ADDED : டிச 31, 2010 03:10 PM

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா ! தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா !
* கடவுளைத் தாயாகவும், தந்தையாகவும், குழந்தையாகவும் அவரவருக்குரிய ஏற்ற நிலையில் தியானிக்கலாம். இருந்தாலும் தாய்வடிவில் வணங்குவதே மிகவும் எளிதான வழியாகும். அன்னையிடம் நமக்கு வேண்டிய அனைத்தையும் கேட்டுப் பெற முடியும்.
* நாள்தோறும் தியானம் செய்வது அவசியம். தியானத்தால் மனம் ஒருமுகப்படுகிறது. மனம் தூய்மை பெற்று வாழ்வு மேம்படுகிறது. உள்ளம் உருகுவதால் மனம் பக்தியில் ஈடுபடுகிறது. ஆண்டவன் அருள் பூரணமாகக் கிடைக்கிறது.
பரஸ்பர நம்பிக்கை, நன்னடத்தை, நல்லொழுக்கம் ஆகியவையே வெற்றிக்கான வழிகள். நல்ல குணங்கள் யாவும் ஒன்றையொன்று சார்ந்தவையாக இருக்கின்றன. இதனால் ஒன்றை விடுத்து ஒன்றை வாழ்வில் பின்பற்ற முடியாது. சிலர் தடைகளையோ, சிரமங்களையோ சந்தித்தவுடன் மனம் தடுமாறி கொள்கையை மறந்து விடுகின்றனர். ஒரு கொள்கையை ஏற்றுக்கொண்டால் விளைவுகள் எப்படி இருந்தாலும், அதிலிருந்து பின்வாங்குதல் கூடாது.
* உயிர் வாழ உணவு எவ்வளவு அவசியமோ, அதுபோல மனிதன் சுதந்திரமாக வாழவேண்டுமானால், தியாகவுணர்வு மிகவும் அவசியம். அரசியல் தகப்பனாரைப் போன்றது. தர்மம் தாயாரைப் போன்றது. இரண்டும் இணைந்து இருந்தால் அதுவே நல்லறம்.
* சிறிய செயல்கள் செய்பவர்களைப் பார்த்து மனிதன் சிரிக்கின்றான். ஆனால், அவர்களைப் பார்த்து இறைவன் சிரிக்கின்றான்.
* நாம் பலவீனமாக இருக்கும்போது தான் பலாத்காரத்தைப் பற்றிச் சிந்திக்கிறோம்.
* வெயில் வேறு நிழல் வேறு அல்ல. வெயிலுக்கு ஏற்பட்ட தடையே நிழலாக பூமியில் விழுகிறது. நிழலுக்கு வடிவம் உண்டு. ஆனால், வெயிலுக்கு வடிவம் இல்லை. இவ்வாறே கடவுளும் உயிர்களும் உலகில் இருக்கின்றன. தடை நீங்கியவுடன் உயிர்கள் கடவுளில் இரண்டறக் கலந்து விடுகின்றன.
* சத்தியமே வெல்லும் என்று உபநிஷதம் உறுதியாகக் கூறுகிறது. சத்தியம் உண்மையைச் சொல்வது என்பது மட்டுமல்ல. நமக்கு நாமே உண்மையானவர்களாக மனம்,மொழி, மெய்களால் தூய்மையுடன் நடப்பதாகும். சத்தியத்தை லட்சியமாகக் கொண்டால் நம்மை நாமே உணரலாம். தலைநிமிர்ந்து நடக்கலாம்.
* துக்கப்படுவதால் எந்தப் பிரச்னையும் தீரப்போவதில்லை. அறிவுப்பூர்வமாக அணுகினால் ஒழிய நிம்மதி பெற முடியாது. பிரச்னைக்கான மூலகாரணத்தை அறிந்து வேரோடு களைய முற்படவேண்டும்.
* வாழ்வில் துன்ப அனுபவங்களே வேண்டாம் என்று எண்ணுவது மூடத்தனம். துன்பத்தை அனுபவித்தவர் களே மட்டுமே இன்பத்தின் அருமையையும் தெரிந்து கொள்ள முடியும் என்ற உண்மையை உணர்தல் வேண்டும்.
* ஆண்டவனிடம் பூரண நம்பிக்கை இல்லாவிட்டால், நம் சொந்த வாழ்விலும் சரி, சமுதாய வாழ்விலும் சரி நாம் ஒருநாளும் முன்னேற்றம் காண முடியாது.
* மனிதர்கள் அநீதி வழியிலும், குறுக்குவழியிலும் பொருள் தேடுவதிலும், ஒருவரை ஒருவர் பின்னுக்குத் தள்ளி முன்னேற்றம் பெறுவதிலும் கருத்தைச் செலுத்துகிறார்கள். ஆனால், வாழ்வின் ஜீவநாடி நீதியே அன்றி, அநீதியன்று.
* தவறு செய்வது மனித இயற்கை. அதைத் திருத்திக் கொள்ள முயலவேண்டும். இதனால், நமக்கு எந்த அவமானமும் இல்லை. தவறைச் சுட்டிக்காட்டினால் அதை குறையாக எடுத்துக் கொள்வதும், பகையுணர்வு கொள்வதும் நாகரீகமான செயல் அல்ல.
* ஒரு விஷயத்தைக் கவுரவித்தால் ஒழிய அந்த விஷயத்தின் உண்மை நிலை நமக்கு புரிவதில்லை.