்றையும் பக்தர்கள் வேண்டுதலாகச் செய்வர். சுயம்புவாக பெருமாள் இருந்ததைக் கண்ட போது இந்த சேவைகள் செய்ததன் அடிப்படையில் தற்போதும் இது வழக்கில் உள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி விழா: இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா இரண்டு நாள் நடக்கிறது. ஆக.26 மாலை 6.00 மணிக்கு பெருமாளுக்குத் திருமஞ்சனமும், 27 மாலையில் உறியடி உற்ஸவமும் நடக்கிறது. இக்கோவிலின் துணைக் கோவிலான சந்தான வேணுகோபாலர் கோவில் அருகில் உள்ளது. அங்கும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாசி திருவிழாவில் கிருஷ்ணரை குழந்தையாக பல வடிவங்களில் அலங்கரிப்பார்கள்.

இருப்பிடம் : கோவை - மேட்டுப்பாளையம் வழியில் 30 கி.மீ.,

நேரம்: காலை 5:30 - மதியம் 1:00, மாலை 4:00 - இரவு 9:00 மணி

தொலைபேசி: 04254 - 272 318, 273 018.






      Dinamalar
      Follow us