சிவனுக்கு எதிரிலுள்ள நந்தி சிவனை நோக்கியபடி இருப்பதே வாடிக்கை. ஒரு சில கோயில்களில் மட்டும் கோயில் வாசலைப் பார்த்து இருக்கும். அதில் ஒன்று, கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோயில்.
தல வரலாறு: தேவலோகத்தில் சிவபூஜை செய்ய பூலோகத்து பூக்கள் தேவைப்பட்டது. தேவகன்னியர் இருவரை தேவேந்திரன் பூலோகத்திற்கு அனுப்ப, பூக்களை பறித்து வரச் சொன்னான். அவர்கள் ஒரு தோட்டத்தில் நுழைந்த போது, அங்கிருந்த லிங்கத்தைக் கண்டதும், அங்கிருந்த பூக்களால் அவருக்கு பூஜை செய்து அங்கேயே தங்கி விட்டனர்.
கன்னியரைக் காணாத இந்திரன் அவர்களை அழைத்து வர காமதேனு பசுவை அனுப்பினார். அது பூலோகம் வந்ததும் கன்னியர் செய்யும் பூஜையைக்கண்டு தானும் அவர்களுடன் சேர்ந்து ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து, அங்கேயே தங்கி விட்டது. மீண்டும், தன் ஐராவத வெள்ளையானையை அனுப்பினான் இந்திரன். யானையும் அவர்களுடனயே தங்கி விட்டது. பொறுமை இழந்த இந்திரன் பூமிக்கு வந்து அவனும் பூஜை செய்ய ஆரம்பித்து விட்டான். சிவனருள் பெற்று அனைவருடனும் தேவலோகம் சென்றான்.
பிரளயகாலேஸ்வரர்: உலகம் சிவபெருமானால் அழிக்கப்பட்ட போது, சில தலங்கள் வெள்ளத்தில் மூழ்காமல் தப்பின. அவ்வூரில் இதுவும் ஒன்று. இதையறிந்த தேவர்கள் இங்கு வந்து, உயிர்களை இத்தலத்தில் வைத்து காக்கும்படி வேண்டினர். சிவனும் நந்தியிடம் வெள்ளத்தை தடுக்க ஆணையிட்டார். சிவனைப் பார்த்திருந்த நந்தி, ஊரை நோக்கி திரும்ப வெள்ளத்தை திசை மாறியது. எனவே இங்குள்ள இறைவன் பிரளயகாலேஸ்வரர் எனப்பட்டார். அம்மனுக்கு அழகிய காதலி, ஆமோதனாம்பாள், கடந்தை நாயகி என்ற பெயர்கள் உண்டு.
கலிக்கம்பர்: நாயன்மார்களில் ஒருவரான கலிக்கம்பர் தன் மனைவியுடன் இணைந்து, வீட்டிற்கு வரும் சிவனடியார்களுக்கு பாத பூஜை செய்து வந்தார். ஒருமுறை அவரது மனைவி, சிவனடியார் ஒருவருக்கு பாத பூஜை செய்ய மறுத்து விட்டார். கோபம் கொண்ட கலிக்கம்பர் மனைவியின் கையை வெட்டி விட்டார். கருணைக்கடலான் ஈசன் அந்த பெண்ணின் கையை மீண்டும் தந்தார்.
மலைக்கோயில்: சோழமன்னன் ஒருவன் இறைவனை தரிசிக்க இத்தலம் வரும்போது ஆற்றில் வெள்ளம் வந்தது. ஆற்றின் கரையில் இருந்தபடி சிவனை வேண்டிய போது, அவனுக்காக தன் இருப்பிடத்தை உயர்த்தி கரையில் இருந்தபடியே தரிசனம் கிடைக்கச் செய்தார். இப்போதும், 30 மீட்டர் உயரத்தில் உள்ள கட்டு மலைக்கோயில் என்ற மேட்டுப்பகுதி உள்ளது. மெய்கண்டார் அவதரித்ததும், மறைஞான சம்பந்தர் வாழ்ந்ததும் இங்கு தான். கருவறையைச் சுற்றிலும் மூன்று பலகணிகள் அமைக்கப்பட்டுள்ளதால், மூலஸ்தானத்திற்கு வெளியே எங்கு நின்றாலும் சுவாமியை வணங்கலாம்.
பெயர்க்காரணம்: கன்னியர்களாகிய பெண், காமதேனுவாகிய ஆ, யானையாகிய கடம் ஆகியோர் இங்கு பூஜை செய்ததால் இத்தலம் பெண்ணாகடம் ஆனது. தற்போது பெண்ணாடம் எனப்படுகிறது.
இருப்பிடம் : விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ., திட்டக்குடியில் இருந்து 12 கி.மீ.,
திறக்கும் நேரம்:காலை 6 -11, மாலை 5 - இரவு 9.
போன்: 04143-222 788, 98425 64768

