ADDED : டிச 22, 2017 10:54 AM

முகத்தில் அம்பு பட்ட வடுக்களுடன், ஆயுதம் ஏதும் இல்லாமல், முறுக்கு மீசையுடன் காட்சியளிக்கும் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பிரசித்தம். இந்நாளில் அவரது திருவடியை தரிசித்தால், சகல சவுபாக்கியமும் கிடைக்கும்.
தல வரலாறு: சுமதி என்னும் அரசன் திருப்பதி ஏழுமலையானிடம் பக்தியுள்ளவன். அவன் ஏழுமலையானை கிருஷ்ணனாக காண வேண்டும் என்று விரும்பினான். அவனுக்காக ஏழுமலையான், பாரதப் போரில் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்த திருக்கோலத்தில் காட்சியளித்தார். போரில் ஆயுதம் எதையும் எடுப்பதில்லை என்று செய்த சபதத்திற்கு ஏற்ப, ஒரு கையில் சங்கு மட்டுமே ஏந்தி இருக்கிறார்.
பாரதப்போரில் அர்ஜுனன் மீது பீஷ்மர் தொடுத்த அம்புகளையெல்லாம், தானே முன்னின்று ஏற்றுக் கொண்டதை விளக்கும் வகையில், சுவாமியின் முகத்தில் அம்பு பட்ட வடுக்களைக் காணலாம்.
அர்ஜுனனுக்கு 'பார்த்தன்' என்ற பெயருண்டு. அவனுக்கு சாரதியாக விளங்கியதால் பார்த்தசாரதி என்ற பெயர் வந்தது.
பாரதியார்: முத்துசாமி தீட்சிதர், பாரதியார் இத்தலம் குறித்து பாடியுள்ளனர். பாரதியார் பாடிய கண்ணன் பாடல்கள் அனைத்தும் இப்பெருமாளைப் பற்றியது.
சிறப்பம்சம்: இங்குள்ள தாயாரை வேதவல்லி என்பர். இவரைத் திருமணம் செய்து கொள்ள, ஸ்ரீரங்கத்தில் இருந்து ரங்கநாதர் இத்தலத்திற்கு எழுந்தருளினார். ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், அகோபிலம், அயோத்தி ஆகிய ஐந்து திவ்ய தேசத்து பெருமாள்கள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். ஐவருக்கும் தனித்தனியே உற்சவம் உண்டு.
மீசை பெருமாள்: பார்த்தசாரதியின் இடது கை, அவரது திருவடியை காட்டுகிறது. இவர் கீதை உபதேசம் செய்தவர் என்ற சிறப்பு வாய்ந்தவர். 9 அடி உயரத்தில், தேர் சாரதிக்குரிய மீசையோடு இருக்கிறார். மீசை வைத்த பெருமாளை இங்கு மட்டுமே காண முடியும். இந்தச் சிலை மகாபாரத ஆசிரியர் வியாசரிடம் இருந்தது. ஆத்ரேய முனிவரிடம் கொடுத்து, இங்கு பிரதிஷ்டை செய்யச் சொன்னார் வியாசர்.
துளிகள்
* ஆழ்வார்களால் பாடல் பெற்ற திவ்ய தேசம்
* நைவேத்தியத்தில் கடலை எண்ணெய், மிளகாய் சேர்ப்பதில்லை.
* ஒரு காலத்தில் துளசிக் காடாக(பிருந்தா ஆரண்யம்) இருந்தது.
* 2000 ஆண்டு பழமையான தலம்.
* பல்லவ, சோழர்கள் திருப்பணி செய்துள்ளனர்.
* இங்குள்ள நரசிம்மரை வணங்கினால் கல்வியில் சிறந்த ஞானம் கிடைக்கும்.
எப்படி செல்வது: சென்னை எழும்பூரில் இருந்து 4 கி.மீ.,
விசேஷ நாட்கள்: பார்த்தசாரதி லட்சார்ச்சனை -பிப்ரவரியில்- 10 நாள். ஏப்ரலில் 10 நாள்
பிரம்மோற்ஸவம்-. வைகுண்ட ஏகாதசி.
நேரம்: அதிகாலை 5:30 - 1:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 044 - 2844 2449
அருகிலுள்ள தலம்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்