ADDED : ஜூன் 26, 2016 12:15 PM

நவக்கிரகங்களுக்கு நடுவில் நந்தியை தரிசிப்பது அரிய காட்சியல்லவா! இதற்காக நீங்கள் செல்ல வேண்டிய தலம் தஞ்சாவூர் மாவட்டம் பசுபதி கோவில் ஆகும்.
தல வரலாறு: பசுபதி கோவிலிலுள்ள மரத்தின் கீழ் இருந்த ஒரு சுயம்பு சிவலிங்கம் (தானாக தோன்றிய லிங்கம்) மீது இலை தழைகள் விழுந்தன. பறவைகள் எச்சமிட்டன இதைப் பார்த்த சிலந்தி, வலை பின்னி லிங்கத்தின் மீது தூசு படாமல் பாதுகாத்தது. சிலந்தியின் நோக்கம் அறியாத யானை ஒன்று, சிலந்தி வலை பின்னி லிங்கம் இருக்கும் இடத்தை பாழாக்குகிறதே என எண்ணி, தன் தும்பிக்கையில் கொண்டு வந்த காவிரி நீரை வலை மீது ஊற்றி அதை அறுத்தது. கோபமடைந்த சிலந்தி, யானையின் துதிக்கையில் புகுந்து கடித்தது. வலி தாங்காத யானை துதிக்கையை தரையில் அடிக்கவே சிலந்தி இறந்தது. யானையும் வலி தாங்கமால் இறந்து விட்டது.
சிவபதமடைந்த அந்த ஜீவன்களில் சிலந்தி, கோச்செங்கட்சோழ மன்னனாக மறு பிறவி எடுத்தது. இந்த மன்னன் யானை ஏற முடியாத கோவில்கள் சிலவற்றை அமைத்தான். இவை மாடக்கோவில்கள் எனப்பட்டன. இவ்வகை கோவிலே பசுபதி கோவிலாகும்.
பசுக்களாகிய மக்களைக் காக்கும் பதியான (தலைவன்) சிவன் என்ற அடிப்படையில் சுவாமிக்கு பசுபதீஸ்வரர் என்று பெயரிடப்பட்டது. அம்பாளுக்கு சவுந்தர நாயகி என்றும், அல்லியங்கோதை என்றும் பெயருண்டு.
சிறப்பம்சம்: இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி, கருங்கல் குடை நிழலில், எருமைத் தலைமீது நின்று, பல ஆயுதங்களைத் தாங்கியிருக்கிறாள். இருவீரர்கள் கத்தியால் தங்கள் தலையை அரிந்து அம்பாளுக்கு காணிக்கையாக்குவது போன்ற சிற்பம் குறிப்பிடத்தக்கது. ஒரு கையில் வில் ஏந்தியிருக்கிறாள். இத்தகைய சிற்பத்தை காண்பது அரிது. இங்கு நவக்கிரக சன்னிதியில் கிரகங்களுக்கு நடுவில் நந்தி இருப்பது விசேஷமான அம்சம். எந்த கிரகமும் சிவனின் காவலரான நந்தியை மீறி பக்தர்களுக்கு கெடுதல் செய்யாது என்பது நம்பிக்கை. நம் கோரிக்கையை நந்தியிடம் வைத்து விட்டால் கிரகக் கோளாறை நீக்கி அருள் செய்வார்.
கோவிலை மேடாக கட்டிய காரணம் காவிரியிலும், அதன் உபநதிகளிலும் அணைகள் உள்ள இக்காலத்திலேயே தஞ்சை டெல்டா சில சமயங்களில் வெள்ளம் அச்சுறுத்தி விடுகிறது. அந்தக் காலத்தில் காவிரி வெள்ளம் சீறிப்பாய்ந்து இப்பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியது. பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. இந்த தகவல்களை இவ்வூர் அருகிலுள்ள திருசக்கரப்பள்ளியில் உள்ள சுந்தரசோழன் கல்வெட்டுக்களில் பதிவு செய்துள்ளனர். வெள்ள காலத்தில் மக்கள் தங்கவும் இதுபோன்ற மேடான மாடக்கோவில்கள் கட்டப்பட்டதாகவும் சிலர் சொல்கின்றனர்.
இருப்பிடம்: தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் 14 கி.மீ. தூரத்தில் பசுபதிகோவில். பஸ் ஸ்டாப்பில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் கோவில்.
நேரம்: காலை 6.00 - 11.00 மணி, மாலை 4.00 - இரவு 8.30 மணி.

