ADDED : ஆக 11, 2017 09:28 AM

மகான் நாராயண தீர்த்தருக்கு கிருஷ்ணராக காட்சியளித்த பெருமாள் தஞ்சாவூர் அருகிலுள்ள வரகூரில் கோயில் கொண்டிருக்கிறார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இங்கு ஆக.16ல் ருக்மணி கல்யாணம் நடக்கிறது.
தல வரலாறு: நாராயணதீர்த்தர் என்னும் மகான் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். பல தலங்களையும் வழிபட்ட அவர் நடுக்காவேரி என்னும் இடத்திலுள்ள விநாயகர் கோயிலில் தங்கினார். கனவில் தோன்றிய பெருமாள் ''நாளை காலை எழுந்ததும் யாரை காண்கிறாயோ அவரை பின் தொடர்ந்து செல். வயிற்றுவலி குணமாகும்'' என அருள்புரிந்தார். காலையில் கண் விழித்ததும் ஒரு வெள்ளை பன்றி(வராகம்) கண்ணில் பட்டது. தீர்த்தரும் பின்தொடரவே, அது பூபதிராஜபுரம் லட்சுமி நாராயணர் கோயிலுக்குள் சென்று மறைந்தது. அவரும் அங்கிருந்த பெருமாளை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். வராக வடிவில் பெருமாள் வந்த தலம் என்பதால் 'வரகூர்' என அழைக்கப்பட்டது. இக்கோயில் முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்டது.
கிருஷ்ணலீலா: நாராயணதீர்த்தர் வரகூரில் தங்கியிருந்த காலத்தில், பெருமாள் கிருஷ்ணராக காட்சியளித்தார். அவருடன் சத்தியபாமாவும், ருக்மணியும் வந்திருந்தனர். அப்போது பாமா தீர்த்தரிடம் ''கிருஷ்ணாவதாரத்தில் கோபியருடன் நடத்திய திருவிளையாடலை பாடுங்கள்'' என வேண்டுகோள் விடுத்தார். தீர்த்தரும் மகிழ்ச்சியுடன் 'ஸ்ரீகிருஷ்ணலீலா தரங்கிணி' என்னும் பாடலை பாடினார்.
மூலிகை பிரசாதம்: வரகூரில் மூலவர் லட்சுமிநாராயணர். உற்ஸவர் வெங்கடேசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ளார். உற்ஸவரின் பெயரே கோயிலின் பெயராக விளங்குகிறது. பரிவார மூர்த்திகளுக்கு சன்னதி இங்கில்லை. துளசி, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், கிராம்பு, ஜாதிக்காய் கலந்த பொடி பெருமாளுக்கு படைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை சாப்பிட நீண்டநாள் நோயும் விலகும்.
ருக்மணி கல்யாணம்: கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அப்போது 'கிருஷ்ணலீலா தரங்கிணி' பாடல்களை பாடுவர்.
வேண்டுதல் வைத்து குழந்தை வரம் கிடைத்தவர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபடுவர். செல்வம் பெருக, பெருமாளின் கையிலுள்ள வெள்ளிக்
குடத்தில் வெண்ணெய் நிரப்புகின்றனர்.
ஆக.15ல் உறியடி நிகழ்ச்சி, ஆக.16ல் ருக்மணி கல்யாணம் நடக்கிறது.
எப்படி செல்வது: தஞ்சாவூர்- திருவையாறு சாலையில் 10 கி.மீ தூரத்தில் கண்டியூர். அங்கிருந்து நடுக்காவேரி சாலையில் 13 கி.மீ.,
விசேஷநாட்கள்: கிருஷ்ணஜெயந்தி, புரட்டாசி சனிவாரம்
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 04362 - 280 392, 99657 92988

